கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த, தமிழக வீராங்கனை, சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ், கண்ணகி நகருக்கு சென்று கார்த்திகா மற்றும் அவரது பயிற்சியாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, கண்ணகி நகர் கபடி அணிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். அவரை தொடர்ந்து ‘பைசன்’ பட நாயகன் துருவ் விக்ரமும் கார்த்திகாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரபல நடிகர் மன்சூர் அலிகான், இன்று கண்ணகி நகருக்கு சென்று வீராங்கனை கார்த்திகாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அவருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால், கார்த்திகா திருமணத்திற்காக 100 பவுன் தங்க நகைகளை போடுவதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.

