Dec 09, 2023 04:28 PM

’அவள் பெயர் ரஜ்னி’ திரைப்பட விமர்சனம்

90e48400a427d8d4021b4092292fc526.jpg

Casting : Kalidass Jeyaram, Namitha Pramod, Reba Monica John, Saiju Kurup, Ashwin Kumar, Ramesh Kanna, Karunakaran, Lakshmi Gopalsamy

Directed By : Vinil Scariah Varghese

Music By : 4 Musics

Produced By : Navarasa Films - Sreejith KS, Blessy Sreejith

 

நமீதா ப்ரமோத்தின் கணவர் சைஜு க்ரூப், மர்ம நபரால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நமீதா ப்ரமோத்தின் மீதும் கொலை முயற்சி நடக்கிறது. அவரது தம்பியான நாயகன் காளிதாஸ் ஜெயராம் அக்காவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதோடு, கொலைக்கான பின்னணியையும், அந்த கொலையாளி யார்? என்பதையும் துப்பறிந்து கண்டுபிடிப்பதே ‘அவள் பெயர் ரஜ்னி’.

 

நாயகனாக நடித்திருக்கும்  காளிதாஸ் ஜெயராம், துப்பறிவதில் காவல்துறையை விட அதிக திறன் கொண்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பதோடு, அக்கா மீதான பாசத்தையும், அவர் வாழ்வில் நடந்த மர்மத்தையும் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீவிரத்தை தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

நாயகனின் சகோதரியாக நடித்திருந்தாலும் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களின் கவனத்தை எளிதாக ஈர்த்து விடும் நமீத ப்ரமோத், கண்களின் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக காவல்துறை அவரிடம் விசாரிக்கும் போது அவரது நடிப்பு மிக சிறப்பு.

 

படத்தின் தலைப்புக்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி கோபால்சாமியின் மிரட்டலான நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரெபா மோனிகா ஜான் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அஸ்வின் குமார், சைஜு க்ரூப், ரமேஷ் கண்ணா, கருணாகரன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தங்களது இருப்பைக்காட்டும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை தூக்கி பிடித்திருக்கிறது. 4 மியூசிக்ஸ் இசை மற்றும் தீபு ஜோசப்பின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

 

தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் திகில் அம்சத்தை சேர்த்து வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் வினிஸ் ஸ்கரியா வர்கீஸ். 

 

திரைக்கதையில் சில இடங்களில் இருக்கும் தொய்வு படத்திற்கு பலவீனமாக இருந்தாலும், மையக்கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நட்சத்திர தேர்வு போன்றவை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தில் அவ்வபோது காட்டப்படும் ரஜினிகாந்த் முகம் மற்றும் நாயகனின் மாஸ் காட்சிகள் ரசிகர்கள் சோர்வடையாமல் இருக்க உதவியிருப்பது போல், துப்பறியும் காட்சிகள் திரைக்கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்த உதவியிருக்கிறது.

 

மொத்தத்தில், பழகிய கதை என்றாலும் கூடுதல் அம்சங்களை சேர்த்து புதிய வடிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ‘அவள் பெயர் ரஜ்னி’ ரசிகர்களை ஏமாற்றவில்லை.

 

ரேட்டிங் 3/5