Feb 02, 2019 02:35 AM

’சகா’ விமர்சனம்

f32fd8f23655c9f64307d50bdf98a538.jpg

Casting : Saran, Prithvi, Kishore, Sree Ram, Pandi, Aayra, Neeraja

Directed By : Murugesh

Music By : Shabir

Produced By : Selly Cinemas

 

அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்களின் டீன் ஏஜ் படமாக உருவாகியிருக்கும் ‘சகா’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்துவிட்டு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் குற்றவாளிகளாக இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் வரும் காதல், மோதல் மற்றும் நட்பு தான் ‘சகா’ படத்தின் கதை.

 

அப்பா, அம்மா இல்லாத சரணும், பாண்டியும் சிறு வயது முதலே ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் கொலை குற்றம் ஒன்றுக்காக சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அதே பள்ளியில் திருட்டு குற்றத்திற்காக சேர்க்கப்படுகிறார் கிஷோர். இவர்களுக்கு முன்பாகவே அதே இடத்தில் இருக்கும் மற்றொரு சிறுவரான ப்ரித்விராஜ், குற்றம் செய்வதற்காகவே பிறந்தவரை போல, சிறையிலும் பல குற்றங்களை செய்து வர, புதிதாக வரும் ஸ்ரீராமும் ப்ரித்விராஜுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்.

 

சிறைச்சாலையையே மிஞ்சும் அளவுக்கு சிறார் சீர்த்திருத்த பள்ளியின் செயல்பாடு இருக்கிறது. குற்றவாளிகளுக்கு இடையே பணம் பெட்டிங்காக அவ்வபோது சண்டை நடக்க, அந்த சண்டையின் மூலம் ஏற்படும் பகையால், ப்ரித்விராஜ் பாண்டியை அடித்தே கொலை செய்துவிடுகிறார். தனது நண்பனை கொலை செய்த ப்ரித்வியை சரண், பழிவாங்க நினைக்கும் போது, ப்ரித்வி விடுதலையாகி விடுகிறார். அதே சமயம், தனது காதலிக்கு பிரச்சினை ஏற்பட போவதை அறியும் கிஷோர், எப்படியாவது அவரை காப்பாற்ற நினைக்கிறார். இவர்களது தண்டனை காலம் முடிய இன்னும் இரண்டு வருடம் பாக்கி இருக்க, அதற்குள் சிறையில் இருந்து தப்பித்து, தாங்கள் நினைத்ததை செய்ய நினைக்கும் இவர்கள், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். இவர்களது முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஸ்ரீராம், இவர்களுடன் சேர்ந்து தப்பிக்க நினைக்க, இறுதியில் மூன்று பேரும் தப்பித்து, தாங்கள் நினைத்ததை செய்தார்களா இல்லையா, என்பது தான் ‘சகா’ படத்தின் மீதிக்கதை.

 

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியை காட்டியவுடனே இயக்குநர் ரசிகர்கள் காதில் வாழைப்பூவை சுற்றுகிறார், என்பது புரிந்துவிடுகிறது. அதிலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக் கொண்டிருக்கும் பாண்டியராஜன் மகன் ப்ரித்விராஜை சிறுவராக காட்டியிருப்பது தாங்க முடியாத கொடுமையாக இருக்கிறது.

 

நடிப்பிலும், உருவத்திலும் ப்ரித்விராஜ் சிறுவரைப் போல இருந்தாலும், அவரது முகம் அவரை முத்தின கத்திரிக்காய் என்று காட்டிக்கொடுத்து விடுகிறது.

 

‘வட சென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்த சரண், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது ஸ்கீரின் பெரஸன்ஸ் சூப்பர். நிச்சயம் நல்ல கதைகளை தேர்வு செய்தால், தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோவாக வலம் வரும் வாய்ப்பு சரணுக்கு அதிகமாகவே உள்ளது.

 

‘பசங்க’ படத்தில் இருந்து ஒன்றாகவே நடித்து வரும் பாண்டி, ஸ்ரீராம், கிஷோர் ஆகியோரது நடிப்பும் அப்படியே ஒரே மாதிரியாக இருக்கிறது. அதிலும் ஸ்ரீராமை எல்லாம் டெரராக காட்டியிருப்பது சிரிக்க முடியாத காமெடியாக இருக்கிறது.

 

நிரன் சந்தரின் ஒளிப்பதிவும், சபீரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. “யாயும்...ஞாயும்...” பாடல் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. ஆனால், இந்த படத்தில் தான் அந்த பாடல் உள்ளது என்று பெரும்பாளனவர்களுக்கு தெரியவில்லை. பாடல் இடம்பெறும் போது அனைவருக்கும் ஆச்சர்யம். அதேபோல், அந்த பாடலை படமாக்கிய விதமும் அசத்தல்.

 

Sagaa Review

 

அறிமுக இயக்குநர் முருகேஷ், எடுத்துக் கொண்ட கருவும், அதை படமாக்கிய விதத்திலும் சுவாரஸ்யத்தை காட்டியிருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை அமைத்த விதத்தில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்திருக்கிறார். தான் என்ன சொல்ல போகிறோம், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் எப்படி சொல்வது, என்பதை யோசிக்காமலே கண்ட மேனிக்கு காட்சிகளை வடிவமைத்து பல இடங்களில் ரசிகர்களை எரிச்சலடைய செய்துவிடுகிறார்.

 

படத்தில் இடம் பெறும் டீன் ஏஜ் வாலிபர்களின் காதலையும், அதை கையாண்ட விதமும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக “யாயும்...ஞாயும்...” பாடல் திரும்ப திரும்ப கேட்கவும், பார்க்கவும் வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘சகா’ ஒரு பாட்டின் மூலம் சர்பிரைஸ் கொடுத்தாலும், முழு படமாக ரசிகர்களுக்கு சவுக்கடி வலியை தான் கொடுக்கிறது.

 

2/5