Nov 24, 2022 04:47 AM

”இது நம் மானப்பிரச்சனை” - ’துடிக்கும் கரங்கள்’ டீசர் வெளியீட்டில் துடித்த இயக்குநர்கள்!

”இது நம் மானப்பிரச்சனை” - ’துடிக்கும் கரங்கள்’ டீசர் வெளியீட்டில் துடித்த இயக்குநர்கள்!

அறிமுக இயக்குநர் வேலுதாஸ் இயக்கத்தில், விமல் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘துடிக்கும் கரங்கள்’. ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரித்திருக்கும் இப்படத்தில் காளிதாஸ் மற்றும் வேலுதாஸ் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். மிஷா நரங் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு, எழில் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும் போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப்படம் நிச்சயம் பெறும்.

 

நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளவர். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது. இப்போது சின்னப்படங்கள் என்று சொல்லப்படக்கூடிய லவ்டுடே போன்றவை ரிலீசுக்குப்பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை.. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்..

 

தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது. வாரிசு ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்பு தான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கதையை கேட்கவே இல்லை என்று கூறினார். இன்றைக்கு எந்த தயாரிப்பாளரும் கதை கேட்பதில்லை.. ஹீரோவுக்கு பிடித்திருந்தால் மட்டும் போதும் என்கிற சூழல் நிலவுகிறது. லிங்குசாமி, எழில் மற்றும் என்னை போன்ற கிட்டத்தட்ட 43 உதவி இயக்குநர்களை இயக்குநராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, அவரது ஒவ்வொரு படத்திற்கும் அவரே கதை கேட்பார். அதன்பிறகு தான் அந்தக் கதைக்கு பொருத்தமான ஹீரோவிடம் கதைசொல்ல அனுப்பி வைப்பார். அதனால் தொடர்ந்து வெற்றி கிடைத்தது. இப்போது நூறாவது படத்தை தயாரிக்க போகிறார். ஆனால் இன்று ஹீரோவுக்கு மட்டும் கதை பிடித்துவிட்டால் போதும் என நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.  

 

இந்தப்படத்தின் இயக்குநர் வேலுதாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற ஒரு நல்ல இடத்திற்கு வருவார். நான் இந்த படம் பார்த்துவிட்டேன். திரைக்கதையை சரியாக கையாண்டுள்ளார் இயக்குநர் வேலுதாஸ். ஒரு புது இயக்குநர் படம் இயக்கியது போலவே தெரியவில்லை.

 

தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது, தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. நாம் மொழி பார்த்து படம் பார்ப்பதில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு பீஸ்ட் படம் வெளியான அதே சமயத்தில் தான், கேஜிஎப் 2 படமும் வெளியானது, அந்தப்படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே கிடைத்த வெற்றியால் பீஸ்ட் படத்திற்கு போலவே, கேஜிஎப் படத்தின் 2ஆம் பாகத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டது.

 

இதேபோல தான் பொன்னியின் செல்வன் வெளியான சமயத்தில் கன்னடத்திலிருந்து வெளியான காந்தாரா திரைப்படம் இங்கே வரவேற்பை பெற்றதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. நாம் தான் திராவிடம் என்கிற பாசத்துடன் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை தமிழர்களாக மட்டும் தான் பார்க்கிறார்கள்.

 

வாரிசு படத்தை தயாரித்தவரும் இயக்கியவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தான், ஹீரோ மட்டும் தான் தமிழ். அதனால் ஹீரோவை கார்னர் பண்றாங்க.

 

இப்போது அவர்கள் கொண்டுவந்திருக்கும் புதிய நடைமுறை நம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இதை சாதாரண பிரச்சினையாக கடந்துபோக முடியாது. இது மானப்பிரச்சனை.

 

தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் சரிசமமான முடிவெடுக்க வேண்டிய தென்னிந்திய வர்த்தக சபை இதில் தலையிட வேண்டும். மவுனமாக இருப்பது தப்பாக போய்விடும்.  

 

அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும். வாரிசு படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்து இங்கே வேறு எந்த மொழி படமும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்சனை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நம் ரோஷத்தையும் உணர்வையும் தூண்டி விடக்கூடிய ஒரு விஷயம்” என்றார்.

 

படத்தின் இயக்குநர் வேலுதாஸ் பேசுகையில், “சினிமாவில் நீண்ட நாட்களாக பயணித்து வருகிறேன். அதனால் என்னை ஒரு இயக்குனராக்கி பார்க்கவேண்டும் என்பதற்காக இந்தப்படத்தை தயாரிப்பாளர் அண்ணாதுரை ஆரம்பித்தார். படம் ஆரம்பித்தவுடன் சரி.. அதன்பிறகு ஒரு நாள்கூட அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததே இல்லை.. முழுப்பொறுப்பையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டார்” என்றார்.

 

தயாரிப்பாளர் அண்ணாதுரை பேசுகையில், “இயக்குநர் வேலுதாஸ் என் நண்பர். சகோதரரை போன்றவர். அவருக்காகத்தான் இந்தப்படத்தை தயாரிக்க முன் வந்தேன். இந்தப்படத்தின் கதை என்னவென்றே இப்போது வரை எனக்கு தெரியாது. அதை நான் கேட்கவும் இல்லை” என்றார்.