Nov 26, 2025 07:55 PM

’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ திரைப்பட விமர்சனம்

e50b557527dc99d1ae6a20c972521326.jpg

Casting : "Parotta" Murugesan, Karthikesan, Chithra Natarajan, Murugan, Vijay Senapathy, Vijayan, Vikadan

Directed By : Sugavanam

Music By : Natarajan Sankaran

Produced By : K.Karuppasamy

 

கதையின் நாயகனான பரோட்டா முருகேசன், தனது மகனுக்காக காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். அவரது வேண்டுதல் நிறைவேறி விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்க்கிறார். கிடாவும், மகனும் வளர்ந்து நிற்க, கிடாயை ஒண்டிமுனிக்கு காணிக்கையாக்கும் வாய்ப்பு அவருக்கு  கிடைக்காமல் போகிறது. காரணம், அந்த ஊரில் இருக்கும் இரண்டு பன்னாடிகள் தங்களுக்கு இடையே இருக்கும் மோதலால், கோவில் நிகழ்வுக்கு வராமல் இருப்பது தான்.

 

இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் நிகழ்வில் பங்கேற்க வைக்க பரோட்டா முருகேசன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையே, பரோட்டா முருகேசனின் மகள் சித்ரா பேசிய நகை போடாததால் மாமியார் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார். மறுபக்கம், அவரது மகன் தன் காதலுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்கு ஆட்டு கிடாயை விற்க முடிவு செய்கிறார்.

 

இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில், பரோட்டா முருகேசன், தனது வேண்டுதலை நிறைவேற்றிய காவல் தெய்வத்திற்கு தனது ஆட்டு கிடாயை பலி கொடுத்தாரா? இல்லையா ? , என்பதை ஒரு நிலத்தின் வாழ்வியலாக சொல்வது தான் ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’.

 

நல்லபாடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரோட்டா முருகேசன், ஏழை விவசாயியாக எதார்த்தமாக நடித்திருக்கிறார். செருப்பு கூட அணியாமல் காடு, மேடுகளில் நடமாடி இஷ்ட்டப்பட்டு கஷ்ட்டப்பட்டு நடித்து தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் பரோட்ட முருகேசனுக்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அங்கீகாரத்தோடு, பல விருதுகளையும் பெற்றுத்தரும்.

 

பெரிய பன்னாடியாக நடித்திருக்கும் கார்த்திகேசன், சிறிய பன்னாடியாக நடித்திருக்கும் முருகன் இருவரும் நடிப்பில் அசத்தியிருப்பதோடு, தங்களது கதாபாத்திரங்களின் மனநிலையை நடிப்பு மூலம் அபாரமாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

 

பரோட்டா முருகேசனின் மகனாக நடித்திருக்கும் விஜயன், மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக நடித்திருக்கும் விஜய் சேனாதிபதி, பேரனாக நடித்திருக்கும் சிறுவன், விகடன்,  என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

 

பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை மூலமாகவே தன்னை தனித்து காட்டி வியக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன்.

 

ஒளிப்பதிவாளர் விமல், தனது கேமரா மூலம் கதைக் களத்தையும், கதை மாந்தர்களையும், அவர்களது வாழ்வியலையும் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

 

சாதாரண கதையாக இருந்தாலும், அதை சுவாரஸ்யமாக சொல்லும் இயக்குநரின் திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் குரசோவா.

 

எழுதி இயக்கியிருக்கும் சுகவனம், ஒரு சாதாரண கதைக்கருவை, திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான திரைப்படமாக மட்டும் இன்றி, ஒரு மண்ணின் வாழ்வியலை சிறப்பான படைப்பாகவும் கொண்டு வந்திருக்கிறார்.

 

கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என படம் முழுவதும் பாராட்டு பெறும் இயக்குநர் சுகவனம்,  எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் மூலம் வியக்க வைத்து விட்டார்.

 

மொத்தத்தில், ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ மனதில் ஒட்டிக்கொள்ளும்.

 

ரேட்டிங் 3.8/5