’எமன் கட்டளை’ திரைப்பட விமர்சனம்

Casting : Anbu Mayhilsamy, Chandrika, Arjunan, Nellai Siva, TP Gajendran, Charli, Vaiyapuri, Dilli Ganesh, Shakila, Power Star Srinivasan, Madhumitha, Karate Raja, Kottachi, Latha Rao, Nalini
Directed By : S.Rajasekar
Music By : N Sasikumar
Produced By : Sellammal Movie Makers - SA Karthikeyan
நாயகன் அன்பு மயில்சாமியால், நாயகி சந்திரிகாவுக்கு நடக்க இருந்த திருமணம் நின்று விடுகிறது. இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் நாயகன் தற்கொலை செய்து கொள்கிறார். அவரது ஆன்மா எமலோகத்திற்கு செல்கிறது. அங்கே விசயத்தை அறிந்து, அவருக்கு எமன் தண்டனையாக கட்டளை ஒன்றை இடுகிறார். அதன்படி மீண்டும் பூலோகத்திற்கு வரும் நாயகன், ’எமன் கட்டளை’-யை எப்படி நிறைவேற்றுகிறார், அது என்ன? என்பதை நகைச்சுவையாக சொல்வதே கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் அன்பு மயில்சாமி, நடனம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்தையும் அளவாக கையாண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சந்திரிகா, பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அர்ஜுனன், எமனாக நடித்திருக்கும் நெல்லை சிவா, நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் டி.பி.கஜேந்திரன், சார்லி, வையாபுரி, டெல்லி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், நளினி, ஷகிலா, லதா ராவ், கொட்டாச்சி, கராத்தே ராஜா என படத்தில் ஏகபப்ட்ட காமெடி நட்சத்திரங்கள் இருந்தாலும், அனைவரும் ஜொலிக்கும் வகையில் கையாளப்பட்டிருப்பதோடு, அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் என்.சசிகுமார் இசையில், சினேகன் மற்றும் வி.சுப்பையன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் அமைந்துள்ளது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஏ.கார்த்திக் ராஜாவின் கேமரா, காட்சிகளை வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்க செய்திருக்கிறது.
வி.சுப்பையனின் கதை மற்றும் வசனத்தில் நகைச்சுவை வழிந்தோடுகிறது. நாயகி நாயகனிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை கூட மிக நாகரீகமான வசனங்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் வி.சுப்பையன், குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு எளிமையான காதல் கதையை முழுமையான நகைச்சுவைப் படமாக எழுதியிருக்கிறார்.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.ராஜசேகர், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃபேண்டஸி ஜானரை, கமர்ஷியல் மசாலா திரைக்கதையோடு கொடுத்திருக்கிறார். எமன் கொடுக்கும் தண்டனை, அதை நிறைவேற்றி தப்பிக்க முயற்சிக்கும் ஹீரோ, அவரது காதல் என்று முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக, ரசிகர்களை முழு திருப்திப்படுத்துகிறது.
மொத்தத்தில், ‘எமன் கட்டளை’ பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5