Dec 13, 2019 05:19 AM

‘சாம்பியன்’ விமர்சனம்

9cc2b66e95b0f02de29fedd1ab78fcc4.jpg

Casting : Vishwa, Naren, Mirunalini, Sowmya Pandian, Manoj Bharathiraja

Directed By : Susienthiran

Music By : Arrol corelli

Produced By : K.Raghavi

 

கபடி மற்றும் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் எடுத்த சுசீந்திரன் முதல் முறையாக கால்பந்தாட்டந்தை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படம் ‘சாம்பியன்’. அறிமுக ஹீரோ விஷ்வா, மனோஜ் பாரதிராஜா, நரேன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி, என்று பார்ப்போம்.

 

வறுமை காரணமாக தொடர்ந்து கால்பந்தாட்டம் விளையாட முடியாமல் போகும் மனோஜ் பாரதிராஜா, தனது மகனை பெரிய கால்பந்தாட்ட வீரராக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்பாவின் ஆசைக்கு ஏற்ப ஹீரோ விஷ்வாவும் சிறு வயதிலேயே கால்பந்தாட்டத்தில் கெட்டிக்காரராக திகழ, திடீரென்று மனோஜ் பாராதிராஜா இறந்துவிடுகிறார். கணவரின் மரணத்திற்கு கால்பந்தாட்டமும் ஒரு காரணம் என்று நினைக்கும் மனோஜின் மனைவி, மகன் விஷ்வா கால்பந்தாட்டம் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கிறார். அம்மாவின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து கால்பந்தாட்டம் விளையாடும் விஷ்வாவின் ஆட்ட திறனை பார்த்து வியக்கும் தேசிய வீரரான நரேன், அவருக்கு பயிற்சி அளித்து, அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல நினைக்கும் போது, தனது அப்பா கொலை செய்யப்பட்ட உண்மை விஷ்வாவுக்கு தெரிய வர, அப்பாவின் மரணத்திற்கு பழி வாங்க துடிக்கும் விஷ்வாவின், விளையாட்டு பாதிக்கப்படுகிறது.

 

இதனை அறியும் நரேன், விஷ்வாவுக்கு நல்ல புத்தி சொல்லி, அவரது கவனத்தை மீண்டும் விளையாட்டு பக்கம் திருப்பும் போது, மனோஜ் பாரதிராஜாவை கொலை செய்த கும்பல், விஷ்வாவையும் கொலை செய்ய முடிவு செய்ய, விஷ்வா கால்பந்தாட்டத்தில் சாதித்தாரா, அல்லது தனது அப்பாவை கொன்ற கும்பலால் கொல்லப்பட்டாரா, என்பது தான் மீதிக்கதை.

 

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து சில படங்கள் வெளியானாலும், அவை ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமாக அமையவில்லை. விஜய் போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்திருந்தாலும், அப்படம் விஜய் படமாக மட்டுமே பார்க்கப்பட்டதே தவிர, ஒரு விளையாட்டு சம்மந்தமான படமாக பார்க்கப்படவில்லை. ஆனால், அந்த குறைகளை போக்கி, கால்பந்தாட்ட பிரியர்களையும், சினிமா ரசிகர்களையும் கவரும் விதத்தில் இந்த ‘சாம்பியன்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது படத்திற்கான மிகப்பெரிய பலம்.

 

இயக்குநர் சுசீந்திரனின் சமீபகால படங்கள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இந்த சாம்பியன் அவர் மீதான அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் விரட்டியடித்துவிட்டு மீண்டும் அவருக்கான இடத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

 

அறிமுக ஹீரோ விஷ்வா, முதல் படம் போல அல்லாமல், நான்கு ஐந்து படம் நடித்த அனுபவத்தோடு நடித்திருக்கிறார். ஜோன்ஸ் என்ற கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் விஷ்வா, கால்பந்தாட்டம் விளையாடுவதிலும், சண்டைக் காட்சிகளிலும் துறுதுறுவென்று இருக்கிறார். பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், விளையாட்டு வீரர் என்று அனைத்து காலக்கட்டத்திலும் அளவாக நடித்திருக்கும் விஷ்வா, பக்கத்து வீட்டு பையன் போல, சட்டென்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுபவர், ஆரம்பகால தனுஷை நினைவுப்படுத்துகிறார்.

 

கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் நரேனுக்கு, இப்படம் நிச்சயம் திருப்புமுனையாக இருக்கும். க்ளைமாக்ஸ் காட்சியில் நரேனின் நடிப்புக்கு ஒட்டுமொத்த திரையரங்கமே கைதட்டுவது உறுதி.

 

மிருனாளினி, செளமியா பாண்டியன் என இரண்டு ஹீரோயின்கள், இருவரும் கதையின் ஓட்டத்திற்கான கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.

 

ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜாவின் கதாபாத்திரமும், அதில் அவர் நடித்திருக்கும் விதமும் சிறப்பு. வில்லனாக நடித்திருக்கும் ஸ்டண்ட் சிவா, பிச்சைக்காரன் வினோத் ஆகியோரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

வரிசையாக கால்பந்தாட்ட படங்கள் வெளியானாலும், அவற்றில் எதிலுமே சாம்பியன்கள் இல்லை. ஆனால், சாம்பியன்கள் என்றால் யார்? என்பதை விவரிக்கும் விதமாக இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் இந்த சாம்பியன், உண்மையிலேயே சாம்பியனுக்கான பாராட்டை பெறும் படமாக இருக்கிறது.

 

குறிப்பாக, வட சென்னையில் உள்ள கால்பந்தாட்ட வீரர்கள் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் சுசீந்திரன், திரைக்கதையில் எதை எந்த அளவுக்கு சொல்ல வேண்டுமோ, அந்த அளவுக்கு சொல்லி, முழுமையான ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

 

அறிமுக ஹீரோ விஷ்வாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், நரேன் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் படத்தை சரியான முறையில் பேலன்ஸ் செய்திருக்கிறது. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் ரசிக்க வைக்கிறது.

 

சுஜித் சாரங்கனின் ஒளிப்பதிவும், அரோல் கரோலியின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. படத்தின் அனைத்து 

 

சுஜித் சாரங்கனின் ஒளிப்பதிவும், அரோல் கரோலியின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. படத்தின் அனைத்து காட்சிகளும் லைவ் லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருப்பதால், படம் பார்ப்பவர்களையும் வட சென்னையில் பயணிக்க வைத்திருக்கிறார்கள். அரோல் கரோலின் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும்படி இருக்கிறது. குறிப்பாக “கானா...கானா...” பாடல், காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பின்னணி இசையிலும் அரோல் கரோலி பின்னியிருக்கிறார்.

 

’வெண்ணிலா கபடி குழு’ எப்படி இயக்குநர் சுசீந்திரனுக்கு பெயர் வாங்கிக் கொடுத்ததோ அப்படி ஒரு பெயரை இந்த ‘சாம்பியன்’ அவருக்கு வாங்கிக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

மொத்தத்தில், இயக்குநர் சுசீந்திரன் தனது சமீபத்திய சில படங்கள் மூலம் இழந்த ’சாம்பியன்’ பட்டத்தை திரும்ப பெற்றுவிட்டார்.

 

ரேட்டிங் 4/5