Nov 12, 2020 06:30 AM

’சூரரைப் போற்று’ விமர்சனம்

896258017cf43ed75485042f461d5c89.jpg

Casting : Surya, Aparna Balamurali, Karunas, Paresh Rawal,

Directed By : Sudha Kongara

Music By : GV Prakash Kumar

Produced By : 2D

 

சூர்யா நடிப்பில், ‘இறுதிச் சுற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘சூரரைப் போற்று’ இன்று நேரடியாக அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மலிவான விலையில் விமான பயணம், என்ற சாதனையை நிகழ்த்தி காட்டிய ஏர் டெக்கான் நிறுவனரும், ஓய்வு பெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் எப்படி, என்பதை பார்ப்போம்.

 

இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றும் சூர்யா, அந்த வேலையை விட்டுவிட்டு, குறைந்த விலையில் விமான பயண சேவை வழங்கும், நிறுவனம் ஒன்றை தொடங்கும் பணியில் ஈடுபடுகிறார். மலிவான விலையில் விமான சேவை வழங்கி, சாதாரண மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்குவதோடு, அதன் மூலம் நிறுவனம் லாபமும் பெறுவதற்கான சிறந்த திட்டம் ஒன்றை தயாரித்து வைத்திருக்கும் சூர்யா, மூலதனத்திற்காக முயற்சித்துக் கொண்டிருக்க, சூர்யாவின் திட்டத்தால் தமக்கு பெரிய இழப்பீடு வரும் என்று எண்ணி, முன்னணி விமான சேவை நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதோடு, அரசு மூலமாகவும் அவருக்கு பல தடைகளை ஏற்படுத்த அவை அனைத்தையும் எப்படி முறியடித்து, குறைந்த விலை விமான சேவையை சூர்யா வெற்றிகரமாக தொடங்குகிறார், என்பது தான் படத்தின் கதை.

 

இன்று நாட்டில் இருக்கும் முக்கிய பிரச்சினை விலை ஏற்றம் தான். அதிலும், 10 ரூபாய்க்கு ஒருவர் விற்பனை செய்யும் ஒரு பொருளை, மற்றொருவர் 100 ரூபாய்க்கு விற்கிறார். பொருள் மற்றும் தரம் அனைத்தும் ஒன்றாக இருந்தாலும், இந்த விலை மாறுபாடு பல துறைகளில் இருக்கிறது. இதனால், அனைவருக்கும் கிடைக்க வேண்டியவை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைப்பதால், மேலே இருப்பவன் எப்போதும் மேலே இருக்க, கீழே இருப்பவன் எப்போதும் கீழவே இருப்பது தொடர் கதையாகி விடுகிறது. இப்படி ஒரு நடைமுறை தான் விமான பயணத்திலும் இருந்தது. ஆனால், அதை தனது முயற்சியால் மாற்ற நினைக்கும் ஒருவருக்கு, அரசு அதிகாரிகளின் உதவியுடன் அத்தொழிலில் இருக்கும் ஜாம்பவான்கள் எப்படி எல்லாம் பிரச்சினைகளை கொடுத்தார்கள். அந்த பிரச்சினைகளால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அவைகளை முறியடித்து அந்த மனிதர், இன்று விமான பயண சேவையை ரயில் பயண சேவைக்கு நிகராக கொண்டு வந்தது எப்படி, என்பதை இயக்குநர் சுதா கொங்கரா விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார்.

 

