Sep 20, 2025 08:54 AM

’சக்தித் திருமகன்’ திரைப்பட விமர்சனம்

d6c71e621fa35e0b9f8a6cdd350653e4.jpg

Casting : Vijay Antony, Sunil Kirpalani, Trupti Ravindra, Vagai Chandrasekar, Cell Murugan, Kiran Kumar, Shoba Vishwanath

Directed By : Arun Prabu

Music By : Vijay Antony

Produced By : Vijay Antony Film Corporation - Fatima Vijay Antony, Meera Vijay Antony

 

தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர். தனது பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய சம்பவமாக இருந்தாலும், அதை கச்சிதமாக செய்து முடிக்கும் சாணக்கியத்தனம் கொண்ட விஜய் ஆண்டனி பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ளும், அதே வேலையை இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவில் செய்துக் கொண்டிருக்கும் வில்லன் சுனில் கிர்பலானி, விஜய் ஆண்டனியிடம் இருக்கும் அனைத்தையும் அபகறித்து அவரை அழிக்க நினைக்கிறார். அவரிடம் இருந்து விஜய் ஆண்டனி தப்பித்து தனது வேலையை தொடர்ந்தாரா ?, அவரது பின்னணி என்ன ? என்பதை சமகால அரசியலை பிரதிபலிக்கும் வகையிலும், ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும் பணக்காரர்களுக்காக அரசு எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது, என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘சக்தித் திருமகன்’.

 

எவ்வளவு பெரிய விசயமாக இருந்தாலும் அதை செய்து முடிப்பார், என்ற பிம்பத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, தன் பார்வையின் மூலமாகவே தன் மூளையில் பல விசயங்கள் ஓடிக்கொண்டிருப்பதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் செய்து முடிக்கும் விசயங்களும், அதற்காக அவர் யோசிக்கும் திட்டங்களும், அதை செயல்படுத்துவதில் அலட்டல் இல்லாமல் நடித்த விதமும் படத்திற்கும், அவரது கிட்டு என்ற கதாபாத்திரத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் சுனில் கிர்பலானி, சமகால அரசியல் நிகழ்வுகளையும், அதன் பின்னணியில் இருக்கும் வியாபாரத்தையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது திமிரான பேச்சும், உடல் மொழியும் அவரது கதாபாத்திரத்தை கவனக்கி வைக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திராவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். 

 

செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, வாகை சந்திரசேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரமும், நடிப்பும் நிறைவு.

 

ஷெல்லி ஆர்.கேலிஸ்ட் காட்சிகளுக்கு எது தேவையோ அதை மிக சரியாக பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். 

 

விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர்கள் ரேய்மெண்ட் டெரிக் க்ரஸ்ட்டா மற்றும் தினேஷ் படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை தொய்வின்றி நகரும் வரை காட்சிகளை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் தொகுத்திருக்கிறார்கள்.

 

எழுதி இயக்கியிருக்கும் அருண் பிரபு, சமகால அரசியல் மற்றும் மறைமுக அரசியல் வியாபாரத்தை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார். வசனங்கள், தமிழகம் மற்றும் இந்திய அரசியலை காட்சிப்படுத்திய விதம், மத்திய அமைச்சர்கள் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என அனைத்திலும் பல்வேறு குறியீடுகளை வைத்து உண்மைகளை உரக்கச் சொல்லியிருக்கிறார்.

 

முதல் பாதியில் இருக்கும் வேகம், விறுவிறுப்பு மற்றும் திருப்பங்கள் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துவிடுவது படத்திற்கு குறையாக இருந்தாலும், விஜய் ஆண்டனியின் திட்டம் மற்றும் அதை செயல்படுத்தும் விதம் ஆகியவை அந்த குறையை மறைத்து மீண்டும் படத்தோடு பார்வையாளர்களை பயணிக்க வைத்து, சீட் நுணிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

 

பால் விலை உயர்வு முதல் தோசை மாவுக்கு போடப்படும் ஜி.எஸ்.டி என அரசு திட்டங்களினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதும், பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் லாபம் சம்பாதிப்பதும், என ஜனநாயகம் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் அரசு மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க தூண்டியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு.

 

மொத்தத்தில், ‘சக்தித் திருமகன்’ மக்களை சிந்திக்க வைக்கும்.

 

ரேட்டிங் 3.8/5