’ரேகை’ இணையத் தொடர் விமர்சனம்
Casting : Bala Hasan, Pavithra Janani, Sandhiya, Vinodhini Vaidynathan, Vinodhini Vaidynathan, Anjali Rao,E.Indrajith, M. Sriram, Poobalam Pragathesh
Directed By : M Dhinakaran
Music By : RS Raj Pradap
Produced By : S. Singaravelan
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்தாலும் அவர்களது கைவிரல் ரேகை வெவ்வேறாக இருக்கும். அப்படி இருக்க, ஒரே கைவிரல் ரேகை நான்கு பேருக்கு பொறுந்துகிறது. அப்படி இருக்க வாய்ப்பில்லையே, என்ற சந்தேகத்தில் அந்த ரேகை தொடர்பாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான நாயகன் பாலா ஹாசன், விசாரணை மேற்கொள்கிறார். சம்மந்தப்பட்ட நான்கு பேரும் இறந்த தகவல் கிடைக்கிறது. நான்கு பேரும் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்தாலும், பாலா ஹாசன் அதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கிறது, என்பதை உணர்ந்து விசாரணையில் தீவிரம் காட்டும் போது, நான்கு பேரும் கொலை செய்யப்பட்டிருக்கும் உண்மை தெரிய வருகிறது.
எந்தவித தடயங்களும் இல்லாமல், குறிப்பாக பிரேத பரிசோதனையில் கூட எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் கொலை செய்யப்பட்டிருக்கும் இந்த நான்கு பேர் யார் ?, அவர்களை கொன்றது யார்? எதற்காக ?, இவர்களின் கைவிரல் ரேகை ஒரே மாதிரியாக இருப்பது எப்படி ? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அதிர்ச்சியூட்டும் பின்னணியோடு சொல்வதே ‘ரேகை’.
’விடுதலை’ திரைப்படத்தில் கடைநிலை காவலராக நடித்து கவனம் ஈர்த்த பாலா ஹாசன், இதில் கதையின் நாயகனாக சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். அளவான நடிப்பு, கூர்மையான பார்வை, கம்பீரமான உடல் மொழி, தெளிவான செயல்திறன் என ஒரு புலனாய்வு அதிகாரிக்கு தேவையான அனைத்து தகுதிகளுடனும் வலம் வந்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவித்ரா ஜனனி தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். இவருக்கும், பாலாவுக்கும் இடையிலான காதல் கட்டாயத்தில் வைக்கப்பட்டது போல் இருக்கிறதே தவிர, திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் இல்லை என்பதை குறை.
வினோதினி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். பரிச்சயம் இல்லாத பல முகங்கள் தொடரில் நடித்திருந்தாலும் அனைவரும் காட்சிகளுக்கும், திரைக்கதைக்கும் உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாபின் பின்னணி இசை புலனாய்வு மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம்.ஹெண்ட்ரி, காட்சிகளை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தி லான் லீனர் என்பதை மறந்து பார்வையாளர்களை தொடருடன் ஒன்றிவிட செய்கிறது.
படத்தொகுப்பாளர் துரை பிரகாஷ், ஒவ்வொரு எப்பிசோட்டிலும் பல மர்ம முடிச்சுகளை போட்டு, அடுத்த எப்பிசோட்டை எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை அடிப்படையாக கொண்டு இத்தொடரை எழுதி இயக்கியிருக்கும் எம்.தினகரன், எதிர்பார்க்காத திருப்பங்களோடு, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய புலனாய்வு திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
6 எப்பிசோட்களையும் ஒன்றாக பார்த்தாலும், நேரம் போனதே தெரியாதவாறு ஒவ்வொரு எப்பிசோட்டிலும் ஒரு சம்பவம், அதன் மூலம் போடப்படும் மர்ம முடிச்சு, அந்த முடிச்சை அவிழ்க்கும் நாயகனின் விசாரணை என்று தொடரை பரபரப்பாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் எம்.தினகரன், கொலை சம்பவங்களை அறிவியலோடு இணைத்து காட்சிகளை வடிவமைத்த விதம் கூடுதல் சிறப்பு.
தொடர் கொலைகள், புலனாய்வு என்று கிரைம் திரில்லர் தொடராக இருந்தாலும், அதிகப்படியான இரத்தம் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, அனைத்து தரப்பினரும் ஒன்றாக பார்க்கும்படியான ஒரு தொடராக கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.தினகரன், வெவ்வேறு சம்பவங்களை ஒன்றினைத்து ஒரு தொடராக கொடுத்து பார்வையாளர்களை கவர்வதில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ரேகை’ அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிறைந்த உண்மை.
ரேட்டிங் 3.8/5

