’சிறை’ திரைப்பட விமர்சனம்
Casting : Vikram Prabhu, LK Akshay Kumar, Anishma Anilkumar, Ananda Thambiraja
Directed By : Suresh Rajakumari
Music By : Justin Prabhakaran
Produced By : Seven Screen Studio - SS Lalith Kumar
கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் பல வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் குழுவுக்கு வழங்கப்படுகிறது. போகும் வழியில் காவலர்கள் சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் கைதி அக்ஷய் குமாரை தொலைத்து விடுகிறார்கள்.
போலீஸ் துப்பாக்கியுடன் அவர்களிடம் இருந்து தப்பித்த அக்ஷய் குமார் மீண்டும் பிடிபட்டாரா ?, கொலை குற்றவாளியான அவரது பின்னணி என்ன ?, அவர் யாரை எதற்காக கொலை செய்தார்? , இதனால் விக்ரம் பிரபு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை விறுவிறுப்பாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்வதே ‘சிறை’.
கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, தனக்கான கதையாக அல்லாமல் நல்ல கதையில் தான் இருக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இந்த படத்தில் நடித்திருப்பது அவரது சிறந்த நடிப்பு நிரூபித்திருக்கிறது. இதற்கு முன்பும் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இதில் முழுக்க முழுக்க புதிய விக்ரம் பிரவை பார்க்க முடிவதோடு, அவரது நடிப்பில் அதீத முதிர்ச்சி தெரிகிறது.
தப்பித்து செல்லும் கைதியை பிடிக்கும் முயற்சி மற்றும் அதை தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சனையை பேசுவது, நீதிமன்றத்தில் பேசுவது என படம் முழுவதும் வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி ஆகியவற்றின் மூலம் ஒரு நடிகர் என்பதை தாண்டி, ஒரு காவலராக பார்வையாளர்கள் மனதுக்குள் விக்ரம் பிரபு பதிந்து விடுகிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக இளம் நடிகர் எல்.கே.அக்ஷய் குமார், ஒரு நடிகருக்கான பயிற்சியை மிக சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார் என்பதை தனது ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிக்காட்டியிருக்கிறார். பள்ளி பருவம், இளம் பருவம் மற்றும் சிறை கைதி என தனது தோற்றத்தில் மாற்றத்தை வெளிப்படுத்தியிருப்பவர், தனது நடிப்பு மூலம் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்து, கலங்க வைத்து விடுகிறார். இரண்டாம் பாதி படம் முழுவதையும் தன் எதார்த்தமான நடிப்பு மூலம் தாங்கிப் பிடித்திருக்கும் அக்ஷய் குமாரின் நடிப்புக்கு திரையரங்கில் அப்ளாஷ் கிடைப்பது உறுதி.
நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், எளிமையான அழகு மற்றும் குழந்தைத் தனமான சிரிப்போடு கவனம் ஈர்ப்பதோடு, அளவான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் ஆனந்த தம்பிராஜாவின் திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரமாக பயணித்து திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா இருளில் ஒளி மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது. கதாபாத்திரங்களை நடிகர்களாக அல்லாமல், கதைக்களத்தில் வாழும் மனிதர்களாக பார்க்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கும் மாதேஷ் மாணிக்கம், எளிமையான கதைக்கு தனது கேமரா மூலம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
காவல்துறையின் பின்னணியில் ஒரு எளிமையான காதல் கதை என்றாலும், அதை தனது படத்தொகுப்பு மூலம் விறுவிறுப்பாக மட்டும் இன்றி பார்வையாளர்கள் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் பிலோமின் ராஜ். அவரது படத்தொகுப்பு மூலம் சில திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை, சில இடங்களில் பார்வையாளர்களை பதற்றத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் எழுதிய கதை சாதாரணமாக இருந்தாலும், அதை தனது திரைக்கதை மற்றும் இயக்கம் மூலம் மிக வலிமையான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.
கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகள் ஆகியவற்றின் மூலம் படத்தை வேகமாக பயணிக்க வைத்தாலும், காவல்துறை பற்றிய விவரங்களை நுணுக்கமாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, காதல் கதையை உணர்வுப்பூர்வமாக கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை படம் ஈர்த்து விடுகிறது.
முதல் பாதி படம் வேகமாக பயணித்தாலும், சில இடங்களில் சிறு தொய்வு ஏற்படுகிறது. ஆனால், அக்ஷய் குமார் - அனிஷ்மா ஜோடியின் காதல் கதை மற்றும் அவர்களது நடிப்பு அந்த தொய்வை மறைத்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.
நடிகர்கள் தேர்வு மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம், சிறு கதை என்றாலும் அதற்கான திரைக்கதையை சுவாரஸ்யமாக எழுதி, விறுவிறுப்பாக சொல்லிய விதம் என ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாகவும், எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்கள் சார்ந்த அரசியலையும் பேசும் ஒரு படைப்பாகவும் கொடுத்திருக்கும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்.
மொத்தத்தில், ‘சிறை’ தமிழ் சினிமாவுக்கு சிறப்பு சேர்க்கும்.
ரேட்டிங் 4.2/5

