Dec 30, 2022 09:40 AM

’ஓ.எம்.ஜி - ஓ மை கோஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

9a9ba370fefc27639cf546bbca954070.jpg

Casting : Sunny Leone, Sathish, Yogi Babu, Ramesh Thilak, Arjunan, Darsha Gupta, Naan Kadavul Rajendran, Thangadurai, KPY Bala

Directed By : R.Yuvan

Music By : Songs : Javed Riaz - Backround Score : Dharan

Produced By : K.Sasikumar and D.Veerasakthi

 

நாயகன் சதீஷும், தர்ஷா குபதாவும் காதலிக்கிறார்கள். இதற்கிடையே தர்ஷா குப்தாவுக்கு பேய் பிடித்து விட, அந்த பேய் சதீஷையும், ரமேஷ் திலக்கையும் பயமுறுத்துவதோடு, தன்னை அனகொண்டாபுரம் என்ற ஊருக்கு அழைத்து செல்ல சொல்கிறது.

 

அதன்படி, சதீஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்தா, அர்ஜுனன் ஆகியோர் அனகொண்டாபுரத்திற்கு செல்ல, அங்கு பாழடைந்த கோட்டை ஒன்று இருக்கிறது. அதில் இருக்கும் ராணி சன்னி லியோனின் ஆவியை, தர்ஷா குப்தா எழுப்ப, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை, ரசிகர்கள் சபலமடையும் விதத்தில் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ஓ மை கோஸ்ட்’.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் சன்னி லியோனுக்காக எழுதப்பட்ட கதைபோல் இருந்தாலும், அவரை பேயாகவும், அழகியாகவும் முழுமையாக பயன்படுத்தவில்லை. மாயசேனா என்ற வேடத்தில் ராணியாக நடித்திருக்கும் சன்னி லியோன், பாடல் காட்சிகளில் கவர்ச்சி உடை அணிந்து உருண்டு புரள்கிறார். சில நேரங்களில் வாள் சண்டை போடுகிறார். இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை சரியாக செய்யாமல் ஏமாற்றம் அளிக்கிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், காமெடி வேடத்தில் நடித்தாலே சிரிப்பு வராது, இதில் கதையின் நாயகனாக நடித்து கடுப்பேற்றுவதோடு, ஆட்டம் பாட்டம் என்று ஹீரோவுக்கான அனைத்தும் இருந்தும் எதிலும் ஒட்டாமல் தனித்து நிற்கிறார்.

 

யோகி பாபு ஒரு சில காட்சிகளில் வந்து தனது வழக்கமான பாணியில் வசனங்கள் பேசியிருந்தாலும், சில இடங்களில் மட்டும் சிரிக்க முடிகிறது.

 

சதீஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் தர்ஷா குப்தாவுக்கு குறைவான வேலை தான். அந்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

ரமேஷ் திலக், அர்ஜூனன், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், தங்கதுரை, பாலா என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் வழக்கமான தங்களது அக்மார்க் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தீபக் டி.மேனன் காட்சிகளை பிரம்மாண்டமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் படமாக்கியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் ஜாவேட் ரியாஸின் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையமைத்திருக்கும் தரண் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

 

காமெடி பேய் படத்தை கலர்புல்லாகவும், கவர்ச்சியாகவும் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஆர்.யுவன். ஆனால், வசனத்தில் இருக்கும் கவர்ச்சி காட்சிகளில் இல்லாதது படத்திற்கு பலவீனம்.

 

சன்னி லியோனை ஸ்டைலாக காட்டியிருக்கும் இயக்குநர், அவரை கதைக்கு ஏற்ப சரியாக பயன்படுத்தாமல் போனது படத்தை தொய்வடைய செய்கிறது. அதே சமயம், சன்னி லியோனுக்கு கொடுத்த முக்கியத்துவம் மற்ற கதாபாத்திரங்களுக்கு இல்லாததும் படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது.

 

காமெடி மற்றும் கவர்ச்சி என இரண்டையும் பலமாக நினைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஆர்.யுவன், அதை அழுத்தமான கதையோடு சேர்த்து பயணிக்க வைக்காமல் திணித்திருக்கிறார்.

 

கிராபிக்ஸ் காட்சிகள், இசை, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப பணிகள் நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் இருப்பது படத்திற்கு பிளஸாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது.

 

மொத்தத்தில், ‘ஓ மை கோஸ்ட்’ வேஸ்ட்

 

ரேட்டிங் 2.5/5