Dec 25, 2021 07:25 AM

’பிளட் மணி’ விமர்சனம்

49a833109fecc1a311d49849231ba7fd.jpg

Casting : Priya Bhavani Shankar, Shiris, Kishore, Panchu Subbu

Directed By : Sarjun KM

Music By : Sathish Raghunandan

Produced By : Emperor Entertainment - Irfan Malik

 

பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளட் மணி’ திரைப்படத்தை சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார். நேரடியாக ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது, என்பதை பார்ப்போம்.

 

அரபு நாட்டில் வேலைக்கு போகும் கிஷோர் மற்றும் அவரது தம்பி கொலை வழக்கு ஒன்றில் சிக்கிக்கொண்டு தூக்கு தண்டனைக்கு ஆளாகிறார்கள். அவர்களது தண்டனை நிறைவேற 30 மணி நேரம் இருக்கும் போது, அந்த தகவல் தமிழகத்தில் இருக்கும் பத்திரிகையாளர் பிரியா பவானி சங்கருக்கு கிடைக்க, அப்பாவியான அவர்களை காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். அவருக்கு சக பத்திரிகையாளரான ஷிரிஷ் உதவி செய்ய, இருவரும் சேர்ந்து அவர்களை காப்பாற்றினார்களா, இல்லையா என்பதை சுருக்கமாக சொன்னாலும் மனதுக்கு மிக நெருக்கமாக சொல்வதே ‘பிளட் மணி’.

 

வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், படம் பார்ப்பவர்களை பாதிக்கும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

பத்திரிகையாளராக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். அலுவலகத்தில் ஏற்படும் அவமானங்களை கடந்து, அப்பாவிகளை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற துடிக்கும் காட்சிகளில் நடிப்பில் மிளிர்கிறார்.

 

கதையின் மற்றொரு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிரிஷ், அமைதியான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல்  பிரியா பவானி சங்கர் தவிக்கும் போதெல்லாம், தனது ஐடியா மூலம் அவருக்கு வழி காட்டுவதோடு, கைபிடித்து அழைத்து செல்லும் ஷிரிஷின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிக்கும்படி இருக்கிறது.

 

Shirish

 

கிஷோர், பஞ்சு சுப்பு, ராட்சசன் வினோத் சாகர், கலைமாமணி ஸ்ரீலேகா ராஜேந்திரன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களின் பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் சதிஷ் ரகுநந்தனின் பின்னணி இசையும், ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவும் கதைக்களத்துடன் படம் பார்ப்பவர்களையும் பயணிக்க வைக்கிறது.

 

அரபு நாட்டு நீதித்துறையில் இருக்கும் பிளட் மணி என்ற அம்சத்தை மையப்படுத்தி சங்கர் தாஸ் எழுதிய திரைக்கதை மற்றும் வசனங்களை, மிக திறமையாக கையாண்டிருக்கும் இயக்குநர் சர்ஜுன் கே.எம், 90 நிமிடத்தில் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த ஒரு மிக நேர்த்தியான சஸ்பென்ஸ் டிராமாவாக கொடுத்திருக்கிறார்.

 

ரேட்டிங் 3/5