Jun 01, 2023 01:13 PM

’துரிதம்’ திரைப்பட விமர்சனம்

7dcf986a829da27b7a5c60fcaad0d99b.jpg

Casting : Sandiyan Jegan, Edan, A.Venkatesh, Bala Saravanan, Poo Ram, Raams, Vaishali, Srinikila, Aiswarya

Directed By : Srinivasan

Music By : Song - Isai Amuthan Background Music - Naresh

Produced By : Thiruvarul Jeganathan

 

கால் டாக்ஸி ஓட்டுநரான நாயகன் ஜெகன், தனது காரில் பணி நிமித்தமாக பயணிக்கும் ஐடி நிறுவன ஊழியரான நாயகி ஈடனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், நாயகி ஈடன், ஜெகனை கார் ஒட்டுநராக மட்டுமே பார்க்கிறார். இதற்கிடையே நாயகன் ஜெகனுடன் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்ல வேண்டிய சூழல் நாயகி ஈடனுக்கு ஏற்படுகிறது. இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்லும் போது, வழியில் ஈடன் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்ட ஈடனை நாயகன் ஜெகன் காப்பாற்றினாரா? இல்லையா?, அவரது காதலை ஈடன் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது தான் ‘துரிதம்’ படத்தின் மீதிக்கதை.

 

‘சண்டியர்’ படம் மூலம் அதிரடி ஆக்‌ஷன் நாயகனாக கலக்கிய ஜெகன், இந்த படத்தில் பக்கத்து வீட்டு பையனாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க சாலையில் பயணிக்கும் கதையில், இருசக்கர வாகனத்தை ஓட்டுவதில் கூட தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி கதைக்கு பலம் சேர்த்திருக்கும் ஜெகன், நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் காட்சியிலும், நாயகி யார்? என்பது தெரிந்த பிறகு அவரிடம் இருந்து விலகும் காட்சியிலும், மிக நேர்த்தியான நடிப்பு மூலம் தனது கதாபாத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஈடன், கதையோடு பயணிக்கும் வேடத்தில் நாயகியாக பளிச்சிடுகிறார். கண்டிப்பான அப்பாவுக்கு பயந்து வாழ்ந்தாலும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசையோடு பரிதவிக்கும் காட்சிகளில் நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன் வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது. நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர் நடித்த விதமும் பெண்களை அடிமைப்படுத்துபவர்களை பிரதிபலிக்கிறது.

 

பூ ராமின் கதாபாத்திரம் திணிக்கப்பட்டது போல் இருந்தாலும் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்த உதவுகிறது. ராம்ஸ் கதாபாத்திரம் எதிர்பார்ப்போடு பயணிப்பதால், அவர் வரும் காட்சிகள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

நாயகியின் தோழிகளாக நடித்திருக்கும் வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா ஆகியோரது நடிப்பு அளவு.

 

ஒளிப்பதிவாளர்கள் வாசன் மற்றும் அன்பு டென்னிஸ் இருவரது கேமராவும் நெடுஞ்சாலைகளில் கச்சிதமாக பயணித்துள்ளது. முழுக்க முழுக்க நெடுஞ்சாலையில் பயணிக்கும் கதை என்பதால் இவர்களது கேமரா வேகமாக பயணித்தாலும், காட்சிகளையும், கதபாத்திரங்களின் உணர்வுகளையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

நரேஷின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. அளவான பின்னணி இசை படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர்கள் நாகூரான் மற்றும் சரவணன் இருவரும் எளிமையான கதையை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்திருக்கிறார்கள்.

 

எழுதி இயக்கியிருக்கும் சீனிவாசன், பயண கதையை பரபரப்பான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சியோடும் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.

 

சாதி பிரிவினையால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் கருவாக இருந்தாலும், அதை களமாக வைத்துக்கொண்டு ஒரு பயணத்தில் ஏற்படும் ஆபத்தை மிக சுவாரஸ்யமாக சொல்லி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். 

 

மொத்தத்தில், வேகம் நிறைந்த நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருக்கிறது இந்த ‘துரிதம்’.

 

ரேட்டிங் 3.5/5