Dec 25, 2020 07:15 AM

’சியான்கள்’ விமர்சனம்

b7a3c54ee2a6a5cc8a97550ea2449fc2.jpg

Casting : Karikalan, Riya Haridass, Nalini Kanth, CK Sathya

Directed By : Vaigarai Balan

Music By : Muththamizh

Produced By : KL Productions Karikalan

 

உறவுகளால் நிராகரிக்கப்படும் மூத்தவர்களின் குமுறல்கள்களை அழுத்தமாகவும் கமர்ஷியலாகவும் சொல்லியிருப்பது தான் ‘சியான்கள்’ பட கதை.

 

தென் மாவட்டங்களில் மூத்தவர்களை சியான் என்று அழைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த தலைப்புக்கு சொந்தக்காரர்களான நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரைசுந்தரம், சமுத்திரசீனி, சக்திவேல், நாராயணசாமி ஆகிய 7 பேரை சுற்றி நகரும் கதை, காதல், காமெடி என்று கமர்ஷியலாக நகர்ந்தாலும், குடும்ப உறவுகளில் இருந்து மூத்தவர்கள் எப்படி நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதையும், அவர்களுடைய முதிர்வு இன்னொரு குழந்தை பருவம் என்பதையும் அழுத்தமாகவும், அழகாகவும் சொல்லியிருக்கிறது.

 

படத்தில் இளம் ஹீரோவாக நடித்திருக்கும் கரிகாலன் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிகராக இருக்கிறார். எளிமையான அழகால் கவரும் நாயகி ரிஷா ஹரிதாஸ், கண்களால் காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் அழகு. தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் சி.கே.சத்யாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

 

சியான்களாக நடித்திருக்கும் 7 மூத்த நடிகர்களும் நடிகர்களாக அல்லாமல், அந்த ஊர் சியான்களாக வாழ்ந்திருப்பதோடு, ஒட்டு மொத்த மூத்தவர்களின் மன குமுறல்களையும், ஆசைகளையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும், பேரக் குழந்தையின் விமான பொம்மையை மறைத்து வைத்துக் கொண்டு, தனது ஆசையை மனைவியிடம் சொல்லும் நளினிகாந்தின் நடிப்பில், முதியவர்களும் குழந்தைகள் தான் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

 

Chiyangal

 

குடும்பத்திற்காகவே வாழ்பவர்கள் தங்களது வயது முதிர்விலாவது தங்களுக்காக வாழவேண்டும், அதற்கு அவர்களுடைய பிள்ளைகள் வழிவிட வேண்டும், என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர், மூத்தவர்களும் ஒரு குடும்பத்திற்கு முக்கியம் என்பதையும் காட்சிகளின் மூலம் உணர வைத்துள்ளார். வயதான பெண்மணி காதலை சொல்லும் இடம், ஒட்டு மொத்த பெண்களின் குமுறல்களாக உள்ளது. 

 

ஒளிப்பதிவாளர் பாபு குமாரின் கேமரா ஒரே ஊரை சுற்றி சுற்றி வந்தாலும், கோணங்களில் பல வித்தியாசங்களை காட்டியிருப்பதோடு, மனித உணர்வுகளையும் அழகாக படமாக்கியிருக்கிறது.

 

இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள பாடலாசிரியர் முத்தமிழின் பாடல்கள் அனைத்தும் இனிமை. அதிலும், “ஒட்டி ஒட்டி நானும் வாரேன்...” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ரகம். திரைக்கதையுடன் பயணித்திருக்கும் பின்னணி இசை கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை உணர வைக்கிறது.

 

பொழுதுபோக்கு அம்சங்களோடு ஒரு சிறப்பான கருத்தை, நல்ல கதாப்பாத்திர வடிவமைப்போடு சொல்லியிருக்கும் இயக்குநர் வைகறைபாலானை வெகுவாக பாராட்டலாம். 

 

கோவிலில் அன்னதானம் போடுபவர்கள் தங்கள் வீட்டு முதியவர்களுக்கு சரியான முறையில் உணவளிப்பதில்லை. இதுபோன்றவர்களால் தான் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், இந்த ‘சியான்கள்’ படம் ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்ல பாடமாகவும் அமைந்திருக்கிறது.

 

ரேட்டிங் 4/5