Jun 01, 2023 01:50 PM

‘உன்னால் என்னால்’ திரைப்பட விமர்சனம்

1797319a7a621da8dd22176773fc6ddd.jpg

Casting : Soniya Agarwal, Jega, KR Jeyakrishna, Umesh, Sahana, Niharika, Lufna Ameer, Dilli Ganesh, Rajesh, R.Sundarajan, Ravi Mariya

Directed By : KR Jeyakrishna

Music By : Rishwan

Produced By : Sri Sri Ganesha Creations - Rajendran Subbaiah

 

வறுமையின் காரணமாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் நாயகர்கள் ஜெகா ,கே.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் மூவருக்கும் மூன்று விதமான குடும்ப பிரச்சினைகள். பணத்தால் மட்டுமே தங்களது பிரச்சனையை தீர்க்க முடியும் என்பதால், பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இவர்கள் இறங்குகிறார்கள். நேர்மையாக பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் இவர்கள் மூவரும் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் மனம் நொந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் இவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான பணத்தை சோனியா அகர்வால் கொடுக்க முன் வருகிறார். ஆனால், அவர் சொல்லும் ஒரு காரியத்தை மூவரும் செய்ய வேண்டும். அது என்ன? அதை மூவரும் செய்தார்களா? இல்லையா?, அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதே ‘உன்னால் என்னால்’ படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ஜெகா, கே.ஆர்.ஜெயகிருஷ்ணா மற்றும் உமேஷ் மூவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார்கள். 

 

நாயகிகளாக நடித்திருக்கும் சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஆகியோர் தலா ஒரு பாடல், சில காதல் காட்சிகள் என்று கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

டெல்லி கணேஷ், ஆர்.சுந்தராஜன், ராஜேஷ், ரவி மரியா ஆகியோரது அனுபவமான நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது.

 

முதல் முறையாக வில்லி வேடத்தில் நடித்திருக்கும் சோனியா அகர்வால், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். அவருடைய வில்லத்தனத்தை முழுமையாக வெளிப்படுத்த இன்னும் கூடுதலான காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

 

ஒளிப்பதிவாளர் கிச்சாஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பவர், படம் முழுவதையும் தரமாக பளிச்சென்று காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

ரிஸ்வான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, ரியல் எஸ்டேட் துறையின் கருப்பு பக்கங்களையும், மனித நேயத்துடன் வாழ்வது தான் அறம் என்பதையும் கமர்ஷியலாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவருடைய முயற்சி பல இடங்களில் தோல்வியை தழுவி இருக்கிறது.

 

ரியல் எஸ்டேட் துறையின் கருப்பு பக்கங்களை காட்டுவதாக சொல்லிவிட்டு, அதுபற்றிய காட்சிகளை மிக குறைவாக வைத்திருக்கும் இயக்குநர், காதல் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையின் போக்கை மாற்றியமைத்திருக்கிறார்.

 

நல்ல கதை என்றாலும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளில் இயக்குநர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா சொதப்பியிருப்பது படம் முழுவதும் தெரிகிறது. குடும்ப வறுமையும், அதை சுற்றி இடம்பெறும் காட்சிகளும் படத்தில் திரும்ப திரும்ப வருவது படத்தை தொய்வடைய செய்கிறது.

 

மூன்று பேரின் பண பிரச்சனை தீருமா? என்ற கேள்வி மட்டும் எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்வதோடு, இறுதியில் அவர்களின் பண பிரச்சனை தீரும் காட்சி ரசிக்க வைக்கிறது. இதே போல் படம் முழுவதும் இருந்திருந்தால், படத்தின் வெற்றியை ‘உன்னால் என்னால்’ என்று படக்குழு கொண்டாடி இருக்கலாம்.

 

ரேட்டிங் 2.5/5