Nov 30, 2020 06:05 AM

‘அல்டி’ விமர்சனம்

fbb26d313bc459f23bc994087411cbe0.jpg

Casting : Anbu Mayilsami, Sentrayan, Yazi, Manisha Jith, Robert, Marimuthu

Directed By : MJ Usen

Music By : Srikanth Deva

Produced By : Shake Mohamed and Rahmathulla

 

செல்போன் திருட்டை மையமாக வைத்து, விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இந்த ‘அல்டி’ அல்டிமேட்டாக இருக்கிறதா, என்பதை பார்ப்போம்.

 

அன்பு, சென்ராயன், யாசி ஆகிய மூன்று நண்பர்களும் சந்தர்ப்ப சூழ்நிலையால் செல்போன் திருடுவதில் ஈடுபடுகிறார்கள். பிறகு அதையே தங்களது வேலையாக தொடர்கிறாரகள். அப்போது, கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ மகனின் ஐபோன் இவர்களுக்கு கிடைக்க, அந்த ஐபோனில் இருக்கும் வீடியோ ஒன்றுக்காக போலீஸ் இவர்களை துரத்துகிறது. மறுபக்கம், மகனை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கும் எம்.எல்.ஏ-வும் துரத்த, அவர்களிடம் இருந்து மூன்று இளைஞர்களும் தப்பித்தார்களா இல்லையா, எம்.எல்.ஏ-மகனை கொலை செய்தது யார்? என்பதை விறுவிறுப்பாகவும், பல ட்விஸ்ட்டுகளுடனும் சொல்வது தான் படத்தின் கதை.

 

காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்றாலும் பெரும் முயற்சி எடுத்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பெரிதும் மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. சில இடங்களில் அவரது முயறி வீண் போனாலும், அனுபவம் மிக்க சென்ராயன் தனது நடிப்பு மூலம் சரிக்கட்டி விடுகிறார். யாசிப்பும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக கையாண்டுள்ளார். 

 

நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஜித்தை மறந்து போகும் அளவுக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும், பாடல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நின்றுவிடுகிறார்.

 

நடன இயக்குநர் ராபர்ட் போலீஸ் கதாப்பாத்திரத்தில் வில்லத்தனத்தை காட்டி ரசிக்க வைக்கிறார். நடிப்பதில் அடக்கி வாசித்தாலும், அவரது இந்த முயற்சி ”அடடே...” போட வைத்துள்ளது. எம்.எல்.ஏ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மாரிமுத்து, ஏ.வெங்கடேஷ், ‘பசங்க’ சிவகுமார், சிந்து குமாரி ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கானா வகையிலான பாடல்களும், மெல்லிசை வகையிலான டூயட் பாடலும் ரசிக்க வைக்கிறது. ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், வில்ஸியின் படத்தொகுப்பும் திரைக்கதையின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது.

 

இதுவரை யாரும் அறிந்திராத செல்போன் திருட்டு மற்றும் அதன் பின்னணியை களமாக கொண்டு, இயக்குநர் எம்.ஜே.உசேன், விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். 

 

படத்தின் முதல் பாதியில், செல்போன் திருட்டு குறித்த சம்பவங்களை சொல்லி திரைக்கதையில் சுவாரஸ்யத்தை சேர்ப்பவர், இரண்டாம் பாதியில், ஒரு கொலையின் பின்னணியை வைத்து திரைக்கதையை சஸ்பென்ஸாக நகர்த்திச் செல்லும் யுக்தி பாராட்டக்கூடியது.

 

முதல் பாதியில் வரும் ஹீரோ மற்றும் அவரது நண்பர்கள் இரண்டாம் பாதியில் காணாமல் போய் விட்டாலும், ”அடுத்தது என்ன நடக்கும்”, என்ற எதிர்ப்பார்ப்புடன் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

 

படத்தில் சில குறைகள் இருந்தாலும், அவற்றை ரசிகர்கள் மறந்து படத்துடன் ஒன்றிவிடும் அளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் எம்.ஜே.உசேனின் இந்த ‘அல்டி’ அல்டிமேட்டாகவே உள்ளது.

 

ரேட்டிங் 3.5/5