Feb 04, 2023 11:46 AM

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்பட விமர்சனம்

f232ca5397e4e5321ecc8bd3d1f3a2fc.jpg

Casting : Aishwarya Rajesh, Raghul Ravindar, Nandhakumar

Directed By : R.Kannan

Music By : Jerry Silvester Vincent

Produced By : Durgaram Choudhary, Neel Choudhary

 

பெண்களின் உலகம் வெறும் சமயலறையோடு முடிந்துவிடுவதில்லை, என்பதை உணர்த்தும் ரீதியில் எழுதப்பட்டுள்ள இப்படம் முழுமையும் சமையலறையிலே நடக்கிறது.

 

பல கனவுகளோடு திருமண வாழ்க்கையில் நுழையும் ஐஸ்வர்யா ராஜேஷ், பகல் முழுவதையும் சமையல் அறையிலும், இரவு நேரத்தை கணவனை மகிழ்விக்கும் கட்டிலுக்கும் செலவிடுகிறார். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, அவரது ஒவ்வொரு நாளும் இப்படியே நகர, இறுதியில் அவர் பொங்கி எழும் போது என்ன நடக்கிறது? என்பது தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.

 

இன்று பல துறைகளில் பெண்கள் சாதித்தாலும், பெண்களின் முக்கிய பணி சமைப்பது, கணவனை கவனித்துக்கொள்வது என்பது பலரது எண்ணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் முயற்சியாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், அதை சரியான முறையில் சொல்லாமல், பெரும்பாலான காட்சிகளில் சமைப்பது, உண்ணுவது போன்ற சமையலறை விஷயங்களை மட்டுமே சொல்லி சலிப்படைய செய்திருக்கிறார்கள்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மிக இயல்பான வேடத்தில் மிக மிக இயல்பாக நடித்திருக்கும் அவர், பெண்களின் மன குமுறல்களை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் ராகுல் ரவிந்திரன், மாமனாராக நடித்திருக்கும் நந்தகுமார் ஆகியோர் தங்கள் கதாபாத்திரம் மீது ரசிகர்களுக்கு கோபம் வரும் அளவுக்கு மிரட்டலாக நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்துக்கு வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையில் பாடல்கள் மனதில் நிறகவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ற்படி பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

 

இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படத்தை மூன்று மணி நேரம் பார்த்தது போன்ற உணர்வை கொடுக்கிறது லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு.

 

மலையாளப் படத்தை ரீமேக் செய்திருக்கும் இயக்குநர் ஆர்.கண்ணன், மலையாள கலாச்சாரத்திற்கு பொருத்தமான ஒரு கதையை தமிழில் திணித்திருக்கிறார்.

 

நம்ப முடியாத சம்பவங்கள், திணிக்கப்படும் கருத்துகள், சமையலறையை மட்டுமே சுற்றி வரும் காட்சிகள் போன்றவை சலிப்படைய வைக்கிறது.

 

படத்தில் இடம்பெறும் ஒரு சில வசனங்கள் மட்டுமே ரசிக்க வைக்கிறது. மற்றபடி, படம் முழுவதும் ரொம்ப மெதுவாக நகர்வதோடு, நம்ப முடியாத பல விஷயங்களை சொல்லி மனதோடு ஒட்ட மறுக்கிறது.

 

மொத்தத்தில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சுவை இல்லா உணவு.

 

ரேட்டிங் 2.5/5