Aug 07, 2022 04:06 AM

’வட்டகரா’ திரைப்பட விமர்சனம்

3ef3fef6a926ba4660c1da5c18a4de42.jpg

Casting : Sathish, Angadi Theru Mahesh, Saranesh Kumar, Kannan Madhavan, Aleesha Gorge, Sara Monu, RS Sivaji

Directed By : K.Bharathi Kannan

Music By : Taj Noore

Produced By : Crowni Cinimas - Jayanthini Govindarajan

 

அமைச்சர் கஜராஜ் தனது ஆட்களிடம் வட்டகராவை கொடுத்து சென்னையில் சேர்க்க சொல்கிறார். காரில் வட்டகராவை எடுத்துச் செல்லும் போது நாயகன் சதீஷ், அங்காடித் தெரு மகேஷ், சரணேஷ் குமார், கண்ணன் மாதவன் ஆகிய நான்கு பேர்களும் சேர்ந்து வட்டகராவை அமைச்சரின் ஆட்களிடம் இருந்து திருடிவிடுகிறார்கள். திருடப்பட்ட வட்டகராவை மீட்பதற்கு அமைச்சரின் ஆட்கள் களத்தில் இறங்க, அவர்களிடம் இருந்து இந்த நான்கு பேரும் தப்பித்தார்களா? இல்லையா?, வட்டகரா என்றால் என்ன? அதை எதற்காக இந்த நான்கு பேர் திருடினார்கள்?, என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், ஆறடி உயரம், கம்பீரமான தோற்றம் என்று ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவனம் பெறுகிறார். 

 

பள்ளி பருவத்திற்கும் பாலிய பருவத்திற்கும் பொருத்தமாக இருக்கிறார் சரணேஷ் குமார். பள்ளி மாணவராக இருக்கும் போது காதலிக்காக சக மாணவரை கொலை செய்து பதற வைக்கிறார். ஆனால், அதை ஏன் செய்தார், என்ற காரணம் தெரியும் போது அவரது செயல் பாராட்டும்படி இருக்கிறது.

 

பார்வை இல்லாதவராக நடித்திருக்கும் அங்காடித் தெரு மகேஷ், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறார். நண்பனின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட அவர் துரோகத்தின் வலி பற்றி சொல்லும் போது படம் பார்ப்பவர்களின் கண்கள் கலங்குகிறது. 

 

நாயகியாக நடித்திருக்கும் அலீஷா ஜார்ஜ் பள்ளி மாணவியாக நடிப்பில் ஜொலிக்கிறார். பாடல் காட்சிகளில் பளபளப்பாக தெரிகிறார். அங்காடி தெரு மகேஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாரா மோனு ஒரு பாடலுக்கு வந்து போகிறார்.

 

அமைச்சராக நடித்திருக்கும் கஜராஜ், பொஞ்சமின், ஆர்.எஸ்.சிவாஜி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

தாஜ் நூர் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பாடல் வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸின் கேமரா கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. சாலை பயணத்தில் நடக்கும் கதையை எந்தவித ஆடம்பரம் இல்லாமல் மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் கே.பாரதி கண்ணன் எளிமையான கதையை மிக நேர்த்தியான திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறார். கமர்ஷியல் ஆக்‌ஷன் டிராமா ஜானர் படத்தில் துரோகம், விவசாயம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசியிருக்கும் இயக்குநர் படத்தின் ஆரம்பத்திலேயே நம் முழு கவனத்தையும் ஈர்க்கும்படி காட்சி வைத்திருப்பது படத்திற்குப் பெரிய பலம்.

 

வட்டகரா என்றால் என்ன? என்ற கேள்வி படத்தின் துவக்கத்திலேயே நம் மனதில் தோன்ற, அடுத்தடுத்த காட்சிகள் மூலம் எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்க வைக்கும் இயக்குநர் தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும், வேகமாகவும் சொல்லியிருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

படத்தில் சில இடங்களில் சிறு சிறு குறைகள் இருக்கிறது. அவை படத்தின் பட்ஜெட் காரணமான குறைபாடுகள் என்பதும் தெரிகிறது. அந்த குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், இயக்குநர் பாரதி கண்ணன், தான் எடுத்துக்கொண்ட கதையை, ரசிகர்களுக்கு பிடித்தது போன்ற நல்ல படமாகவே கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘வட்டகரா’ எதிர்ப்பார்க்காத வியப்பு

 

ரேட்டிங் 3.5/5