‘தீயவர் குலை நடுங்க’ திரைப்பட விமர்சனம்
Casting : Arjun, Aishwarya Rajesh, Abhirami Venkatachalam, Praveen Raja, Logu. Npks, Ram Kumar, Thangadurai, Baby Anikha, Prankster Rahul, Priyadarshini, Syed, G.K. Reddy, P.L.Thenappan, O.A.K.Sundar, Vela Ramamoorthy, Padman
Directed By : Dinesh Lakshmanan
Music By : Bharath Aaseevagan
Produced By : GS Arts - G.Arulkumar
முகமூடி அணிந்த மர்ம நபரால் பிரபல எழுத்தாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜூன் விசாரிக்கிறார். மறுபக்கம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் நெருக்கமாக பழக தொடங்குகிறார்.
இதற்கிடையே, அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, அது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தும் போது, மேலும் ஒருவர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். யார் அந்த மர்ம நபர் ? , கொலைகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் என்ன சம்மந்தம் ?, ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறாரா ? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை பரபரப்பாக சொல்வதே ‘தீயவர் குலை நடுங்க’.
காவல்துறை சீருடை அணியாமல் வலம் வந்தாலும், தனது கம்பீரமான நடிப்பு மூலம் காவல்துறை அதிகாரியாக அர்ஜூன் மிளிர்கிறார். மறைத்து வைக்கப்பட்ட தடயங்கள் மூலம் விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று தனது புலன் விசாரணை மூலம் திரைக்கதையை வேகமாக நகர்த்திச் செல்லும் அர்ஜூன், தனது பாணியில் அட்டகாசமான சண்டைக்காட்சி ஒன்றையும் நிகழ்ச்சி தனது ரசிகர்களை திருப்தியடைய செய்திருக்கிறார்.
கதையின் நாயகி என்றாலும், குறிப்பிட்டு சொல்ல முடியாத சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
ஆட்டிசம் பாதித்த சிறுமியாக நடித்திருக்கும் அனிகா, மிக இயல்பாக நடித்து வியக்க வைக்கிறார்.
பிரவீன் ராஜா, லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பளித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, ஆரம்பக் காட்சியிலேயே மிரட்டி விடுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் வேகத்தை அதிகரித்து பார்வையாளர்களிடமும் பதற்றத்தை தொற்றிக் கொள்ள செய்பவர், மின் தூக்கியில் நடக்கும் சண்டைக்காட்சியை அட்டகாசமாக படமாக்கி பாராட்டு பெறுகிறார்.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை சரியான முறையில் நகர்த்தி படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் லக்ஷ்மணன், உண்மை சம்பவம் ஒன்றை கதைக்கருவாக வைத்துக் கொண்டு, விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடன் பயணிக்கும் திரைக்கதை, பார்வையாளர்களுக்கு சிறந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.
மொத்தத்தில், ‘தீயவர் குலை நடுங்க’ மிரட்டல்.
ரேட்ட்டிங் 3.2/5

