’சரீரம்’ திரைப்பட விமர்சனம்

Casting : Tharshan Priyan, Charmy Vijayalakshmi, J Manoj, Pudhupettai Suresh, Madhumitha, GV Perumal Malaichamy, Shakila
Directed By : GV Perumal
Music By : Bharathiraja
Produced By : GVP Pictures - GV Perumal
கல்லூரியில் படிக்கும் நாயகன் தர்ஷன் பிரியனும், நாயகி சர்மி விஜயலட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். நாயகியின் குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நாயகனை கொலை செய்யவும் முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து வாழ வேண்டும் என்பதற்காக காதலர்கள், யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத ஒரு விசயத்தை செய்கிறார்கள். அது என்ன ? அதன் மூலம் அவர்களது காதல் வாழ்க்கை என்னவானது ? என்பதை வித்தியாசமான சிந்தனையாகவும், விபரீதமான முயற்சியாகவும் சொல்வதே ‘சரீரம்’.
நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் பிரியன், நடனம், நடிப்பு, ஆக்ஷன் என அனைத்து விசயங்களையும் நன்கு கற்றுத்தேர்ந்தவராக இருக்கிறார். காதலுக்காகவும், காதலிக்காவும் எதையும் செய்ய துணிந்தவர், தனது சரீரத்தையே மாற்றிக் கொள்ள சம்மதித்து, அதன் மூலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வலிகள் ஆகியவற்றை தனது தனது நடிப்பின் மூலம் சிறப்பாகவே பிரதிபலித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சர்மி விஜயலட்சுமி, எளிமையான அழகோடு, எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார். நாயகனுக்கு இணையான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் அளவாகவும், நிறைவாகவும் நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஜெ.மனோஜ், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ‘புதுப்பேட்டை’ சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜி.வி.பெருமாள் மலைச்சாமி என மற்ற வேடத்தில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பாரதிராஜா இசையில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்களோடும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் கே.டொர்னாலா பாஸ்கர் மற்றும் பரணி குமார் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழு படத்தையும் படமாக்கியிருக்கிறார்கள். எளிமையான லொக்கேஷன்களாக இருந்தாலும் அதை அழகியலோடு காட்சிப்படுத்தி, படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் ஜி.வி.பெருமாள், காதல் கதையை இதுவரை யாரும் கையாளாத வகையில் வித்தியாசமாக கையாண்டிருக்கிறார். எதிர்ப்புகளை சமாளித்து, காதலில் ஜெயிக்க காதலர்கள் பல விசயங்களை செய்வதுண்டு, ஆனால் இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் மிகவும் புதிது மட்டும் அல்ல, யாரும் சிந்திக்காத ஒன்றாக இருக்கிறது.
காதல் கதையாக இருந்தாலும், அதில் வேற்று பாலினத்தவரின் வலிகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் ஜி.வி.பெருமாளின் சிந்தனை வித்தியாசமாக இருந்தாலும், அது இயற்கைக்கு எதிரானது மட்டும் இன்றி விபரீதமானது என்பதை நீதிபதி கதாபாத்திரம் மூலம் சொல்லி, படத்தை முடித்திருப்பது வரவேற்கத்தக்கது.
படத்தின் மையக்கரு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தாலும், இயக்குநர் ஜி.வி.பெருமாளின் வித்தியாசமான முயற்சி, படத்தில் இருக்கும் குறைகளை தவிர்த்து, படத்தை ஒரு முறை பார்க்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘சரீரம்’ வித்தியாசமான காதல் கதை, விபரீதமான முயற்சி.
ரேட்டிங் 2.8/5