’தனி ஒருவன் 2’-வில் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்!

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தாலும், ரீமேக் இயக்குநர் என்ற இமேஜுக்குள் சிக்கி தவித்த இயக்குநர் மோகன் ராஜா, தனது வெற்றியை கொண்டாட முடியாமல் திணறி வந்தார். எப்படியாவது ரீமேக் இயக்குநர் என்ற இமேஜை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா, அந்த ஒரு படத்தில் தன் மீது இருந்த ரீமேக் இயக்குநர் என்ற இமேஜை உடைத்ததோடு, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையே தன்னை திரும்பி பார்க்கும்படி செய்தார்.
இயக்குநர் மோகன் ராஜாவின் சினிமா வாழ்க்கையை மாற்றிய ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமிக்கும் சினிமாவில் இரண்டாம் வாழ்க்கையை கொடுத்தது. அப்படத்தில் வில்லனாக நடித்தாலும், ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்த அரவிந்த்சாமி, தற்போது பிஸியான ஹீரோவாக்கியுள்ளார்.
தற்போது, ‘தனி ஒருவன் 2’ படத்தை ஆரம்பித்திருக்கும் மோகன் ராஜா, ஹீரோ ஜெயம் ரவி, ஹீரோயின் ஆகியோரை தேர்வு செய்தாலும், வலுவான வில்லன் கதாபாத்திரத்திற்கும் மட்டும் நடிகரை தேர்வு செய்யாமல் இருந்தார். முதல் பாகத்தைக் காட்டிலும், இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் மோகன் ராஜா, வில்லன் வேடத்தில் முக்கியமான நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், ‘தனி ஒருவன் 2’ வில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை வில்லனாக நடிக்க வைக்க மோகன் ராஜா முடிவு செய்திருக்கிறாராம். இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.