‘தேசிய தலைவர்’ திரைப்பட விமர்சனம்
Casting : JM Basheer, Director Bharathiraja, Vagai Chandrasekar, Radha Ravi, RV Udhayakumar, MS Baskar
Directed By : R.Aravindraj
Music By : Ilayaraja
Produced By : SSR Sathya, Jenifer Margret
சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை தொடங்குகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முத்துரமாலிங்க தேவர், ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதோடு, ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் பயனிப்பவர், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி, பார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைகிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்க தேவர், தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுக்கிறார்.
முத்துராமலிங்க தேவரின் வளர்ச்சியால் அச்சமடையும் காங்கிரஸ் தலைமை அவரை மீண்டும் காங்கிரஸில் இணைய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. அது முடியாமல் போக, அவர் மீது சாதி வெறியர் என்ற அடையாளத்தை குத்த முயற்சிக்கிறது. இதற்கிடையில், சாதி மோதல்களை தடுப்பதற்கான அரசின் அமைதி பேச்சுவார்த்தையின் போது, தலித் சமூகத்தின் தலைமையாக இயங்கிய இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவரை எதிர்த்து பேசுகிறார். இதற்கிடையே, இமானுவேல் சேகரன், மர்ம கும்பலால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கில் முத்துராமலிங்க தேவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக சட்ட போராட்டத்தில் ஈடுபடும் முத்துராமலிங்க தேவர், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா ?, அதன் பிறகு அவர் வாழ்க்கை என்னவானது, என்பது தான் படத்தின் கதை.
முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெ.எம்.பஷீர், தோற்றம், நடிப்பு, உடல் மொழி, வசன உச்சரிப்பு என ஒவ்வொரு அசைவுகளிலும் முத்துராமலிங்க தேவரை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசன், மூலம் எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்தோமோ அதுபோல், ஜெ.எம்.பஷீர் மூலம் முத்துராமலிங்க தேவரை பார்க்க முடிகிறது.
நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் ஆகியோரது கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் உருவ ஒற்றுமையில் கச்சிதமாக பொருந்திருக்கிறார்கள்.
இயக்குநர் பாரதிராஜா, ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், அவர்களது அனுபவமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
இசையமைப்பாளர் இளையராஜா, தன் இசை மூலம் முத்துராமலிங்க தேவருக்கு மீண்டும் உயிரூட்டியிருக்கிறார். அவரது அசைவுகளுக்கு ஏற்ப பின்னணி இசையமைத்திருக்கும் இளையராஜா இறுதிக் காட்சியில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விடுகிறார்.
ஒளிப்பதிவாளர் அகிலன், சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான காலக்கட்டம் என பீரியட் படத்திற்கு ஏற்ப ஒளி மற்றும் வண்ணங்களை கையாண்டு இருப்பது, தென் மாவட்ட பகுதிகளில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.
படத்தொகுப்பாளர் கே.ஜெ.வெங்கட்ரமணன், பலர் அறிந்த மற்றும் அறிந்திடாத ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறாக இருந்தாலும், அதை திரை மொழியில் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறார்.
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆர்.அரவிந்தராஜ், முத்துராமலிங்க தேவர் பற்றி அறிந்த கதை என்றாலும், அதை திரைப்படமாக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
படத்தின் முதல் பாதி டாக்குமெண்டரி போல் பயணித்தாலும், இரண்டாம் பாதி திரை மொழிக்கான அத்தனை அம்சங்களுடன் விறுவிறுப்பாக பயணிக்கிறது. நீதிமன்ற காட்சிகள் மற்றும் முத்துராமலிங்க தேவரின் மேடை பேச்சுகள், அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் கைதட்டல் பெறும் விதத்தில் இருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் முத்துராமலிங்க தேவருக்கு இடையே ஏற்பட்ட பகை, காமராஜர் சார்ந்த சமூகத்திற்கும், முத்துராமலிங்க தேவரின் சமூகத்திற்கும் இடையே ஏற்பட்ட பகையை பக்குவமாக பேசியிருப்பதோடு, முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையில் சாதி மோதல்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
தேசிய தலைவர் என்று கொண்டாடும் முத்துராமலிங்க தேவர் பற்றிய படத்தை இதுவரை எந்த நடிகரோ, இயக்குநரோ எடுக்காத நிலையில், அதை மிக துணிச்சலாக எடுத்து அசத்தியிருக்கும் நடிகர் ஜெ.எம்.பஷீர், இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் உள்ளிட்ட படக்குழுவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில், ‘தேசிய தலைவர்’ திரைப்படம் முத்துராமலிங்க தேவர் பற்றி படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்.
ரேட்டிங் 3.5/5

