Nov 29, 2019 08:34 AM

’அழியாத கோலங்கள் 2’ விமர்சனம்

6c1bceedd0e930bbd905172d514f7cfc.jpg

Casting : Prakash Raj, Nazar, Revathi, Archana, Eshwari Rao

Directed By : MR Bharathi

Music By : Aravind Sidhartha

Produced By : Valli Cine Arts - Valliyammai Azhagappan

 

பிரகாஷ்ராஜ், நாசர், ரேவதி, அர்ச்சனா, ஈஸ்வரிராவ் ஆகியோரது நடிப்பில், எம்.ஆர்.பாரதி இயக்கத்தில், வள்ளியம்மை அழகப்பன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘அழியாத கோலங்கள் 2’ எப்படி என்று பார்ப்போம்.

 

பிரபல எழுத்தாளரான பிரகாஷ்ராஜ், சாகித்ய அகடெமி விருது பெறுகிறார். டெல்லிக்கு சென்று விருது பெறுபவர், உடனடியாக விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வந்து தன்னுடைய வீட்டுக்குப் போகாமல், தன்னுடன் கல்லூரியில் படித்த தோழியான அர்ச்சனாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்திப்பதோடு, அன்று இரவு அவரது இல்லத்திலேயே தங்குகிறார். அப்போது பிரகாஷ்ராஜின் உடல் நிலை திடீரென்று பாதிக்கப்பட்ட, அதில் அவர் உயிரிழந்துவிடுகிறார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, பிரகாஷ்ராஜ் - அர்ச்சனா இடையில் இருக்கும் உறவை சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பிரகாஷ்ராஜ் - அர்ச்சனா இடையிலான உறவின் ஆழத்தையும், அவர்களது உறவு குறித்து பிரகாஷ்ராஜின் மனைவியான ரேவதியின் கண்ணோட்டத்தையும், நாவல் படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் சொலியிருப்பது தான் படத்தின் கதை.

 

தான் எழுதும் ஒவ்வொரு படைப்புகளிலும் தனது காதலும், தனது காதலியும் நிறைந்திருப்பதை, 24 வருடங்கள் கழித்து தனது காதலிக்கு சொல்ல நினைத்த ஒரு எழுத்தாளரின் காதல் கதையின் வலியையும், அதை சுமந்த அவரது சுகமான அனுபவத்தையும், எளிமையாகவும், வலிமையாகவும் இயக்குநர் எம்.ஆர்.பாரதி சொல்லியிருக்கிறார்.

 

எழுத்தாளராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், அவரது தோழியாக நடித்திருக்கும் அர்ச்சனா, பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்திருக்கும் ரேவதி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நாசர் என இந்த முக்கியமான நான்கு நடிகர்களும் நான்கு தூண்களாக படத்தை சுமந்திருக்கிறார்கள். 

 

Azhiyatha Kolangal 2

 

ஒரு வீடு தான் லொக்கேஷன், நான்கு நடிகர்கள் தான் படம் முழுவதும் வருகிறார்கள். தோற்றுப்போன காதல் குறித்து பேசும் முன்னாள் காதலர்கள், தற்போதைய நண்பர்கள், கணவரைப் பற்றி புரிந்து வைத்திருக்கும் மனைவியின் எதார்த்தமான எண்ணம், ஆண், பெண் தனிமையில் இருந்தால், அவர்கள் உடல் ரீதியான தொடர்பில் தான் இருப்பார்கள், என்று தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகம்,  ஆகியவைப் பற்றி பேசும் இப்படம், திரைப்படமாக அல்லாமல் ஒரு எழுத்தாளரின் வாழ்வியலையோ அல்லது அவரைப் பற்றிய நாவலையோ படித்தது போல உள்ளது.

 

மற்ற திரைப்படங்கள் போல மசாலாத்தனம் இல்லை என்றாலும், இந்த படமும் நம்மை ஏதோ ஒரு வகையில் ஈர்க்கிறது.

 

இளம் நடிகர்கள் இல்லை என்றாலும், இந்த மூத்த நடிகர்களின் அனுபவமிக்க நடிப்பும், அவர்களை கையாண்ட இயக்குநர் எம்.ஆர்.பாரதியின் திரைக்கதை அமைப்பும் படத்தை ரசிக்க வைக்கிறது.

 

அரவிந்த் சித்தார்த்தாவின் இசையில், வைரமுத்துவின் வரியில் இடம் பெறும் ஒரே ஒரு பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதையுடனே பயணிக்கிறது. ராஜேஷ் கே.நாயரின் ஒளிப்பதிவு காட்சிகளைக் காட்டிலும் கதாபாத்திரங்களின் முகபாவனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. மு.காசி விஸ்வநாதன், இப்படிப்பட்ட ஒரு படத்தையும் அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய விதத்தில் காட்சிகளை கச்சிதமாக வெட்டியிருப்பது சிறப்பு.

 

பிரபலமான நாவல்களை திரைப்படமாக்கும் இயக்குநர்கள் மத்தியில், ஒரு திரைப்படத்தையே நாவலாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பாரதி.

 

Azhiyatha Kolangal 2 Review

 

இலக்கியத்தில் ஈடுபாடு உள்ளவர்களையும், உலக சினிமா விரும்பிகளையும் ஈர்க்கும் விதமாக இருக்கும் இந்த ‘அழியாத கோலங்கள் 2’ ஜனரஞ்சகமான ரசிகர்களுக்கான படமாக இல்லை என்றாலும், தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் இடம் பெறும் தகுதி மிக்க படமாக உள்ளது.

 

ரேட்டிங் 3/5