Jul 04, 2022 05:58 AM

’ஆன்யா’ஸ் டுடோரியல்’ இணைய தொடர் விமர்சனம்

4fa293dd3301eb30940857cfdb6b0e76.jpg

Casting : Regina Casandra, Nivdhitha Sathish

Directed By : Pallavi Gangireddy

Music By : Music

Produced By : ARKA Media

 

ரெஜினா கசண்ட்ரா மற்றும் நிவேதிதா சதிஷ் நடிப்பில், பல்லவி கங்கிரெட்டி இயக்கத்தில், அர்கா மீடியா தயாரிப்பில் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இணைய தொடர் ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’.

 

கொரோனா ஊரடங்கு காலத்தில் கதை நடக்கிறது. அக்கா, அம்மா என்று வாழும் நிவேதிதா சதிஷ், தனது குடும்பத்தாருடன் சண்டை போட்டுக்கொண்டு தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிவேதிதா வீட்டை தவிர மற்ற வீடுகளில் ஆள் யாரும் இல்லை. தனியாக இருக்கும் நிவேதிதா, இன்ஸ்டாகிராமில் ஆன்யா’ஸ் டுடியோரில் என்ற பக்கத்தை தொடங்கி அதில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார். அப்போது தனது வீட்டில் பேய் இருப்பது போல பொய்யான விஷயத்தை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அதற்கு அதிக லைக்குகள் கிடைத்ததோடு, அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரிக்கிறது.

 

இதற்கிடையே, பேய் இருப்பதாக நிவேதிதா பொய் சொன்னாலும், அவர் வீட்டில் நிஜமாகவே ஒரு பேய் இருப்பதோடு, நிவேதிதாவின் இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்பவர்களுக்கு அந்த பேய் தெரிகிறது. நிவேதிதாவின் இன்ஸ்டா லைவில் அவருடன் இருக்கும் பேயை பார்ப்பவர்களை அந்த பேய் நிவேதிதா உருவத்தில் வந்து கொலை செய்கிறது. அந்த பேய் யார்? நிவேதிதாவுக்கும் அந்த பேய்க்கும் என்ன தொடர்பு? அதனிடம் இருந்து நிவேதிதா தப்பித்தாரா? இல்லையா? என்பதை வழக்கமான பாணியில் சொல்லாமல் திடுக்கிடும் காட்சிகளுடனும், குழப்பமான திரைக்கதையுடனும் சொல்லியிருக்கிறார்கள்.

 

குறிப்பிட்ட சில லொக்கேஷன்களில் கதை நகர்ந்தாலும், முதல் எப்பிசோட் முதல் கடைசி எப்பிசோட் வரை நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரெஜினா கசண்ட்ரா மற்றும் நிவேதிதா சதிஷ் இருவரும் அக்கா தங்கை கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்கள். நிவேதிதாவுக்கு நடிக்க ஏகப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. அவரும் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார். அவரின் அக்காவாக நடித்திருக்கும் ரெஜினா கசண்ட்ரா, தனது தங்கையின் நிலை பற்றி கவலைப்படுவதும், அவரிடம் சண்டை போடுவது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

 

ரெஜினா மற்றும் நிவேதிதா இருவரும் நடிப்பில் அசத்தியிருந்தாலும், அதிகமாக ஆங்கிலத்தில் பேசுவதும் குறிப்பிட்ட ஆங்கில ஆபாச வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பது சற்று நெருடலாக இருக்கிறது.

 

தொடரில் நடித்திருக்கும் மற்ற கதாப்பாத்திரங்களில் சொல்லும்படி யாரும் இல்லை என்றாலும், அனைத்து கதாப்பாத்திரங்களும் அதிகம் ஆங்கில வசனங்கள் பேசுவது படம் பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது.

 

சோசியல் மீடியாக்களில் பிரபலமாவதற்காக கண்டதை வெளியிடும் இளசுகளின் மனநிலை எப்படி பாதிக்கப்படுகிறது, என்ற கருவுக்கு திகில் ஜானர் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் பல்லவி கங்கிரெட்டி படம் பார்ப்பவர்களை பதற வைத்தாலும், பல விஷயங்களை விரிவாக சொல்லாமல் விட்டிருப்பது சற்று சலிப்படைய செய்கிறது.

 

தொடரின் ஆரம்பம் எதிர்ப்பார்ப்போடு நகர்ந்தாலும் இரண்டாம் பாதியின் போது நிவேதிதா பறப்பது, பிறர் இடங்களுக்கு செல்வது போன்ற மாயாஜால சம்பவங்கள் சினிமாத்தனமாக உள்ளது. அதே சமயம், மேக்கிங் மிரட்டலாக இருக்கிறது.

 

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக ஒளிப்பதிவு மற்றும் கலர் டோன் ஆகியவை படத்திற்கு மிகபெரிய பலம். அதிலும், படத்தின் லொக்கேஷன்கள்  படம் பார்ப்பவர்களுக்கு பயம் ஏற்படும் வகையில் இருக்கிறது.

 

திரைக்கதை மற்றும் கதை நகர்த்தலில் இயக்குநர் பல்லவி கங்கிரெட்டி சற்று தடுமாற்றம் அடைந்திருந்தாலும் மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘ஆன்யா’ஸ் டுடியோரில்’ ஆடியன்ஸை அச்சப்பட வைக்கும்.

 

ரேட்டிங் 3/5