”நான் பிரமாதமான நடிகன் அல்ல” என்று பேட்டிகளில் தன்னடக்கத்தோடு சொல்லும் சூர்யாவை தவிர வேறு யாராலும் இந்த ‘நெடுமாறன்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது, என்று சொல்லும் அளவுக்கு சூர்யா நடித்திருக்கிறார். இதுவரை பார்த்த சூர்யாவில் இருந்து சற்று மாறுபட்ட சூர்யாவாக நடிப்பில் வித்தியாசத்தை காட்டியிருப்பவர், செண்டிமெண்ட் மற்றும் உணர்ச்சிக்கரமான காட்சிகளில் நம்மையும் போராட்டக்களத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். அவர் அழும்போது நமது கண்களும் கலங்குகின்றன. அவர் ஆசைப்படும் போது நம்மால் முடியும், என்று நம்பிக்கை ஏற்படுகிறது. அவர் தோற்றால் நமக்கும் வலிக்கிறது. மொத்தத்தில், நெடுமாறன் கதாப்பாத்திரத்தை நம்முள் இறக்கிவிடும் சூர்யா, முயற்சித்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம், என்ற நம்பிக்கையை தனது நடிப்பு மூலம் நமக்கு கொடுத்து விடுகிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, வழக்கமான டூயட் பாடும் கதாநாயகியாக அல்லாமல், ஹீரோவுக்கு நிகரான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பு, முகபாவனை என அனைத்திலும் கவனிக்க வைப்பவர், பொம்மி என்ற கதாப்பாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் பரேஷ் ராவல், சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, அப்பாவாக நடித்திருக்கும் பூ ராம், கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருப்பதோடு, கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகவும் பொருந்தியிருக்கிறார்கள்.

 

ஜி.வி.பிரகாஷின் இசையில் “காட்டுப் பயலே...” பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க, காட்சிகளுடன் பார்க்கும் போது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. பின்னணி இசை மூலமாக திரைக்கதையின் வேகத்தை கூட்டுகிறார். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்துடன் பயணித்திருக்கிறது.

 

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான ரத்தன் டாடா, 20 வருடங்கள் முயற்சித்தும் விமான பயண சேவை நிறுவனத்தை தொடங்க முடியாமல் போக, சாதாரண ஓய்வு பெற்ற விமானப்படை கேப்டன் ஒருவர் அத்தொழிலில் இறங்கி, அந்த சேவை சாதாரண மக்களுக்கு கிடைக்க செய்ய நினைத்தால், எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் என்பதை கத்தியின்றி, ரத்தமின்றி சொல்லியிருக்கும் சொல்லியிருப்பதோடு, அதனால் ஏற்படும் காயங்களை விட, மிகப்பெரிய வலியை அந்த மனிதர் அனுபவித்ததை நமக்கு அழுத்தமாக சொல்கிறது படம்.

 

சாதாரண ஒருவர் விமானத்தில் பறக்க ஆசைப்படலாம். ஆனால், அந்த விமானத்தையே சொந்தமாக்கி அதில் ஏழைகளையும் பறக்க வைப்பேன், என்று நினைத்ததற்கு பின்னால் இருக்கும் காரணமும், அச்சமயத்தில் அவர் அனுபவித்த வலியும் தான், இப்படத்தின் ஹைலைட்.

 

படத்தில் குறை என்றால், சூர்யா போன்ற ஒரு முன்னணி ஹீரோ எந்தவிதமான மாஸ் காட்சிகளும் இல்லாத கதையில் நடித்திருப்பதோடு, அந்த கதை மற்றும் அதில் சொல்லியிருக்கும் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் ஒரு கதாப்பாத்திரமாக நடித்ததை சொல்லலாம்.

 

”இது நமக்கானது அல்ல” என்று நாம் யோசிப்பதற்கு முன்னாள், நாம் அப்படி யோசிக்க வேண்டும் என்று சிலர் முடிவு செய்துவிடுகிறார்கள். இது விமான பயணத்தில் மட்டும் அல்ல, நாட்டில் உள்ள பல துறைகளில் இருக்கிறது. ஆனால், அதை அப்படியே விட்டுவிடாமல், அதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், என்ற சமூக விழிப்புணர்வை மறைமுகமாக பேசினாலும், அனைவர் மனதிலும் ஆழமாக பதிய வைத்துவிடுறார் இயக்குநர் சுதா கொங்கரா.

 

மொத்தத்தில், ‘சூரரைப் போற்று’ படத்தை பார்க்கும் அனைவரும் பாராட்டுவதோடு, மற்றவர்களையும் பார்க்க சொல்வது உறுதி.

 

ரேட்டிங் 4/5