சாய் பல்லவியின் தமிழ்ப் படத்தின் தலைப்பு மாற்றம் - காரணம் இது தான்!

‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வந்த நிலையில், தமிழ் சினிமாவில் அவரை அறிமுகப்படுத்த பல இயக்குநர்கள் முயற்சித்து வந்தார்கள்.
ஆனால், அனைவருக்கும் நோ சொன்ன சாய் பல்லவி, இயக்குநர் விஜய் சொன்ன கதை பிடித்துப் போக அவருக்கு மட்டும் ஓகே சொன்னார்.
சாய் பல்லவியை வைத்து விஜய் இயக்கி வந்த படத்திற்கு ‘கரு’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், சினிமா வேலை நிறுத்தத்தால் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஆனால், ‘கரு’வாக அல்ல ‘தியா’ வாக. ஆம், இப்படத்தின் தலைப்பு ‘தியா’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரணம், கடந்த பிப்ரவரி மாதம் ஜே.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற நிறுவனம் ‘கரு’ என்ற தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், தங்களின் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.
இதன் காரணமாக, படத்தின் தலைப்பை ‘தியா’ என்று இப்படத்தை தயாரித்துள்ள லைகா புரொடக்ஷன்ஸ் மாற்றம் செய்துள்ளது.