Sep 25, 2025 08:27 PM

‘ரைட்’ திரைப்பட விமர்சனம்

92441ae2fa69ef3e42abadeb5ac44353.jpg

Casting : Natty Subramaniam, Arun Pandian, Akshara Reddy, Munnar Ramesh, Vinodhini Vaidynathan, Aditya Shivakumar, Yuvina Parthavi

Directed By : Subramanian RameshKumar

Music By : Guna Balasubramanian

Produced By : RTS Film Factory - Thirumal Lakshmanan & T. Siyamala

 

போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் நட்டி, பிரதமர் பாதுகாப்பிற்காக சென்ற  நிலையில், அவரது காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர், எங்கோ இருந்து தொழில்நுட்ப ரீதியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார். 

 

தன் மகன் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண் பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது விசயம் கசிந்தால் பதற்றம் அடிகரிக்கும் என்பதால், வெளியே  தெரியாத வகையில், பிரச்சனையை சமாளிக்க காவல்துறை முயற்சிக்க, மர்ம நபர் தனது தேவையை தெரியப்படுத்துகிறார். அது என்ன ?, அவர் யார் ? என்பதை காவல்துறை கண்டுபிடித்து, காவல் நிலையத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்டதா? இல்லையா ? என்பதே ‘ரைட்’ கதை.

 

கதையின் நாயகன் என்ற அடையாளம் இருந்தாலும், ஒரு கதாபாத்திரமாக கதைக்கு ஏற்ப நட்டி நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவர் இடம்பெறவில்லை என்றாலும், படத்தின் இறுதிக்காட்சியின் போது திடீரென்று எண்ட்ரி கொடுத்து, அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து தன்னை கதையின் நாயகனாக நிலைநிறுத்திக் கொள்கிறார்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், மகன் காணவில்லை என்ற பரிதவிப்பையும், அவருக்கு என்ன ஆனது என்ற கவலையையும் தன் நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகன் பற்றிய புகாரை சரியாக விசாரிக்காத காவலர்கள் மீது கோபம் கொள்வதும், வெடிகுண்டு வைக்கப்பட்ட காவல் நிலையத்தில் சிக்கிக்கொள்வதும், திடீரென்று அவர் மீது எழும் சந்தேகம் என்று திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

 

பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி, சூழ்நிலையை புரிந்துக்கொண்டு செயல்படுவது, பிரச்சனையை சமாளிக்க முயற்சிப்பது என்று அசல் காவல்துறை அதிகாரி போல் அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

 

கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் மூணார் ரவி, எதார்த்தமான நடிப்பின் மூலம் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை சர்வசாதாரணமாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக வெடிகுண்டுக்கு அடியில் உட்கார்ந்து படத்தின் இறுதி வரை உட்கார்ந்தபடியே தன்னுள் இருக்கும் பீதியையும், பதற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

 

நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலராக நடித்திருக்கும் நடிகை என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பதற்றம், கதாபாத்திரங்களிடம் இருக்கும் பயம், திரைக்கதையின் வேகம் ஆகியவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிக கச்சிதமாக பயணித்திருக்கிறது.

 

முழுக்க முழுக்க காவல் நிலையத்தில் நடக்கும் கதை என்பதால், காவல் நிலையத்தை தனது வசதிக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ், ஒரே இடத்தில் கேமரா பயணிக்கும் உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். 

 

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் மற்றும் கலை இயக்குநர் தாமு ஆகியோரது பணி படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் சுப்பிரமணியன் ரமேஷ்குமார், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் மற்றும் பழிவாங்கும் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். குறிப்பாக காவல் நிலையத்தில் நடக்கும் கதையை எந்தவித தொய்வும் இன்றி விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் நட்டி, படத்தின் ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் எண்ட்ரி கொடுத்த சில நிமிடங்களிலேயே எக்ஸிட் ஆகிவிட, அதன் பிறகு தொடங்கும் கதைக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் போதே, அவருக்கும் காவல் நிலையத்தில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்று யூகித்து விட முடிகிறது. இருந்தாலும், அந்த யூகங்களை மறந்து படத்துடன் பார்வையாளர்கள் பயணிக்கும் வகையில், சில கதாபாத்திரங்கள் மற்றும் திருப்பங்களை புத்திசாலித்தனமாக கையாண்டு  படத்தை ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.

 

மொத்தத்தில், ‘ரைட்’ தேர்ச்சி பெறும்.

 

ரேட்டிங் 3.3/5