Apr 09, 2018 01:04 PM

ரூ.4 கோடி நஷ்ட்டம் - விஜய் ஆண்டனி படத்திற்கு நீதிமன்றம் தடை!

ரூ.4 கோடி நஷ்ட்டம் - விஜய் ஆண்டனி படத்திற்கு நீதிமன்றம் தடை!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும், அவரது சமீபத்திய படங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதிலும், அவரது நடிப்பிலும், தயாரிப்பிலும் கடசியாக வெளியான ‘அண்ணாதுரை’ என்ற படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

 

இந்த நிலையில், ‘அண்ணாதுரை’ படத்தை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டருக்கு அப்படத்தால் ரூ.4 கோடிக்குமேல் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் விஜய் ஆண்டனியிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

 

அதற்கு மாறாக தனது நடிப்பில் உருவாகி வரும் ‘காளி’ படத்தினை குறைந்த விலைக்கு தருவதாகவும், அதை விற்பனை செய்து கடனை அடைத்துக் கொள்ளுமாறும், விஜய் ஆண்டனி அலெக்சாண்டரிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு உடன்பட்ட பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டர் ரூ.50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டு உள்ளார்.

 

இதற்கிடையே, திரையுலகினர் நடத்தி வரும் போராட்டத்தினால் எந்த புதிய படங்களும் கடந்த ஒன்றரை மாதங்களாக வெளியாகவில்லை. இதனால் விஜய் ஆண்டனிக்கு அலெக்சாண்டர் கொடுக்க வேண்டிய பாக்கி தொகையை கொடுப்பதற்கு காலதாமதமாகியுள்ளது. ஆனால், விஜய் ஆண்டனியோ இதை காரணம் காட்டி அலெக்சாண்டரிடம் ‘காளி’ படம் தொடர்பாக போட்ட அக்ரிமெண்டை நிராகரிக்க முயற்சிக்கிறாராம். இது தொடர்பாக அலெக்சாண்டருக்கு கடிதம் ஒன்றையும் விஜய் ஆண்டனி அனுப்பியுள்ளார்.

 

இதை தொடர்ந்து, ’காளி’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அலெக்சாண்டர், அண்ணாதுரை படத்தால் ஏற்பட்ட நஷ்ட்டத்தை கேட்டு போன போது ‘காளி’ படத்தை கட்டாயப்படுத்தி எங்களை வாங்க வைத்தது விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும் தான். இப்போது ஒப்பந்தத்தை காரணம் காட்டி அண்ணாதுரை படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்தை ஒப்புக் கொண்டபடி கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள். எனவே எனக்கு அண்ணாதுரை படம் மூலம் ஏற்பட்ட நஷ்ட்டத்தை கொடுத்துவிட்டு ‘காளி’ படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் ஏப்ரல் 11 தேதிக்குள் ரூ.4 கோடியே 73 லட்சத்தை அலெக்சாண்டர் அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் விஜய் ஆண்டனி செலுத்திவிட்டு ‘காளி’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். இல்லை எனில் படத்திற்கான தடை தொடரும், என உத்தரவு பிறப்பித்துள்ளது.