’ரெட் பிளவர்’ திரைப்பட விமர்சனம்

Casting : Vignesh, Manisha Jashnani, Almas Adham, Shah, Nassar, YG Mahendran, Thalaivasal Vijay, John Vijay, Ajay Rathnam, TM Karthik, Suresh Menon, Nizhalgal Ravi, Yog Jepee, Leela Samson, Mohanram
Directed By : Andrew Pandian
Music By : Santhosh Ram
Produced By : K Manickam
உலகில் தற்போது நடைபெற்று வரும் சில நாடுகளுக்கு இடையிலான ஆயுத யுத்தம், பொருளாதார போர் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, சுமார் 20 வருடங்கள் கழித்து, அதாவது 2047 ஆம் ஆண்டில் இந்த உலகம் எப்படி இருக்கும், என்ற கற்பனையை பிரமாண்டமான காட்சிகள் மூலம் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ரெட் பிளவர்’.
2047 ஆம் ஆண்டு கதை நடக்கிறது. மூன்றாவது உலகப் போர் முடிவடைந்து, உலக நாடுகள் பலவற்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மால்கம் என்ற ராணுவ படை ஒன்று, இந்தியாவையும் குறிவைக்கிறது. தனது விதிகளுக்கு இந்தியாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உலகம் முழுவதும் உள்ள இந்திய பெண்களை சித்தரவதை செய்து கொலை செய்வது, சென்னை உள்ளிட்ட இந்திய பகுதிகளில் தனது ஏஜெண்ட்கள் மூலம் பல நாச வேலைகளை செய்வது என்று இந்தியாவை நோக்கி வரும் அந்த படையையும், அதன் செயல்பாடுகளையும் முறியடிப்பதற்காக இந்திய உளவுத்துறை அதிகாரியான நாயகன் விக்னேஷ் மூலம் இந்திய அரசு ஆபரேஷன் ‘ரெட் பிளவர்’-ரை கையில் எடுக்கிறது. ஆபரேஷன் ரெட் பிளவர் என்றால் என்ன ?, ஆபரேஷன் ரெட் பிளவருக்கு தலைமையேற்கும் விக்னேஷ், அதன் மூலம் இந்தியாவை எத்தகைய ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார், என்பதை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் சொல்வதே ‘ரெட் பிளவர்’ படத்தின் கதை.
நாயகன் மற்றும் வில்லன் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விக்னேஷ், மாறுபட்ட வேடங்களில் ஸ்டைலிஷ் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார். வில்லனாக இந்தியாவை அழிக்க நினைக்கும் சக்திகளுடன் கைகோர்த்து பல நாசவேலைகளை செய்பவர், ஹீரோவாக இந்தியாவை காப்பாற்ற பாடுபடுகிறார். வில்லனாக பல பெண்களை வேட்டையாடுபவர், ஹீரோவாக பெண்களை காப்பாற்றுகிறார். இப்படி, வில்லன், ஹீரோ என்று ஒரே விசயத்தை இரண்டு முறை வெவ்வேறு கோணங்களில் செய்யும் விக்னேஷ், படம் முழுவதும் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
நாயகியாக நடித்திருக்கும் மணிஷா ஜெஷ்னானி, ஆடை குறைப்பின் எல்லையை கடந்து கவர்ச்சியில் கிரங்கடிக்கிறார். ஹீரோ விக்னேஷின் காதலி என்றாலும், வில்லன் விக்னேஷும் கற்பனையில் அவருடன் ஏகபோகமாக வாழ்கிறார். அம்மணி அனைத்துக்கும் சம்மதம் என்று நடித்திருப்பதோடு, சில காட்சிகளில் அடிபட்டு மிதிப்பட்டு கஷ்ட்டப்பட்டும் நடித்திருக்கிறார்.
இரண்டாவது கதாநாயகிகளாக நடித்திருக்கும் அல்மஸ் அதம், ஷாம் ஆகியோர் மட்டும் அல்ல படத்தில் வரும் அத்தனை பெண்களும் அறை குறை மேலாடையுடன் வலம் வருகிறார்கள். அப்படி அவர்கள் தங்கள் உடல் அழகை மறைப்பது போல் உடை அணிந்திருந்தாலும், அதை கிழித்து அவர்களை கவர்ச்சியாக காட்டுவதற்காகவே சில கதாபாத்திரங்களை வடிவமைத்து படம் முழுவதும் உலவவிட்டிருக்கிறார்கள்.
