Nov 18, 2023 07:04 PM

’அம்பு நாடு ஒம்பதுகுப்பம்’ திரைப்பட விமர்சனம்

a4284926694579143bc1bb6b59682892.jpg

Casting : Sangagiri Manikkam, shashitha, Vikram, Prabhu Manikam, Madhan, Ramesh Mithran

Directed By : G Rajaji

Music By : Antony Dass and James Vasanthan

Produced By : PK Films - Boopathi Karthikeyan

 

டெல்டா மாவட்டங்களில் நடக்கும் சாதி வன்கொடுமைகளை மையமாக வைத்து துரை குணா என்பவர் எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலை மையமாக கொண்டு ஜி.ராஜாஜி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’. சிறிய முதலீட்டில், சாதி வன்கொடுமைகளின் வலியை மக்களிடம் கடத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தை பி.கே.பிலிம்ஸ் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

 

டெல்டா மாவட்டத்தில் சில கிராமங்களை உள்ளடக்கிய நாடு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதில் உள்ள ஒரு கிராமத்தில் உயர் சாதி என்று சொல்லக்கூடிய இரு குழுக்கள், கீழ் சாதி என்று சொல்லக்கூடிய சில சமூகத்தினரை அடிமைப்படுத்தி வாழ்வதே தமது கெளரவம் என்று இருக்கிறார்கள்.

 

வழக்கம் போல் மேல் சாதியினர் என்று சொல்லிக்கொண்டு சக மனிதனை பல தலைமுறைகளாக அடிமைப்படுத்திக் கொண்டு இருக்க, பழைய தலைமுறை வாழ்ந்த நிலையை மாற்ற தற்போதைய தலைமுறை முயல்கிறது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் தற்போதைய தலைமுறை இளைஞர்களில் ஒருவரான விக்ரமை அவரது தந்தை சங்ககிரி மாணிக்கம், தாய் ஷர்ஷிதா கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்.

 

இதற்கிடையே, கோவில் திருவிழாவின் போது பூசாரியின் தட்டில் இருந்து இளைஞர் விக்ரம் விபூதி எடுத்து விடுகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பூசைத் தட்டைத் தொடுவதா! என்று பூசாரியும், மேல் சாதி என்று சொல்லிக்கொள்பவர்களும் கொதித்தெழுகிறார்கள். இதையடுத்து, தங்களது நாடு என்ற அமைப்பு மூலம் பஞ்சாயத்தை கூட்டி, அந்த இளைஞருக்கு தண்டனை கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட, சமூக ஆர்வலர்களும், சமூக நீதி அறிந்த பட்டதாரிகளும் இளைஞருக்கு ஆதரவாக நிற்பதோடு, நாடு பஞ்சாயத்துக்கு கட்டுப்படாமல் சட்ட ரீதியாக பிரச்சனையை எதிர்கொள்ள முடிவு செய்கிறார்கள்.

 

சட்ட ரீதியாக சென்றால், தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதோடு, இனி பஞ்சாயத்து, ஆண்ட சாதி என்றெல்லாம் பெருமை பேச முடியாது என்ற உண்மையை உணரும் மேல் சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள், குறுக்கு வழியில் சென்று தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்ய, அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சங்ககிரி மாணிக்கம், கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். மகனை எப்படியாவது படித்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவர் சந்திக்கும் அவமானங்களை சாதாரணமாக கடந்து செல்வதும், அதே மகனுக்கு ஏற்பட்ட சோக நிலையை கண்டு துடிக்கும் காட்சிகளில் ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார்.

 

அம்மாவாக நடித்திருக்கும் ஷர்ஷிதா, விக்ரம், பண்ணையாராக நடித்திருக்கும் பிரபு மாணிக்கம், மதன், ரமேஷ் மித்ரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிந்தாலும், முதல் படத்தில் தங்களால் முடிந்தவரை கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பது பாராட்டுக்குரியது.

 

அந்தோணி தாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாடல் வரிகள் அனைத்தும் உருக்கமாகவும், யோசிக்க வைக்கவும் செய்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

தமிழக கிராமங்களில் சாதி வன்கொடுமைகள் மிக சாதாரணமாக நடந்துக்கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் இயக்குநர் ஜி.ராஜாஜி, தற்போதைய நவீன காலக்கட்டத்திலும், சக மனிதனை அடிமையாக பார்க்கும் அற்ப புத்திக்கொண்ட மக்களின் வன்மத்தை காட்சிகளின் மூலம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

சாதி பிரச்சனை பேசும் படம் என்றாலும், ஒரு சமூகத்தின் வாழ்வியல், அம்மக்களின் பிரச்சனைகள், சந்தோஷங்கள், அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முறை ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி படத்தை பார்வையாளர்களிடம் எளிதில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜாஜி.

 

திரைக்கதை, நடிகர், நடிகையர், படமாக்கிய விதம் ஆகியவற்றில் பல குறைபாடுகள் இருந்தாலும் அவை அனைத்தும் பொருளாதார பற்றாக்குறையால் வந்த குறைகள் என்பது தெளிவாக தெரிகிறது. அத்தகைய குறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படைப்பாக பார்த்தால் இந்த ‘அம்பு நாடு ஒம்பது குப்பம்’ சக மனிதனை அடக்கி ஆள நினைக்கும் பெரும் கூட்டத்தை எதிர்த்து சுயமரியாதையோடு வாழ நினைக்கும் மக்களின் வலியை மிக சிறப்பாக பதிவு செய்திருக்கும் படமாக வெற்றி பெற்றிருக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5