Jul 10, 2022 12:04 PM

‘வாட்ச்’ விமர்சனம்

b6452f61b18108d07ff6369d5c654d09.jpg

Casting : Krish, Zafrina Alam, Udhayakumar, Mathew Varghese

Directed By : Vijay Ashokan

Music By : Suganyan Sundeshwaran

Produced By : VA Studios

கார்டூனிஸ்ட்டான ஹீரோ கிரிஷுக்கு பத்திரிகையாளர் ஒருவர் மூலம் மருத்துவத்துறையில் நடக்கும் மிகப்பெரிய மோசடி பற்றிய தகவல்களும், அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான ஆதரங்களும் கிடைக்கிறது. அந்த ஆதாரங்களை வைத்து அந்த மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், வில்லன்களிடம் சிக்கிக்கொள்ளும் அவர் மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. பிறகு மருத்துவ சிகிச்சை பெற்று உயிர் பிழைக்கிறார். இருந்தாலும், தலையில் அடிபட்டதால் வினோதமான நோய்க்கு ஆளாகிறார். அதாவது, மூன்று வருடங்களாக கோமாவில் இருந்தவருக்கு விபத்துக்கு முன்பு பார்த்த முகங்கள் அனைத்தும் புதிய முகங்களாக தெரிகிறது. இப்படி ஒரு பிரச்சனையை வைத்துக்கொண்டு மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபடும் கிரிஷ், அவர்களை பிடித்தாரா? இல்லையா? என்பதை வித்தியாசமான முறையில் சொல்வது தான் ‘வாட்ச்’ படத்தின் கதை.

 

நாயகன் கிரிஷ் வேடத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். காட்சிகளின் வேகத்திற்கு ஏற்றவாறு நடிப்பிலும் வேகத்தை வெளிப்படுத்தியிருப்பவர், தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தால் குழம்புவது, முகம் தெரியாத வில்லன்களிடம் மோதுவது என்று கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

 

படத்தின் நாயகி என்று சொல்ல முடியாத கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சப்ரினா ஆலம் கவனிக்க வைக்கிறார். இருந்தாலும், அவருடைய கதாப்பாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காதது பெரிய ஏமாற்றம்.

 

வில்லன்கள் மேத்யூ வர்கீஸ், உதயகுமார் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோவின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

 

முகமது அமீன், விக்னேஷ் வாசு, இனியகதிரவன், கலைச்செல்வன் ஆகிய நான்கு பேர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். நான்கு பேரும் காட்சிகளை வித்தியாசமாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள். சென்னை துறைமுகப்பகுதிகளில் இதுவரை பார்க்காத இடங்களை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர்கள் மும்பை பகுதிகளையும் சுற்றி காண்பித்திருக்கிறார்கள்.

 

சுகன்யன் சுந்தரேஸ்வரன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

சமூகத்தில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கும் விஜய் அசோகன், நாயகனுக்கு இருக்கும் புதுவகை நோயை மையப்படுத்தி வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

 

நாயகனுக்கு இருக்கும் நோய், அதனுடன் அவர் வில்லன்களை கண்டுபிடிப்பது ஆகியவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது. நாயகனுக்கு நடப்பது அனைத்தும் அவருடைய கற்பனை என்று மருத்துவர் சொல்லும் போது நமக்கு வியப்பை ஏற்படுத்தும் படம், இறுதியில் அனைத்து குழப்பங்களும் தீர்ந்து முடியும் போது,  நம்மை ஆஹா...சொல்ல வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘வாட்ச்’ வித்தியாசமான முயற்சி

 

ரேட்டிங் 3/5