Jul 29, 2022 08:46 AM

’விக்ராந்த் ரோணா’ விமர்சனம்

7764f460c8769e6b82a8cd9cd6d83261.jpg

Casting : Sudeep, Nirup Bhandari, Neetha Ashok, Jacqueline Fernandez

Directed By : Anup Bhandari

Music By : B. Ajaneesh Loknath

Produced By : Shalini Jack Manju, Alankar Pandian

 

மர்மங்கள் நிறைந்த ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்லும் ஹீரோ கிச்சா சுதீப், அந்த கிராமத்தில் நிலவும் மர்ம முடிச்சுகளை எப்படி அவிழ்கிறார், அங்கு நடக்கும் கொலைகளின் பின்னணியையும், கொலை செய்பவர்களையும் எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதே படத்தின் கதை.

 

கன்னட திரைப்படமான   ‘கே.ஜி.எப்’ இந்திய அளவில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தற்போது வெளியாகும் கன்னட படங்கள் பிரம்மாண்டமாகவும், இந்திய அளவிலான கதைக்களத்துடனும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படமும் க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

 

நாயகன் கிச்சா சுதீப், தனது வழக்கமான அதிரடி நடிப்பால் அசத்தியிருக்கிறார். காக்கி சட்டை போடாத போலீஸாக வரும் சுதீப்பின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. கொலைக்கான காரணம்  குறித்து துப்பறியும் சுதீப், சில இடங்களில் கொடுக்கும் சஸ்பென்ஸ் சர்பிரைஸாக உள்ளது.

 

இரண்டாம் ஹீரோவாக வரும் நிரூப் பண்டாரி படம் முழுவதும் வருகிறார். படம் முழுவதும் இளமை துள்ளல் நடிப்பால் கவனம் பெறுபவர் க்ளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கும் அதிர்ச்சி திரையரங்கையே அதிர வைக்கிறது.

 

நீதா அசோக் கண்களினால் பேசும் அழகியாக இருக்கிறார். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கும் அவரது காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

 

ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது நடனம் மூலம் ஒட்டு மொத்த திரையரங்கிற்கும் உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறார்.

 

நடிகையாக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் பிரியா கவனம் பெறுகிறார். அவரது கணவராக நடித்திருக்கும் மதுசூதன ராவ் எப்போதும் போல் கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றாலும் அவர் அவர் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

 

கன்னட படம் என்றாலும் படத்தில் இடம்பெறும் வசனங்கள் டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்படாத வகையில் அமைந்துள்ளது. 

 

அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கல் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், தாளம் போடும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.

 

ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட் வித்தியாசமான முறையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். படத்தின் அனைத்துக் காட்சிகளும் இருட்டில் நடப்பது போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம் மற்றும் லொக்கேஷன் ஹாலிவுட் படத்தை பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் அனுப் பண்டாரி, சாதாரண ஒரு கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து அதை வித்தியாசமான முறையில் படமாக்கியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் பல ட்விஸ்ட்டுகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.

 

படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3டி தொழில்நுட்பம் மிக நேர்த்தியாக உள்ளது. ஹாலிவுட் படங்களில் கூட இந்த அளவு நேர்த்தியான 3டி தொழில்நுட்பம் பார்க்க முடியாது. தொழில்நுட்ப ரீதியாக படம் பாராட்டும்படி இருந்தாலும், திரைகக்கதை மெதுவாக நகர்வது படத்திற்கு பலவீனம்.

 

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வது, குறிப்பிட்ட ஒரே ஒரு இடம் திரும்ப திரும்ப வருவது, குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களிடம் குறிப்பிட ஒரே ஒரு விஷயம் பற்றி திரும்ப திரும்ப பேசுவது போன்றவற்றால் படத்தின் முதல் பாதி ரசிகர்களை தூங்க வைத்துவிடுகிறது. 

 

இரண்டாம் பாதியில் சுதாரித்துக்கொள்ளும் இயக்குநர் அனுப் பண்டாரி, திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்கச் செய்து சில திருப்புமுனை காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

மொத்தத்தில், தொழில்நுட்பத்தின் மூலம் கவனிக்க வைக்கும் ‘விக்ராந்த் ரோணா’-வை ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3/5