Sep 10, 2021 10:05 AM

’துக்ளக் தர்பார்’ விமர்சனம்

d20936cf2eda8a7f1dd8d66c4067f83f.jpg

Casting : Vijay Sethupathi, Parthiban, Sathyaraj, Rashi Khanna, Manjuma Mohan, Karunakaran

Directed By : Delhiprasad Deenadayalan

Music By : Govind Vasantha

Produced By : S.S.Lalit Kumar

 

சிறுவயதில் இருந்தே அரசியல்வாதியான பார்த்திபனை ரோல் மாடலாக நினைத்து வளரும் விஜய் சேதுபதி, தானும் அரசியலில் நுழைந்து முன்னேற வேண்டும், என்ற முனைப்பில் வலம் வருகிறார். ஒரு கட்டத்தில் அவருடைய அரசியல் கனவு நினைவேறும் போது, அவருடைய உடலில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதன் மூலம் விஜய் சேதுபதியின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை வருகிறது. அது என்ன பிரச்சனை, அந்த பிரச்சனையால் விஜய் சேதுபதியின் அரசியல் வாழ்க்கை என்ன ஆனது?, என்பதே படத்தின் கதை.

 

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் முதல் அரசியல் நையாண்டி திரைப்படமாக இருந்தாலும், படத்தில் அரசியலையும், நையாண்டியையும் அளவாக வைத்து விட்டு, கமர்ஷியல் என்ற மசாலாவை சற்று தூக்கலாகவே வைத்திருக்கிறார்கள்.

 

சிங்காரவேலன் என்கிற சிங்கம் கதாப்பாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பு மூலம் கவரும் விஜய் சேதுபதி, பார்த்திபனுடன் இணைந்து நடித்ததால் என்னவோ, சில இடங்களில் அவரைப்போலவே நடிக்கிறார்.

 

பார்த்திபன் தனக்கு கொடுத்த வேலையை விட கூடுதலாக வேலை செய்யக்கூடிய நடிகர். ஆனால், இந்த படத்தில் அவருக்கு கொடுத்த வேலை மிக குறைவானது என்றாலும் அதில் நிறைவாக நடித்திருக்கிறார். 

 

கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா, விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருக்கும் மஞ்சுமா மோகன், இருவரும் அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

செட் பிராப்பர்ட்டி போல வந்து போகும் கருணாகரனை விட, பகவதி பெருமாள் கொஞ்சம் சிறிக்க வைக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் மகேந்திரன் ஜெயராஜு, கதைக்கு ஏற்ப பயணியாற்றியிருப்பதோடு, விஜய் சேதுபதியை பளிச்சென்றும் காட்டியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப உள்ளது. 

 

’அந்நியன்’ அம்பியையும், ’அமைதிப்படை’ அமாவாசையையும் மனதில் வைத்துக்கொண்டு கதை எழுதியிருக்கும் இயக்குநர் டெல்லிபிரசாத் தீனதயாளன், துக்ளக் மன்னரைப் போலவே, நல்ல ஐடியாவை சரியான திரைக்கதை அமைக்க முடியாமல் திணறியிருக்கிறார்.

 

திரைக்கதை பல இடங்களில் நொண்டியடித்தாலும், விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவருக்காகவும் படத்தை ரசிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் இந்த இருவரும் சோர்ந்து போக, இறுதியாக வரும் சத்யராஜின் கதாப்பாத்திரமும், அவருடைய நடிப்பும் நம்மை உற்சாகப்படுத்தி விடுகிறது.

 

ரேட்டிங் 3/5