இந்திய பிரதமராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், ராணுவ தளபதியாக நடித்திருக்கும் நாசர், இந்திய ஜனாதிபதியாக நடித்திருக்கும் நடிகை, உலகத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் லூசிபராக நடித்திருக்கும் தலைவாசல் விஜய் ஆகியோரது மாறுபட்ட கதாபாத்திரமும், அவர்களது அனுபவமான நடிப்பும் படத்திற்கு பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
ஜான் விஜய், அஜய் ரத்னம், டி.எம்.கார்த்திக், சுரேஷ் மேனன், நிழல்கல் ரவி, யோக் ஜேபி, லீலா சாம்சன், மோகன்ராம் உள்ளிட்ட படத்தில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒன்று, இரண்டு காட்சிகளில் மட்டுமே தலை காட்டுவதால் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.
ஒளிப்பதிவாளர் தேவ சூர்யா, முழுக்க முழுக்க கிரீன் மேட் ஸ்டுடியோவுக்குள் முழு படத்தையும் காட்சிப்படுத்தியிருப்பார் போலிருக்கிறது. சில காட்சிகளை மட்டுமே லைவ் லொக்கேஷன்களில் படமாக்கியிருந்தாலும், அவற்றையும் கிரே வண்ணத்தின் மூலம், கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஒத்துப்போவது போல் மாற்றியிருக்கிறார்கள். படத்தில் அவர் பயன்படுத்தியிருக்கும் கிரே மற்றும் கருப்பு வண்ணங்கள், கிராபிக்ஸ் காட்சிகளில் இருக்கும் குறைபாடுகளை மறைப்பதற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் ராம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், ஆக்ஷன் காட்சிகளுக்கான பீஜியம் கவர்கிறது. படம் முழுவதும் குத்துவதும், சுடுவதும், கத்துவதும் என்று இருப்பதால் பின்னணி இசை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
படத்தொகுப்பாளர் அரவிந்தன் ஆறுமுகம் கடினமாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. படமாக்கப்பட்ட காட்சிகளை விட, ரெடிமேட் காட்சிகளை சரியாக தொகுத்து, அதை ஒரு படமாக உருவாக்கும் சவால் மிக்க பணியை சற்று சொதப்பலாக செய்தாலும், இயக்குநர் சொல்ல வரும் கதையை புரியும்படி சொல்லியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ பாண்டியன், ஹாலிவுட் படத்தின் பாணியில் ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் படத்தை க்ரீன் மேட் மூலம் கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட கதைக்கருவில் தொலைநோக்கு பார்வை இருந்தாலும், அதை காட்சி மொழியில் சொன்ன விதம் கொலை நோக்கு பார்வையாக இருக்கிறது.
படத்தில் வரும் பெண்கள் அனைவரையும் (இந்திய ஜனாதிபதி கதாபாத்திரத்தை தவிர்த்து) ஆபாசமாக மட்டுமே காட்ட வேண்டும் என்ற பார்வையில் அத்தனை காட்சிகளிலும் பெண்களை சீரழித்திருப்பவர், மறுபக்கம் சுட்டுக்கொலை, குத்திக்கொலை என்று கொலை..கொலை...என்றே காட்சிகளை நகர்த்தி செல்வதை தவிர்த்துவிட்டு, எதிர்காலத்தில் இப்படியும் நடக்கும் என்ற கற்பனையை அழுத்தமாகவும், தெளிவாகவும் சொல்லியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக ரெட் பிளவரை சித்தரித்து, அதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான பிரச்சனைகளை தீர்ப்பது போன்ற இயக்குநரின் கற்பனையும், அதை கிராபிக்ஸ் மூலம் காட்சிப்படுத்திய விதமும் பாராட்டும்படியும், வியக்க கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், அதை சரியான முறையில் சொல்லியிருந்தால் படம் நிச்சயம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கும்.
மொத்தத்தில், ‘ரெட் பிளவர்’ வன்மத்திலும், வன்முறையிலும் மூழ்கடிக்கும்.
ரேட்டிங் 2.8/5