Jun 23, 2023 05:43 PM

’தலைநகரம் 2’ திரைப்பட விமர்சனம்

58d8a28632eecb3558ae7a8aa13f1bb0.jpg

Casting : Sundar C, Palak Lalwani, Thambi Ramaiah, 'Bhahubali' Prabhakar, Aayira, Jaise Jose, Vishal Rajanm Cheran Raj

Directed By : Dhorai V.Z

Music By : Ghibran

Produced By : Right Eye Theatres - S.M.Prabakaran, Dhorai V.Z

 

ரவுடிசத்தை விட்டுவிட்டு ஒதுங்கியிருக்கும் சுந்தர்.சி, மீண்டும் களத்தில் இறங்கி தலைநகரத்தை கொலை நகரமாக மாற்றுகிறார். அவர் எதற்காக மீண்டும் ரவுடிசம் பக்கம் திரும்பினார், அவர் யாரை கொலை செய்தார், அவர்களுக்கும் சுந்தர்.சி-க்கும் இடையே என்ன நடந்தது, என்ற ரீதியில் ‘தலைநகரம் 2’ படத்தின் கதை நகர்கிறது.

 

முதல் பாகத்தில் ரவுடி ரைட்டாக கலக்கிய சுந்தர்.சி, இந்த இரண்டாம் பாகத்தில் அதே ரைட்டாக இருந்தாலும் ரிட்டயர்ட் ரவுடியாக வருகிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருப்பவர் திடீரென்று விஸ்வரூபம் எடுத்து மீண்டும் ரைட்டாக களத்தில் இறங்கி கொத்து கொத்தாக கொலை செய்கிறார். முதல் பாகம் போல் இதில் சுந்தர்.சி-க்கு காதல் பாடல்களோ அல்லது காமெடி காட்சிகளோ இல்லை. கொடூரமாக கொலை செய்வதும், மிருகத்தனமாக அடிப்பதை மட்டுமே படம் முழுவதும் செய்கிறார். ஆனால், அவை அனைத்தையும் நம்பும்படியாக செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

வில்லனின் காதலியாக வரும் நாயகி பாலக் லால்வாணி, பிறகு சுந்தர்.சி-யால் ஈர்க்கப்பட்டு அவருடனே பயணிக்கிறார். கதையின் மையப்புள்ளியே நாயகி பாலக் லால்வாணி தான் என்றாலும், அவருக்கான காட்சிகள் குறைவு தான்.

 

வில்லன்களாக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகரன், விஷால் ராஜன், ஜெய்ஸி ஜோஸ் ஆகியோர் உருவத்திலும், நடிப்பிலும் மிரட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு ரகத்தில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி வெல்டன் சொல்ல வைக்கிறார்கள்.

 

அனுபவமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு தம்பி ராமையா நியாயம் சேர்த்திருக்கிறார். தம்பி ராமையாவின் மகளாக நடித்திருக்கும் ஆய்ரா, அளவான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். சிறிய வேடம் என்றாலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார் சேரன் ராஜ்.

 

இ.கிரிஷ்ணசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சண்டைக்காட்சிகளிலும், கொலை காட்சிகளிலும் கேமராவின் கோணம் மிரட்டுகிறது.

 

ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அமர்க்களமாக இல்லை என்றாலும் அளவாக இருக்கிறது.

 

ஆர்.சுதர்சனின் படத்தொகுப்பு படத்தை நேர்த்தியாகவும், வேகமாகவும் நகர்த்தி செல்கிறது. அதே வேகத்தையும், நேர்த்தியையும் இரண்டாம் பாதியில் மிஸ் பண்ணியது ஏன் என்று தான் தெரியவில்லை.

 

‘தலைநகரம்’ படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதையை எழுதியிருக்கும் இயக்குநர் வி.இசட்.துரை மூன்று வில்லன்களை வைத்து, அவர்களுக்கும் சுந்தர்.சி-க்கும் இடையே மோதலை உருவாக்கி அதன் மூலம் மொத்த படத்தையும் கொலை களமாக கையாண்டிருக்கிறார்.

 

”உயிரோடு மண்ணுக்குள்ள இறக்கிடுவேன்”, “குடலை உருவிடுவேன்” என்று படங்களில் வசனம் தான் பேசுவார்கள். ஆனால், இயக்குநர் வி.இசட்.துரை அந்த வசனங்களை காட்சிகளாக வடிவமைத்து மிரட்டியிருப்பதோடு, எப்படி எல்லாம் ஒருவரை கொடூரமாக கொலை செய்யலாம் என்று பாடமே நடத்தியிருக்கிறார்.

 

வில்லன்களின் அறிமுகம் மற்றும் அவர்களது பின்னணி, சுந்தர்.சி-யின் எண்ட்ரி ஆகியவை படத்தை எதிர்பார்ப்புடனும், வேகமாகவும் நகர்த்தி செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் எந்த ஒரு திருப்புமுனையும் இல்லாததும், பழைய பாணியிலான காட்சிகளும் திரைக்கதையை தொய்வடைய செய்துவிடுகிறது.

 

முதல் பாகத்தில் இருந்த நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள் இல்லாத குறையை வில்லன்கள் கதாபாத்திரம் மூலம் சரி செய்ய நினைத்திருக்கும் இயக்குநர் இரண்டாம் பாதி திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் படம் தப்பித்திருக்கும்.

 

ரேட்டிங் 2.7/5