’சொட்ட சொட்ட நனையுது’ திரைப்பட விமர்சனம்

Casting : Nishanth Ruso, Big Boss Varshini, Shalini, Robo Shankar, Pugazh
Directed By : Naveedh S Fareedh
Music By : Renjith Unni
Produced By : Adler Entertainment
இளம் வயதிலேயே தலையில் முடி உதிர்ந்து வழுக்கைத் தலையுடன் இருக்கும் நாயகன் நிஷாந்த் ரூஷோவை பல பெண்கள் நிராகரித்து விடுகிறார்கள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது வழுக்கைத் தலையால் திருமண வாழ்க்கையில் நுழைய முடியாமல் தவிக்கிறார்.
இதற்கிடையே நிஷாந்த் ரூஷோவின் எதிர் வீட்டில் வசிக்கும் ஷாலினி அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட, கல்யாண வேலைகள் தடபுடலாக நடக்கிறது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில், நிஷாந்த் ரூஷோ திடீரென்று திருமணத்தை நிறுத்தி விடுகிறார். அவர் திருமணத்தை நிறுத்தியது ஏன் ?, வழுக்கைத் தலையால் பாதிக்கப்பட்ட இல்லற வாழ்க்கை அவருக்கு மீண்டும் அமைந்ததா இல்லையா ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘சொட்ட சொட்ட நனையுது’.
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இளம் நாயகன் நிஷாந்த் ரூஷோ, இளம் வயதில் வழுக்கைத் தலையோடு இருப்பவர்களின் மன வலியை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக வழுக்கைத் தலை மேக்கப் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் பிக் பாஸ் வர்ஷிணி மற்றும் ஷாலினி இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் என படம் முழுவதும் காமெடி நடிகர்கள் நிறைந்திருந்தாலும் சிரிக்கும்படியான காட்சிகள் மிக மிக குறைவாகவே இருக்கிறது.
இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயனித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரயீஷ், காரைக்குடியை பருந்து பார்வையில் காட்டிவிட்டு, பெரும்பாலான காட்சிகளை ஒரே வீட்டுக்குள் வைத்தே படமாக்கியிருக்கிறார். கதைக்களமே நாயகனின் தலை தான் என்பதால், ஒளிப்பதிவாளர் தலை மீது மட்டும் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்.
படம் இரண்டு மணி நேரம் என்றாலும், அதை விட அதிகமான நேரம் ஓடும் உணர்வை ஏற்படுத்துவதை படத்தொகுப்பாளர் ராம் சதீஷ் தவிர்த்திருக்கலாம்.
கலக்கப்போவது யார் புகழ் ராஜா, இளம் வயதில் தலை முடி உதிர்ந்து வழுக்கைத் தலையோடு இருப்பவர்கள் எத்தகைய வலியை அனுபவிக்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக மட்டும் இன்றி நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத், வழுக்கைத் தலையால் பாதிக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையை வலி மிகுந்ததாக சொல்லாமல் ஜாலியாக சொல்லும் விதத்தில் காட்சிகளை அமைத்திருந்தாலும், நாயகனின் வலி அல்லது அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கொஞ்சம் அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார். இருந்தாலும், முதல்பாதி படமும், கிளைமாக்ஸ் காட்சியும் இயக்குநர் சொல்ல நினைத்ததை ரசிகர்களிடத்தில் கடத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவை நடிகர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று குறைத்துக் கொண்டு, படத்தின் முதல்பாதி போல், இரண்டாம் பாதியிலும் கதை மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வழுக்கைத் தலையால் வலியை அனுபவிப்பவர்கள் மட்டும் இன்றி சினிமா ரசிகர்களும் இந்த படத்தையும் கொண்டாடியிருப்பார்கள்.
இருப்பினும், நாயகனின் வழுக்கைத் தலை மேக்கப், குறுகிய காலக்கட்டத்தில் மிக தரமான முறையில் படமாக்கப்பட்ட விதம், நாயகன் நிஷாந்த் ரூஷோவின் நடிப்பு ஆகியவை படத்தின் குறைகளை நிறைகளாக மாற்றி படத்தை ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘சொட்ட சொட்ட நனையுது’ நினைவில் நிற்க மறுக்கிறது.
ரேட்டிங் 2.9/5