Jul 19, 2022 05:12 AM

’மை டியர் பூதம்’ விமர்சனம்

b8634fdcbf06225a37132f3ca5ec2196.jpg

Casting : Prabhu Deva, Ramya Nambeesan, Ashwanth, Imman Annachi, Suresh Menon

Directed By : N.Ragavan

Music By : D.Imman

Produced By : Ramesh P.Pillai

 

திக்கு வாய் குறைபாட்டால் கஷ்ட்டப்படும் சிறுவன் அஷ்வந்த்,  பல இன்னல்களுக்கு ஆளாகிறார்.  அப்போது அவருக்கு ஒரு பொம்மை கிடைக்கிறது. அதை அவர் உடைக்கும் போது அதில் இருந்து பூதமான பிரபு தேவா வருகிறார். தன்னை விடுதலை செய்த சிறுவனை தனது மாயாஜால வித்தைகள் மூலம் மகிழ்ச்சிப்படுத்தும் பூதம் பிரபு தேவா, பூதலோகத்தில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்கு ஆவலோடு இருக்கிறார். ஆனால், அது நடக்க வேண்டும் என்றால் அஷ்வந்த் ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும். பேசுவதற்கே சிரமப்படும் அஷ்வந்தால் அந்த மந்திரத்தை சொல்ல முடிந்ததா? பிரபு தேவா தனது பூதலோகத்திற்கு சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

 

பூதமாக நடித்திருக்கும் பிரபு தேவாவின் கெட்டப்பும் அதில் அவர் வெளிப்படுத்திய  நடிப்பும் சிறப்பு. சிறுவனுக்கு ஈடு கொடுத்து பிரபு தேவா வெளிப்படுத்திய குறும்புத்தனம், தனது மகனை மீண்டும் பார்க்க துடிக்கும் ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் என அனைத்து இடங்களிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

 

திருநாவுக்கரசு என்ற கதாப்பாத்திரத்தில் திக்குவாய் குறைபாடுள்ள சிறுவனாக நடித்திருக்கும் அஷ்வந்த், நடிப்பில் அசத்தியிருக்கிறார். திக்குவாய் பிரச்சனையால் சரியாக பேச முடியாமல் அவர் திணறுவதும், அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை கேலி கிண்டல் செய்யும் போது கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் என்று முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, தான் வரும் அனைத்து காட்சிகளையும் ரசிக்கும்படி நடித்திருக்கிறார்.

 

சிறுவன் அஷ்வந்தின் சக பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள், சிறுமி என அனைவரும் வயதை மிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சில காட்சிகளில் மட்டுமே வரும் இமான் அண்ணாச்சி, சுரேஷ் மேனன் ஆகியோரும் கவனம் பெருகிறார்கள்.

 

சிறுவனின் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசனுக்கு குறைவான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் அதில் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்.

 

டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. பிரபு தேவாவை ஆட வைத்திருக்கும் அந்த ஒரு பாடல் நம்மையும் ஆட வைக்கிறது. 

 

செந்தில் குமாரின் ஒளிப்பதிவு கலர் புல்லாகா இருப்பதோடு, கதையோடும் பயணிக்கிறது. 

 

கதை எழுதி இயக்கியிருக்கும் என்.ராகவன், குழந்தைகளுக்கான படம் என்ற பெயரில் பெரியவர்கள் செய்வதை சிறுவர்களை வைத்து செய்திருக்கிறார். பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை, மாணவிக்கும் சிறுவன் அஷ்வந்துக்கும் இடையே ஏற்படும் நட்பு என அனைத்துக் காட்சிகளும் சிறுவர்களுக்கான காட்சிகளாக இல்லாமல், போராடிக்கும் காட்சிகளாகவே இருக்கிறது.

 

ஏற்கனவே வெளியான பூதங்களை மையப்படுத்திய படங்களின் அதே வழியில் பயணித்திருக்கும் இந்த படத்தின் கதையும், காட்சிகளும் அதர பழசாக இருப்பது மிகப்பெரிய ஏமாற்றம். இருந்தாலும், படத்தை கொஞ்சம் ரசிக்க முடிகிறது என்றால் அது சிறுவன் அஷ்வந்தின் அபாரமான நடிப்பும், பிரபு தேவாவின் அமர்க்களமான நடிப்பும் தான் காரணம்.

 

மொத்தத்தில், ‘மை டியர் பூதம்’ சிறுவர்களை குஷிப்படுத்தவில்லை என்றாலும், சிறுவன் அஷ்வந்தின் நடிப்பை கொண்டாட வைக்கும்.

 

ரேட்டிங் 3/5