Jan 12, 2022 05:47 AM

’பூச்சாண்டி’ விமர்சனம்

abba31bfcf51150bdb42ac066702b1db.jpg

Casting : Mirchi Ramana, Dinesh Sarathi Krishnan, Logan Nathan, Ganesan Manoharan, Hamsini Perumal

Directed By : JK Wicky

Music By : Dustin Riduan Shah

Produced By : Trium Studio - S Andy

 

ஆவிகள் பற்றியும், அதைச்சார்ந்த உண்மை சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்து கட்டுரை எழுதி வரும் நாயகன் மிர்ச்சி ரமணா, மலேசியாவில் நடந்த அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்காக மலேசியா செல்கிறார். அங்கு மூன்று நண்பர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில் நடந்த அமானுஷ்ய சம்பவம் பற்றி ரமணா தெரிந்துக்கொள்கிறார்.

 

நண்பர்களான தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பொழுதுபோக்கிற்காக இரவில் ஆவிகளிடம் பேசும் முயற்சியில் மூன்று பேரும் ஈடுபடுகிறார்கள். அப்போது மல்லிகா என்ற ஆவி அவர்களிடம் பேச தொடங்குகிறது. தான் எப்படி இறந்தேன் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளும் மல்லிகா ஆவி, திடீரென்று மூவரில் ஒருவரை பயமுறுத்துகிறது. இதனால், அந்த ஆவியிடம் பேசுவதை மூன்று பேரும் நிறுத்துவிட, திடீரென்று மூவரில் ஒருவர் இறந்து விடுகிறார். இந்த கதையை கேட்கும் ரமணா, மூன்று பேரில் ஒருவரை மட்டும் அந்த ஆவி ஏன் கொலை செய்தது, என்பதை அறிந்துக்கொள்வதற்காக மல்லிகாவுக்கு தெரிந்த நபரை தேடிச்செல்கிறார்கள். ஆனால், ஆவியாக மூன்று நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த மல்லிகாவே அந்த வீட்டில் உயிருடன் இருக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை யூகிக்க முடியாத திருப்புமுனைகளோடும், எதிர்ப்பார்க்காத கதைக்களத்தோடும், விறுவிறுப்பான திகில் படமாக சொல்வது தான் ‘பூச்சாண்டி’.

 

தமிழரின் சரித்திர பெருமைகளில் இருக்கும் ஆன்மீகத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பூச்சாண்டி என்பதற்கான உண்மையான அர்த்தத்தை விவரிப்பதோடு, தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் திகில் கதையை, சரித்திரத்தோடு ஒப்பிட்டு அமைத்திருக்கும் திகில் சம்பவங்கள் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.

 

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணா, வசன உச்சரிப்பின் மூலம் கவர்கிறார். அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை கேட்கும் போது, அதற்கு கொடுக்கும் ரியாக்‌ஷன் மற்றும் மல்லிகா ஆவி பற்றிய ரகசியத்தை தெரிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு அவரே பிரச்சனையில் சிக்கிக்கொள்வது என படம் முழுவதும் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

Poochandi

 

மலேசிய நடிகர்களான தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூன்று பேரும் படத்தின் முதல் பாதியை தங்கள் தோளில் சுமந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், சிறு சிறு மோதல்கள், ஆவியுடனான அனுபவம் என்று அனைதுக்காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் லோகன் நாதன், உண்மையிலேயே மாற்றுத்திறனாளியா? என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் நடித்திருப்பதோடு, இறுதிக்காட்சியில் அவர் கொடுக்கும் அதிர்ச்சியும், தனது நிலை குறித்து பேசும் வசனங்களும் கண்கலங்க வைத்துவிடுகிறது.

 

மல்லிகா வேடத்தில் நடித்திருக்கும் ஹம்சினி பெருமாள், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவரது சாயலில் இருக்கிறார். அவர் யார்? என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் சட்டென்று நினைவு வரும். நடிப்பிலும் திறமையை காட்டியிருக்கும் ஹம்சினி, தமிழ் சினிமாவில் நுழைந்தால் நல்ல நடிகையாக ஒரு ரவுண்ட் வருவார்.

 

ஒளிப்பதிவாளர் அசல்இசம் பின் முகமது அலி, கிராபிக்ஸ் உதவி இல்லாமலேயே பல இடங்களில் பயமுறுத்துகிறார். திகில் படத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையில் மிரட்டியிருக்கும் இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷா, எந்த இடங்களில் இசை தேவை, என்பதை மிகச்சரியாக கணித்து பணியாற்றியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

Poochandri Review

 

வித்தியாசமான திகில் திரைப்பம் என்று பலர் சொல்வதுண்டு ஆனால் படத்தை பார்த்தால் அப்படி இருக்காது. ஆனால், இந்த படம் உண்மையிலேயே வித்தியாசமான முயற்சியில் உருவான ஒரு திகில் படம். இப்படி ஒரு களத்தில் திகில் கதையை இதுவரை யாரும் சொன்னதில்லை. ராஜேந்திர சோழனின் வரலாற்றுப் பின்னணியில் ஒரு திகில் கதை. அதை தற்போதைய காலக்கட்டத்தோடு பயணிக்க வைத்து, ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே.விக்கி.

 

முதல் பாதி படம் முழுவதும் மூன்று கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாக காட்சிகளை நகர்த்தி செல்லும் இயக்குநர் ஜே.கே.விக்கி, எந்த ஒரு இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில், பல திருப்பங்களோடு திரைக்கதையை நகர்த்தி செல்கிறார். ஒரு முடிச்சை அவிழ்ப்பதோடு, அங்கிருந்து மற்றொரு முடிச்சுடன் படம் நகர்வது போல காட்சிகளை வடிவமைத்திருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது.

 

Poochandi

 

மலேசியாவில் நடக்கும் கதை, இறுதியில் மதுரைக்கு பயணமாவது போல் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் ஜே.கே.விக்கி,  இரண்டாம் பாகத்தில் இந்த கதையை எப்படி சொல்லப்போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பை நம் மனதில் ஏற்படுத்தி விடுகிறார்.

 

மொத்தத்தில், ‘பூச்சாண்டி’ ரசிகர்களை கவரும் புதுவிதமான திகில் படமாக மட்டும் இன்றி, அனைவரும் பாராட்டும் புதிய முயற்சியாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 4/5

 

குறிப்பு : ஜனவரி 26 ஆம் தேதி மலேசியாவில் வெளியாக இருக்கும் இப்படம், விரைவில் தமிழகத்திலும் வெளியாக உள்ளது.