Dec 20, 2025 05:25 AM

’சுப்பன்’ திரைப்பட விமர்சனம்

852f644efde2c5ba7f505ba1cd23988f.jpg

Casting : Anand Murugan, Balahaasan, Sreedeva, Yasar, Gayathri Rema, Sharumisha, Swathi S. Pillai, Gajaraj, Hello Kandhasamy, VJ Andrew

Directed By : Guhanesan Sonaimuthu

Music By : Ragu Nandhan (One Song) and Jose Franklin

Produced By : Sri Bhagavans Pictures - RTN R.Ananda Murugan

 

மதுரையை ஆட்டிப்படைக்கும் ரவுடியின் சிஷ்யனான ஆனந்த் முருகன், குருவின் இடத்தை பிடித்து அவரைப் போலவே மதுரையின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார். அதே சமயம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை மற்றும் தங்கை என்று அளவான மற்றும் அழகான குடும்பத்துடன் வாழும் பாலஹாசன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி ஆனந்த் முருகனை கொலை செய்ய திட்டமிடுகிறார்.

 

சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் பாலஹாசன், மதுரையின் மிகப்பெரிய சக்தியாக திகழும் ரவுடி ஆனந்த் முருகனை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் ? , அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதை, தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவத்துடன், மதுரையின் ரவுடிசம் மற்றும் கந்து வட்டி மாஃபியா பின்னணியுடன் சேர்த்து சொல்வது தான் ‘சுப்பன்’.

 

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் போல், நெருங்கவே முடியாத அசாதாரண மனிதன் ஒருவனை சாதாரணமான ஒருவன் வீழ்த்த முடிவு செய்வதும், அந்த முடிவை செயல்படுத்த போராடுவதையும், நிஜ சம்பவங்களின் உண்மைக்கு நெருக்கமாகவும், அதே சமயம் கமர்ஷியல் பாணியிலும் சொல்லி, ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் குகநேசன் சோனைமுத்து.

 

மதுரையை ஆட்டிப்படைக்கும் வீரன் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆனந்த் முருகன், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார். அவரது அறிமுக காட்சியின் அடுத்தக் காட்சியிலேயே கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம் பிடிப்பவர், அடுத்தடுத்து செய்யும் அதிரடிகள் அடாவடித்தனமாக இருந்தாலும், அனைத்தையும் மிக நேர்த்தியாக செய்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன், படத்திற்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை காட்டுவதோடு, தனது நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தனது தங்கைக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது, என்பதற்காக அவர் எடுக்கும் முடிவும், அதை செயல்படுத்தும் விதமும் படத்தின் விறுவிறுப்பையும், வேகத்தையும் அதிகரித்திருக்கிறது.

 

சீரியல் நாயகன் ஸ்ரீதேவா, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், இதில் முத்திரை பதிக்கும் அளவுக்கு தனது கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார். 

 

வில்லனின் தம்பியாக நடித்திருக்கும் யாசர், தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி அசத்தியிருக்கிறார். 

 

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, சோசியல் மீடியா மோகத்தினால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் விதமாக நடித்திருக்கிறார்.

 

பாலஹாசனின் மனைவியாக நடித்திருக்கும் ஷாருமிஷா, நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ், ஸ்வாதி, ஹலோ கந்தசாமி, விஜே ஆண்ட்ரூஸ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொறுந்தியிருப்பதோடு, திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

ரகு நந்தனின் இசையில் ஒரு பாடல் என்றாலும் திரும்ப திரும்ப கேட்கும் விதத்தில் இருக்கிறது. 

 

ஜோஸ் ஃபிராங்கிளினின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஆக்‌ஷன் திரில்லர் ஜானர் என்றாலும், அதில் இருக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை பார்வையாளர்களிடத்தில் கடத்தும் வகையில் காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜெயகிருஷ்ணா.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் குகநேசன் சோனைமுத்து, உண்மை சம்பவத்தை கதைக்கருவாக வைத்துக் கொண்டு மதுரையை சுற்றியுள்ள வாழ்வியலை கமர்ஷியலாக சொல்லி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார்.

 

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் குகநேசன் சோனைமுத்து, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பின்னணியையும் சுவாரஸ்யமாக சொல்லியதோடு, பார்வையாளர்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் கதை சொல்லல் முறையை கையாண்டிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

சில இடங்களில் காட்சிகளை நான்லீனர் முறையில் சொல்லி, அடுத்தது என்ன ? என்ற ஆர்வத்தை தூண்டும் இயக்குநர் குகநேசன் சோனைமுத்து ஒளிப்பதிவாளராக காட்சிகளை கையாண்ட விதத்தில் மிளிர்கிறார். குறிப்பாக திருமண பாடல் காட்சியை வழக்கமான சினிமா முகங்களை வைத்து படமாக்காமல், புதியவர்களை கொண்டு படமாக்கியிருப்பது கவனம் ஈர்க்கிறது. 

 

கமர்ஷியல் படமாக இருந்தாலும், அதில் மக்களுக்கான, குறிப்பாக பெண்களுக்கான ஒரு மெசஜை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் குகநேசன் சோனைமுத்து, சிறு முதலீட்டில் மிகப்பெரிய விசயத்தை பாராட்டும்படி சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘சுப்பன்’ ஜெயிக்க வேண்டியன்.

 

ரேட்டிங் 3.8/5