Dec 30, 2022 11:54 AM

’செம்பி’ திரைப்பட விமர்சனம்

c95afb8d1a6b33ea877906e3da44fc06.jpg

Casting : Kovai Sarala, Ashvinkumar Lakshmikanthan, Thambi Ramaiah, Nila, Aakash, Nanjil Sampath, Pazha Karuppaia, Bharathi Kannan, Andrus

Directed By : Prabhu Solomon

Music By : Nivas K.Prasanna

Produced By : Trident Arts - R.Ravindran and AR Entertainments - Ajmal Khan, Ria

 

மலைவாழ் பழங்குடியின முதியவரான கோவை சரளா, தனது பேத்தி செம்பியுடன் கொடைக்கானல் பகுதியில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இல்லாத தனது பேத்தியை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக, தேன் எடுப்பது உள்ளிட்ட கடினமான வேலைகளை செய்து வருகிறார்.

 

இதற்கிடையே சிறுமி செம்பிக்கு நடக்கும் கொடூரமான சம்பவத்தால், கோவை சரளாவின் கனவு சிதைந்து போகிறது. பாதிக்கப்பட்ட அவர்களுக்கு துணையாக நிற்கவேண்டிய காவல்துறை அவர்களையே குற்றவாளியாக்கி துரத்த, மறுபக்கம் அரசியல்வாதிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கோவை சரளாவும், செம்பியும் தப்பித்தார்களா? இல்லையா? செம்பிக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதை கலங்கும்படி சொல்வது தான் ‘செம்பி’-யின் கதை.

 

கதையின் நாயகியாக வீரத்தாய் என்ற வேடத்தில் நடித்திருக்கும் கோவை சரளா, மலைவாழ் பழங்குடியின பெண்ணாக தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் மிளிர்கிறார். பேத்திக்கு நடந்த கொடூரத்திற்கு எதிராக போராடும் அவர் நடிப்போடு, சண்டைக்காட்சிகளிலும் நடித்து படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.

 

செம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி நிலா, தனக்கு என்ன நடந்தது? என்பதே தெரியாமல் வலியால் துடிக்கும் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது. அம்மாச்சி...அம்மாச்சி...என்று அவர் கதறுவது திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் நம் காதில் ஒலித்து, இதயத்தை கனக்க செய்கிறது.

 

பேருந்து பயணிகளில் ஒருவராக வந்தாலும் வீரத்தாய்க்கும், செம்பிக்கும் கடவுளாக தெரியும் அஷ்வின் குமாரின், கதாபாத்திர வடிமைப்பும், அதில் அவர் நடித்த விதமும் அழகு.

 

பேருந்து முதலாளியாகவும், நடத்துநராகவும் நடித்திருக்கும் தம்பி ராமையா, தனது வழக்கமான காமெடியை அளவாக கொடுத்து கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

 

எதிர்க்கட்சி தலைவராக நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத் மற்றும் முதலமைச்சராக நடித்திருக்கும் பழ கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளுக்கு ஏற்ற உடல் மொழியோடு நடித்திருக்கிறார்கள்.

 

நீதிபதியாக நடித்திருக்கும் ஞானசம்பந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆகாஷ் இருவரும் இயல்பாகவும், நிறைவாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

பாரதி கண்ணன், ஆட்ரூஸ் உள்ளிட்ட பேருந்து பயணிகள் சினிமாவுக்கு புதிதாக இருந்தாலும் கதையோடு பயணித்து நம் மனதில் நிற்கிறார்கள்.

 

பனி சூழ்ந்த மலைகளையும், ஆர்ப்பரிக்கும் அருவிகளையும் அழகாக படமாக்கி நமக்கு விருந்தாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜீவன், வீரத்தாய் மற்றும் செம்பி போன்ற மலைவாழ் பழங்குடியின மக்களின் கடினமான வாழ்க்கையை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கோவை சரளா மரம் மீது அமர்ந்து தேன் எடுப்பது எவ்வளவு பெரிய ஆபத்தானது, என்பதை தன் கேமரா கண் மூலம்  காட்சிப்படுத்திய விதம் படம் பார்ப்பவர்களையே பயத்தில் உறைய வைக்கிறது.

 

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை பாடல் வரிகள் மட்டும் இன்றி அதில் உள்ள வலியையும் நம் மனதில் கடத்துகின்றது. பின்னணி இசை கதையை எந்த இடத்திலும் முந்தாமல் பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

 

படத்தொகுப்பாளர் புவன், கலை இயக்குநர் விஜய் தென்னரசு, சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு, ஒலி வடிவமைப்பாளர் ஜீ. தரணிபதி  ஆகியோரது பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

பத்திரிகை செய்தியாக நாம் கடந்து போகும் சம்பவங்களுக்கு பின்னணியில் எப்படிப்பட்ட வலி மிகுந்த வாழ்க்கை இருக்கிறது, என்பதை மிக அழுத்தமாக இயக்குநர் பிரபு சாலமன் பதிவு செய்திருக்கிறார்.

 

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகள் மற்றும் பெண்களை இந்த சமூகத்தின் ஒரு சிலர் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும், அவர்களை சுற்றி பரப்பப்படும் வதந்திகளையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டால் சட்டம் அவர்களை எப்படி கையாள்கிறது என்பதை சாட்டையடியாக சொல்லியிருக்கிறார்.

 

போக்சோ சட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த சட்டத்தை விரிவாக சொல்வதோடு, பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக போராடினால் நிச்சயம் குற்றவாளிகளை தண்டிக்கலாம் என்று இயக்குநர் சொல்லிய விதம் பாராட்டும்படி உள்ளது.

 

ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் சம்பவத்தை ஒரு பயணத்தின் மூலம் விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் பிரபு சாலகன், பேருந்து பயணத்தில் நடக்கும் சண்டைக்காட்சியை காட்சிப்படுத்திய விதம் லாஜிக் மீறலாக தெரிந்தாலும், தொய்வில்லாத திரைக்கதை ஓட்டத்திற்கு அந்த காட்சி கைகொடுத்திருக்கிறது.

 

வலி நிறைந்த சாமானிய மக்களின் வாழ்க்கையை எந்தவித சர்ச்சைகளும் இன்றி மிக நேர்த்தியாகவும், அதே சமயம் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலை நேர்மையாக சொல்லியதோடு அதை ரசிக்கும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் பந்தயத்தில் முந்திவிட்டார்.

 

இப்படி பாராட்டும்படி படம் எடுத்த இயக்குநர் பிரபு சாலமன், இறுதியில் நீதிக்காக போராடிய வழக்கறிஞரை சட்டென்று மறைந்துவிடும் கடவுளாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், செம்பிக்கு நடந்த கொடூரத்தின் போது அந்த கடவுள் எங்கிருந்தார்? என்பதை மட்டும் சொல்லாதது ஏனோ.

 

மொத்தத்தில், ‘செம்பி’ நம்பி பார்க்க வேண்டிய நல்ல படம்.

 

ரேட்டிங் 4/5