Mar 06, 2021 10:09 AM

’மிருகா’ விமர்சனம்

8115393a3b1c567d5e305f89adc24678.jpg

Casting : Srikanth, Rai Lakshmi, Naira, Vaishnavi Chandran, Thavitha

Directed By : J.Parthiban

Music By : Arul Dev

Produced By : Jaguar Studios - B.Vinod Jain

 

பணக்கார விதவை பெண்களை திட்டம் போட்டு திருமணம் செய்யும் ஸ்ரீகாந்த், சில மாத வாழ்க்கைக்குப் பிறகு அவர்களை கொலை செய்துவிட்டு பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆவதை தொழிலாக செய்து வருகிறார். இந்தியாவில் பல மாநிலங்களில் கைவரிசை காட்டும் ஸ்ரீகாந்த், ஊட்டியின் மிகப்பெரிய பணக்கார விதவையான ராய் லட்சுமியிடமும் தனது கைவரிசையை காட்ட திட்டம் போட, அவருடைய திட்டம் பலித்ததா இல்லையா, என்பதை சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார்கள்.

 

ஹீரோவாக நடித்தவர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் தற்போதைய தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்தும் அப்படி ஒரு அதிரடி அவதாரம் எடுத்திருக்கிறார். தனது அமைதியான நடிப்பின் மூலம் கொடூர வில்லத்தனத்தை வெளிப்படுத்த முயற்சித்திருக்கும் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, நைரா, வைஷ்ணவி சந்திரன், தவிதா என படத்தில் வரும் அனைத்து நடிகைகளுடனும் நெருக்கம் காட்டி நடித்திருக்கிறார். வில்லனாக நடித்தாலும் வில்லங்கமான காட்சிகளில் ஸ்ரீகாந்தின் வீரியமான நடிப்பு படத்திற்கும் பலம் சேர்க்கிறது. 

 

பணக்கார விதவை வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் ராய் லட்சுமி, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருப்பதோடு, காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையிலும் நடித்திருக்கிறார்.

 

கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்திருக்கும் எம்.வி.பன்னீர் செல்வம், கோவா, ஊட்டி போன்ற அழகான பகுதிகளை கூடுதல் அழகோடு காட்சிப்படுத்தியிருப்பதோடு, புலி இடம்பெறும் காட்சிகளில் ரொம்ப அதிகமாகவே உழைத்திருக்கிறார்.

 

அருள்தேவின் பின்னணி இசையில் புலியின் உறுமலும், ஸ்ரீகாந்தின் கொடூரமும் பதற வைக்கிறது. 

 

மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத்தன்மையை வெளிக்காட்டுவதற்காக, நிஜ மிருகத்தையும் கதாப்பாத்திரமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஜே.பார்த்திபன், இரண்டையும் ஒன்றாக காட்டும் காட்சிகளில் கூடுதல் படபடப்பு.

 

ஸ்ரீகாந்த் தான் வில்லன் என்பதையும், அவர் தான் கொடூர கொலைகளை செய்கிறார் என்பதையும், படத்தின் முதல் காட்சியிலேயே காண்பிக்கும் இயக்குநர், ஸ்ரீகாந்த் எப்படி போலீசில் சிக்கப் போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பை வைத்து முழு படத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்துவதோடு, இடையில் சில கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் மூலம் எதிர்பாரத ட்விஸ்ட்டுகள் மூலம் திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்கிறார்.

 

இறுதியில் வில்லனிடமும், விலங்கிடமும் சிக்கிக் கொள்ளும் ராய் லட்சுமி மற்றும் அவரது குடும்பம், எப்படி தப்பிக்க போகிறார்கள், என்பதை உச்சகட்ட பரபரப்போடு சொல்லியிருக்கிறார்.

 

‘மிருகா’ மிரட்சி

 

ரேட்டிங் 3/5