May 02, 2018 06:09 AM

பெண்களுக்கு தேவையானதை பெண்கள் போராடினால் பெற முடியும் - இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

பெண்களுக்கு தேவையானதை பெண்கள் போராடினால் பெற முடியும் - இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை  நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித், பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, ப்ரேம், விவேக் பிரசன்னா, சுளில் குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம். நமக்காக நாம பேசுகிறோம்னு பார்க்கும் போது அதை நான் ரொம்ப சூப்பரா பார்கிறேன். ஒதுக்குதல் சாதி, மதம்னு பல்வேறு பிரிவு இருப்பதை போல் பெண்கள் மீதான ஒதுக்குதல் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாக இயல்பா இன்று வரையில் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள் அவர்களின் வெளிப்பாடாய் தான் இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன். 

 

இந்த சங்கம் நிச்சயமா ரொம்ப வீரியமா செயல் படனும் ஏன்னா பெண்கள் மீது பாலியல் சுரண்டல் போன்றதை தடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணை பற்றி வந்த விமர்சனம் என்னன்னா அவள் ஒழுங்கா ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாங்க குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கா, இல்லை அதன் நடத்தை காரணமாக இருக்கா. பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்கள் தான் காரணம் என்று சொல்றது ரொம்ப இயல்பா ஏற்றுக்கொள்ளும் வடிவமாகிவிட்டது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவத்தை உடைக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும், அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும். நமக்கு வர பிரச்சனைய இன்னொருத்தர்கிட்ட சொல்றதே முட்டால் தனம், உனக்கு பசிச்சா நீ தான் சாப்பிடனும். பிரச்சனைகளை தீர்க்கும் சங்கமாக இது இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசுகையில், “எங்கள் பயனத்தில் எப்பவுமே ஒரு பெண் இருந்திருக்காங்க. கௌசிகா, சீதா யாமினி இவங்க எப்பவுமே தனித்துவம் வாய்ந்தவங்களா தான் இருப்பாங்க. என்னால முடிஞ்ச அனைத்து உதவியும் நான் செய்வேன். நான் ஏற்கனவே அவர்களிடம் உறுதி அளித்துவிட்டேன். அதேபோல் அவங்க கிட்ட நான் ஏற்கனவே நீங்க நூறு பேரை பார்த்திருந்திங்கனா அதில் இரண்டு பேர் கண்டிப்பா நிராகரிப்பாங்க, அதனால அதை காதில் வாங்காதீங்க மிச்சம் இருக்குற தொண்ணுத்தி எட்டு பேர் சொன்ன நல்லதை மட்டும் எடுத்துக்கோங்க அப்படின்னு சொல்லிருக்கேன். இந்த சங்கம் பெரிய அளவுல போகனும் மாற்றத்தை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

SIFWA இணையதளம் மற்றும் "திரையாள்" என்ற காலாண்டு இதழையும் இந்த விழாவில் வெளியிட்டனர். 

 

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் : வைஷாலி சுப்ரமணியன் (தலைவர் ), ஏஞ்சல் சாம்ராஜ் (துணைத்தலைவர் ) , ஈஸ்வரி.V.P (பொது செயலாளர் ), மீனா மருதரசி.S (துணை செயலாளர் ) , கீதா.S (பொருளாலர் ).