Jul 26, 2025 05:24 AM

’தலைவன் தலைவி’ திரைப்பட விமர்சனம்

be4352f7477bb369043a5273798f239e.jpg

Casting : Vijay Sethupathy, Nithya Menon, Yogi Babu, Saravanan, Semban Vinoth, Deepa Shankar, RK Suresh, Janaki Suresh, Sendrayan, Aruldass

Directed By : Pandiraj

Music By : Santhosh Narayanan

Produced By : Sathya Jyothi Films, TG Thyagarajan Presents - Sendhil Thyagarajan & Arjun Thyagarajan

 

விஜய் சேதுபதி - நித்யா மேனன் திருமணமாகி இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய சில மாதங்களிலேயே, குடும்பங்களில் வழக்கமாக ஏற்படும் சிறு சிறு சண்டை சச்சரவுகளாலும், அதனால் நடக்கக்கூடிய சம்பவங்களாலும் பிரிந்து விடுகிறார்கள். மூன்று மாதங்களாக பிரிந்திருக்கும் தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை குடும்பங்களில் அன்றாட நடக்கும் சலசலப்புகளின் பின்னணியில், அதீத செயற்கைத்தனத்தை சேர்த்து சொல்லியிருப்பதே ‘தலைவன் தலைவி’.

 

ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் அன்பான கணவராகவும், அம்மா மீது அக்கறையுள்ள பிள்ளையாகவும் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, அளவுக்கு அதிகமாக நடித்து அதிர்ச்சியளிக்கிறார். தனது தனித்துவமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றுவதில் கில்லாடியான விஜய் சேதுபதி, இந்த படத்தில் அதை கொஞ்சம் அதிகமாகவே செய்து பல இடங்களில் பார்வையாளர்களை கடுப்பேற்றி விடுகிறார். முதல் பாதி முழுவதும் விஜய் சேதுபதியின் ஓவர் ஆக்டிங்கால் உட்கார முடியாத நிலை இருந்தாலும், இரண்டாம் பாதியில் நடிப்பின் அளவை சற்று குறைத்திருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது.

 

நித்யா மேனன், விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டி நடித்தாலும், அவர் அளவுக்கு பார்வையாளர்களை பதம் பார்க்கவில்லை. கணவருடன் சண்டை போட்டாலும், அவரது பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தாலும், அவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை, என்பது சோகம்.

 

சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு அணுகுண்டுகளாக திரையரங்கை சிரிப்பு சத்தத்தால் சிதறடிக்கிறது. உருவ கேலி செய்வதை முற்றிலும் தவிர்த்திருக்கும் யோகி பாபு, அமைதியான முறையில் வசனம் பேசி விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பதற்காகவே தனியாக பாராட்டலாம்.

 

நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் - தீபா சங்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் - ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். கமர்ஷியல் படம் என்றாலும் தனித்துவமான பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை சட்டென்று ஈர்க்கிறது. 

 

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறுகிய தெருக்களில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது. 

 

திரை முழுவதும் நட்சத்திரங்கள், படம் முழுவதும் வசனங்கள் என்று காட்சிகள் நீளமாக இருந்தாலும், படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், முடிந்தவரை சுருக்கமாக சொல்லி, பார்வையாளர்களை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் பாண்டிராஜ், வழக்கமான குடும்ப சிக்கல்களை குட்டி அறிவுறையோடு, நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும், அதை அழுத்தமாக சொல்லாதது படத்திற்கு சற்று பலவீனம். ஆனால், அந்த பலவீனத்தை மறைத்து பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய செய்வது யோகி பாபுவின் காமெடி காட்சிகள் மட்டுமே. 

 

விஜய் சேதுபதி - நித்யா மேனன் இடையே வரும் காதல், மோதல் சம்மந்தப்பட்ட காட்சிகளும், மருமகள் - மாமியார் இடையே நடக்கும் சண்டைகளிலும் அதீத செயற்கைத்தனம் தெரிவதால் அவற்றை முழுமையாக ரசிக்க முடியவில்லை. குறிப்பாக விஜய் சேதுபதியின் அதீத நடிப்பு ”தாங்க முடியலடா சாமி...” என்ற ரகமாக இருப்பதோடு, அவருக்கு என்னாச்சு என்ற அதிர்ச்சியையும் கொடுக்கிறது.

 

கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள், இருவரும் மனம் விட்டு பேசினாலே தீர்ந்துவிடும், அப்படி பேசாமல் ஈகோவில் முட்டிக்கொள்ளும் தம்பதிகள் இறுதியில் நீதிமன்ற வாசலில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது, என்ற நல்ல விசயத்தை லேசாக சொல்லிவிட்டு, சண்டைகளையும், அது எதற்காக வருகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்யாமல், நகைச்சுவையாக சொல்கிறேன் என்ற பெயரில் இயக்குநர் பாண்டிராஜ், பல இடங்களில் போரடிக்க வைக்கிறார்.

 

படம் பார்ப்பவர்களுக்கு இயக்குநர் பாண்டிராஜ் கூறிய அறிவுரை மனதில் நிற்கிறதோ இல்லையோ...,பரோட்டா சாப்பிட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் வரும். அந்த அளவுக்கு பரோட்டாவை விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், ‘தலைவன் தலைவி’யை விட அவர்கள் ஒன்று சேர காரணமாக இருக்கும் பரோட்டா வகைகள் தான் கவனம் ஈர்க்கிறது.

 

2.8/5