May 28, 2022 04:35 AM

’வாய்தா’ விமர்சனம்

591d48a8f1f67cb10abcbf0289f61637.jpg

Casting : Mu.Ramasamy, Nazar, Pugazh Mahendran, Foulin Jessica,

Directed By : Madhivarman

Music By : Logeshwaran

Produced By : K.Vinod Kumar

 

சாதி பாகுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் சலவைத்தொழிலாளியாக இருக்கும் மு.ராமசாமி, விபத்து ஒன்றில் சிக்கி காயமடைகிறார். அந்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கும் முடிவில் மு.ராமசாமியின் குடும்பத்தார் இருக்க, ஊர் பெரிய மனிதர்கள் அதை தடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று யோசனை சொல்கிறார்கள். திடீரென்று மு.ராமசாமி மீது விபத்து ஏற்படுத்தியவர் பைக்கை திருடிவிட்டதாக போலீசில் புகார் அளிக்க, இதனால் பிரச்சனை பெரிதாகிறது. பிறகு நீதிமன்றத்திற்கு செல்லும் இந்த விவகாரத்தால் மு.ராமசாமிக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.

 

மு.ராமசாமியின் அப்பாவித்தனமான முகமும், இயல்பான நடிப்பும் அவருடைய கதாப்பாத்திரம் மீது இரக்கம் ஏற்பட செய்கிறது. ஆதிக்க சாதியினரின் அடாவடித்தனத்தால் அடங்கிப்போகும் காட்சிகளில் அவருடைய நடிப்பு கலங்க வைக்கிறது.

 

மு.ராமசாமியின் மகன் வேடத்தில் நடித்திருக்கும் படத்தின் ஹீரோ புகழ், பக்கத்து விட்டு பையன் போல் எதார்த்தமாக இருப்பதோடு, இயல்பாகவும் நடித்திருக்கிறார். விசைத்தறி தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கும் புகழ், சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படும் போது நடிப்பிலும் அசத்துகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஜெசிகா பவுல், கிராமத்து பெண்ணாக இயல்பாக நடித்திருக்கிறார். ஹீரோவுடான அவருடைய காதலும், பிறிவும் மனம் பதற வைக்கிறது. 

 

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நாசர், நக்கலைட்ஸ் பிரசன்னா, மு.ராமசாமியின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை என அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

 

ஒளிப்பதிவாளர் சேதுமுருகவேல் காட்சிகளை இயல்பாக படமாக்கியிருக்கிறார். நீதிமன்ற காட்சிகளும் அலங்காரம் இன்றி மிக இயல்பாக இருப்பது ரசிக்க வைக்கிறது. சி.லோகேஷ்வரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.

 

கிராமங்களில் நிலவும் சாதி பாகுபாட்டையும், அதனால் எளிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் மகிவர்மன்.சி.எஸ், நீதிமன்றங்களில் கூட எப்படி சாதி பாகுபாடு தலைவிரித்தாடுகிறது, என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘வாய்தா’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5