Sep 29, 2023 06:21 AM

’சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

ccd9033fa005f7c794d1c3cb44c56300.jpg

Casting : Raghava Lawrance, Kangana Ranaut, Vadivelu, Radhika, Suresh Menon, Lakshmi Menon, Mahima Nambiar, Shrusti Dange, Subiksha, Ravi Mariya, Vignesh

Directed By : P.Vasu

Music By : MM Keeravani

Produced By : Lyca Productions - Subashkaran

 

ராதிகா மற்றும் குடும்பத்தாருக்கு தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதற்கு காரணம் குலதெய்வத்தை வழிபடாதது தான் என்று சாமியார் ஒருவர் சொல்கிறார். அதன்படி குலதெய்வத்தை வழிபடுவதற்காக ராதிகா மற்றும் குடும்பத்தார் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். காதல் திருமணத்தால் ராதிகாவை விட்டு பிரிந்த அவரது மகளின் பிள்ளைகளும், அவர்களின் பாதுகாப்பாளரான ராகவா லாரன்ஸும் அவர்களுடன் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். அவர்களுடைய குலதெய்வ கோவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருக்கிறது. கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இறந்து விடுவதோடு, அந்த கோவிலில் வெளிச்சம் வருவதற்கு சந்திரமுகி விடமாட்டாள், மீறி முயற்சித்தால் மரணம் தான், என்று சாமியார் ஒருவர் எச்சரிக்கிறார். குலதெய்வ கோவிலில் பூஜை செய்தால் மட்டுமே குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்பதால் எப்படியாவது பூஜை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ராதிகா குடும்பத்தாருக்கு ராகவா லாரன்ஸ் உதவ முன் வருகிறார். தனி ஒருவராக கோவிலை சுத்தப்படுத்த ராகவா லாரன்ஸ் கிளம்ப, அதன் பிறகு என்னவெல்லாம் கிளம்பியது, அதனால் ராதிகா குடும்பத்தார் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றில் இருந்து அவர்களை ராகவா லாரன்ஸ் எப்படி காப்பாற்றுகிறார், என்ற ரீதியில் கதை நகர்கிறது.

 

ரஜினியின் சாயல் நடிப்பில் வராமல் இருக்க ரொம்ப கஷ்ட்டப்பட்டதாக ராகவா லாரன்ஸ் சொல்லியிருந்தார். ஆனால், அவர் நடிக்கவே ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. முதல் பாதி முழுவதும் அவரது நடிப்பு ரசிகர்களை பதம் பார்த்து விடுகிறது. இரண்டாம் பாதியில் வேட்டையனாக சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் நடித்திருந்தாலும், காமெடி என்ற பெயரில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு சகிக்கவில்லை. 

 

சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத் நடிப்பு மற்றும் நடனம் இரண்டையும் அறைகுறையாக செய்திருக்கிறார். நடிப்பு தான் இப்படி என்றால் சந்திரமுகி என்ற பேரழகி கதாபாத்திரத்திற்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாமல் இருக்கிறார்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் இறங்கியிருக்கும் லட்சுமி மேனனை சக்கர நாற்காலியில் உட்கார வைத்தபோதே தெரிந்து விட்டது, அவரை வைத்து தான் ஆட்டத்தையே ஆரம்பிக்க போகிறார்கள் என்று. அதன்படியே நடந்தாலும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. அதேபோல், க்ளைமாக்ஸ் காட்சியில் அவருக்கு போடப்பட்ட மேக்கப் கொடுமையோ கொடுமை.

 

வடிவேலு வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், வேட்டையன் மற்றும் சந்திரமுகியிடம் அவர் பேசும் காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. 

 

ராதிகா, மக்ஹிமா நம்பியார், ஸ்ருதி டாங்கே, சுபிக்‌ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ் என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், படத்தில் அவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

 

காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டும் அல்ல அதே கதையை கதாபாத்திரங்களை மட்டும் மாற்றியமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் பி.வாசு, காட்சிகளை கூட அப்படியே காப்பியடித்திருப்பது படத்திற்கு தொய்வை கொடுக்கிறது.

 

படத்தில் குறைகள் இருந்தாலும் குடும்பமாக சென்று பார்க்க கூடிய விதத்தில் காட்சிகளை கையாண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. வடிவேலுவின் காமெடி, செங்கோட்டையன் வேட்டையனாக மாறுவது, பாடல்கள் போன்றவை படத்தை ரசிக்க வைக்கிறது. லாஜிக் பார்க்காமல் குடும்பத்துடன் இரண்டரை மணி நேரம் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான படம் ‘சந்திரமுகி 2’.

 

மொத்தத்தில்,  சாதிக்கவில்லை என்றாலும் சறுக்கவில்லை இந்த ‘சந்திரமுகி 2’.

 

ரேட்டிங் 2.8/5