Aug 27, 2025 03:18 AM

’நறுவீ’ திரைப்பட விமர்சனம்

519615dc54814132a83c9f49765ec152.jpg

Casting : Haris Alag, Vinshu, VJ Pappu, paadini Kumar, Jeeva Ravi, Praveena, Kathey, Muruganandham, Pradheep, Madhan S. Raja, Sarada Nandagopal

Directed By : Subarak Mubarak

Music By : Aswanth

Produced By : A.Alagu Pandiyan

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆண்கள் நுழைந்தால் உயிருடன் திரும்பி வர மாட்டார்கள், என்று சொல்கிறார்கள். இதற்கிடையே அங்கிருக்கும் நிலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, காதல் ஜோடியான விஜே பப்பு - பாடினி குமார் உள்ளிட்ட இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஐந்து பேர் அங்கு செல்கிறார்கள். அவர்கள் தங்கள் பணியை தொடங்கும் போது, அவர்களைச் சுற்றி பல வினோதமான விசயங்கள் நடக்கிறது. அதே சமயம், அந்த குழுவினர் தங்களை அறியாமலேயே ஆண்களுக்கு ஆபத்து விளைக்கும் வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறார்கள், அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பல மர்ம முடிச்சுகளோடு சொல்வது தான் ‘நறுவீ’.

 

நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் அலக், புதுமுகம் என்றாலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். பாடல் காட்சிகளில் நடப்பதையே நடனமாக வெளிப்படுத்தினாலும் அதை ரசிக்கும்படி செய்திருக்கிறார். 

 

விஜே பாபு மற்றும் அவரது காதலியான பாடினி குமார் இருவரும், இயல்பாக நடித்திருப்பதோடு, பல இடங்களில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.

 

ஜீவா ரவி, பிரவீனா, கேதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சாரதா நந்தகோபல் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

 

இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

 

ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன், அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் ஆபத்தையும், அதன் அழகையும் ஒருசேர படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் சுபராக்.எம், இரண்டு வெவ்வேறு கதைகளை நான் லீனர் முறையில் சொல்லி, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். 

 

எழுதி இயக்கியிருக்கும் சுபராக் முபாரக், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில், அமானுஷ்ய விசயத்தை சேர்த்து சுவாரஸ்யமாக சொன்னாலும் அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார். ஆண்களுக்கு ஆபத்தான வனப்பகுதி, ஆராய்ச்சி செய்ய வரும் குழுவின் உள்ள பெண்களை சுற்றி நடக்கும் வினோத சம்பவங்கள்,  அதை தொடர்ந்து தொலைந்த ஒருவரை தேடிய பயணம், என்று படம் முழுவதும் பல சுவாரஸ்யமான விசயங்கள் இருந்தாலும், அவற்றை சரியான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மூலம் சொல்லாததால் படம் சற்று தொய்வடைந்து விடுகிறது.

 

இருப்பினும், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக மட்டும் இன்றி தரமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சுபராக் முபாரக், பழங்குடியின மக்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், ஒரு மனிதருக்கு கிடைக்ககூடிய சராசரி வாழ்க்கை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று சமூக பிரச்சனைகளை பிரச்சாரமாக சொல்லாமல்,  சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருடன் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது கவனம் ஈர்க்கிறது.

 

மொத்தத்தில், ‘நறுவீ’ பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2.8/5