‘அதர்ஸ்’ திரைப்பட விமர்சனம்
Casting : Aditya Madhavan, Gowri Kisha, Anju Kuriyan, Nandu Jagan, Munishkanth, R.Sundarajan, Mala Parvathy
Directed By : Abir Hariharan
Music By : Ghibran
Produced By : Grand Pictures
வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி, வெடித்து சிதறுகிறது. அந்த விபத்தை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான நாயகன் ஆதித்ய மாதவனுக்கு, வேனில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் பற்றிய சில தகவல்கள் தெரிய வருகிறது. அந்த தகவல்களை வைத்து தொடர்ந்து மேற்கொள்ளும் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைப்பதோடு, மருத்துவத்துறை மோசடி பற்றியும் தெரிய வருகிறது. அது என்ன ? , அந்த மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்பதை நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் ? என்பதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வது தான் ‘அதர்ஸ்’.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், காவல்துறை அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். காக்கி உடையில் கம்பீரமாக இருந்தாலும், அவர் முகத்தில் குழந்தை தனமும் தெரிகிறது. காதலை விட கடமையே முக்கியம் என்று தனது பணியில் பரபரப்பாக இருக்கும் ஆதித்யா மாதவன், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கெளரி கிஷன், மருத்துவர் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனுக்கு இணையான முக்கியத்துவத்தோடு அவரது கதாபாத்திரம் பயணிக்கிறது. காதல், டூயட் என கமர்ஷியல் நாயகியாக மட்டும் இன்றி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாகவும் கெளரி கிஷன் கவனம் ஈர்க்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அஞ்சு குரியன், நண்டு ஜெகன், முனீஷ்காந்த், ஆர்.சுந்தரராஜன், மாலா பார்வதி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிசென்று இருக்கிறது. கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் அபின் ஹரிஹரன், மருத்துவத்துறையில் நடக்கும் குற்ற செயலை மையமாக வைத்துக் கொண்டு பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
பார்வையற்றவர்கள் கடத்தப்படுவது, அவர்களை வைத்து நடக்கும் குற்ற செயல் ஆகியவை படத்தை எதிர்பார்ப்புடன் பார்க்க வைப்பதோடு, பார்வையற்றவர்களை வைத்து என்ன செய்கிறார்கள் ? என்ற கேள்விக்கான பதிலை பல திருப்பங்களுடன், படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை பார்வையாளர்கள் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் அபின் ஹரிஹரன்.
மொத்தத்தில், ‘அதர்ஸ்’ அப்ளாஷ் பெறும்.
ரேட்டிங் 3.2/5

