Feb 04, 2023 07:28 AM

’தலைக்கூத்தல்’ திரைப்பட விமர்சனம்

b0bb8b3627552b04296a5694c32e2f00.jpg

Casting : Samuthirakani, Vasundhara, Kathir, Katha Nandi, Adukalam Murugadoss,

Directed By : Jayaprakash Radhakrishnan

Music By : Kannan Narayanan

Produced By : S. Sashikanth and Chakravarthy Ramachandra

 

மனைவி,  மகள் மற்றும் மரண படுக்கையில் இருக்கும் வயதான அப்பா என்று  வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி, தனியார் நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றி வருகிறார். குறைவான வருமானத்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார். இதற்கிடையே, கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்வது போல், படுத்த படுக்கையாக இருக்கும் சமுத்திரக்கனியின் தந்தையையும் கொல்ல சமுத்திரக்கனியின் மனைவி வசுந்தராவும் அவரது குடும்பத்தினரும் திட்டமிடுகிறார்கள்.

 

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் சமுத்திரக்கனி, தனது தந்தைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து அவரை காப்பாற்ற நினைப்பதோடு, அதற்காக வீட்டு பத்திரத்தை அடகு வைத்து செலவு செய்கிறார். இந்த விஷயத்தை தெரிந்துக்கொள்ளும் வசுந்தர, சமுத்திரக்கனியிடம் சண்டைப்போட குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்ப, அவற்றையு தாண்டி தனது அப்பாவை காப்பாற்ற துடிக்கும் சமுத்திரக்கணி மனைவியை சமாதானப்படுத்தினாரா? அல்லது மனைவியின் விருப்பப்படி அப்பாவை கொல்ல சம்மதித்தாரா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ‘தலைக்கூத்தல்’.

 

தந்தைக்கு பாசமான மகனாக, மனைவி அவமானப்படுத்துவதை தாங்கும் அமைதியான கணவனாக, மகளை அரவணைக்கும் அன்பான தந்தையாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சமுத்திரக்கனி கைத்தட்டல் பெறுகிறார். யதார்த்தத்தை நடிப்பின் மூலம் கண்முன் நிறுத்தி வசுந்தரா பாராட்டை பெறுகிறார். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டை, கோபம், அன்பு என அனைத்தையும் வசுந்தரா அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

சமுத்திரக்கனி தந்தையின் இளைய வயது பிளாஷ்பேக் கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் கதிர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். கதிரின் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவருடைய காதலியாக வரும் கத்தா நந்தி சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

 

படம் முழுக்க படுத்துக்கொண்டே மனதை உருக்குகிறார் கலைச் செல்வன். மேலும் படத்தில் பிற கதாப்பாத்திரங்களில் வரும் ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி ஆகியோரின் வேடங்கள் கவனிக்க வைக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் மார்டின் டாஜ் ராஜ், கிராமத்தின் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்முள் அழுத்தமாக பதிய வைக்கிறார்.

 

இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு,  கதாபாத்திரங்களின் இதயம் பேசும் வார்த்தைகளின் உணர்வுகளை நேர்த்தியாக விவரித்திருக்கிறார்.

 

கிராமத்தில் நடக்கும் தலைக்கூத்தல் விஷயங்களை பதிவு செய்ய முயற்சித்திருப்பதற்காக இயக்குநர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள். அடிதடி, பஞ்ச் வசனங்கள் இல்லாமல் சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து மனதை தொடும் அழுத்தமான படத்தை கொடுத்துள்ளார். இருந்தும் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். 

 

கதிர் காதலிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யாதது போல் தோன்றுகிறது. சில இடங்களில் கதை ஒட்டாமல் நிற்பது போன்று உள்ளது.

 

மொத்தத்தில், ‘கலைக்கூத்தல்’ மனிதர்களின் உணர்வுகள் பற்றி பேசும் அழுத்தமான படம்.

 

ரேட்டிங் 3/5