Mar 18, 2023 03:24 AM

’கோஸ்டி’ திரைப்பட விமர்சனம்

bd56ca0c140fe1bfe25a927cae7d3532.jpg

Casting : Kajal Agarwal, Yogi Babu, KS Ravikumar, Jay, Jegan, Redin Kingsly, Mayilsamy, Sriman, Urvashi, Radhika Sarathkumar, Subbu Panchu, Swaminathan, Mayilsamy, Suresh Menon, Sathyan

Directed By : Kalyan

Music By : Sam.CS

Produced By : Passion Stutios - Jayaram.G and Sudhan

 

சிறையில் இருந்து தப்பிக்கும் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொலை செய்ய திட்டமிட, அந்த திட்டத்தை முறியடித்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால் ஈடுபடுகிறார். இதற்கிடையே காஜல் அகர்வால் வீட்டில் பேய்கள் புகுந்து அவரை பயமுறுத்த அதனிடம் இருந்து தப்பிப்பதற்கு சாமியார்களின் உதவியை நாடுகிறார்.

 

ஒரு பக்கம் பேய் தொல்லை, மறுபக்கம் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் தொல்லை என்று இந்த இரண்டு கோஸ்டிகளிடமும் சிக்கி தவிக்கும் காஜல் அகர்வால், அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்? அவரை பயமுறுத்தும் பேய்கள் யார்? என்பதை காமெடியாக சொல்வதே ‘கோஸ்டி’ படத்தின் கதை.

 

கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தாலும் அவரை முழுமையாக பயன்படுத்த தவறியிருக்கிறார்கள். போலீஸ் வேத்தில் நடித்திருக்கும் காஜல் அகர்வால், காமெடி படம் என்பதால் காக்கி உடைக்கான கம்பீரம் இன்றி வலம் வருகிறார். ஒரு இடத்தில் அவருடைய உதடுகள் வசன உச்சரிப்போடு பொருந்தாதை இயக்குநரே கலாய்த்திருக்கிறார். 

 

யோகி பாபு, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டியின் காமெடி காட்சிகள் வழக்கமானவையாக இருந்தாலும், அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

காமெடி வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஐந்து இன்ஸ்பெக்டர்களை கொலை செய்யும் லட்சியத்தோடு பயணிப்பதும், அவர் ஒவ்வொருவரையும் கொலை செய்ய முயற்சிக்கும் போது, அங்கு நடக்கும் அலப்பறைகள் அனைத்தும் சிரிப்போ...சிரிப்பு.

 

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெய் கதாபாத்திரம் கதையோடு ஒன்றவில்லை என்றாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது. 

 

ஒரு காட்சியில் நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நடிகை ராதிகா நடித்திருக்கிறார்.

 

ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி, , ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன் என அனைவரும் அவர் அவர் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதையில் இல்லாத காட்சிகளையும் படமாக்கியிருப்பது போல், சம்மந்தம் இல்லாத காட்சிகள் ஏராளமாக வருகிறது.

 

சாம்.சி.எஸ்-இன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராக இருந்தாலும், இந்த கதைக்கு இது போதும் என்றே தோன்ற வைக்கிறது.

 

தொடர்ந்து காமெடி படங்களாகவே இயக்கி வரும் கல்யாண், மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே இப்படத்தை இயக்கியிருக்கிறாரே தவிர கதையோடு இயக்கவில்லை என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.

 

இரண்டு கதைகளை ஒன்றாக சேர்ந்து சொல்லியிருக்கும் இயக்குநர் கல்யாண், அவ்வபோது இரண்டு கதைக்கும் சம்மந்தம் இல்லாத காட்சிகளால் படத்தை குழப்பத்தோடு நகர்த்தினாலும், காமெடி காட்சிகளை வைத்து வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.

 

காஜல் அகர்வால், ஜெய், யோகி பாபு போன்ற நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்களை வைத்துக்கொண்டு காமெடி படம் எடுப்பது தவறில்லை, ஆனால் அவர்களை சரியாக  பயன்படுத்தாமல் விட்டிருப்பது படத்திற்கு தொய்வை கொடுக்கிறது. இருப்பினும், காமெடி காட்சிகளினால் படத்தில் இருக்கும் குறைகளை ரசிகர்கள் மறந்து சிரிக்கும்படி செய்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.

 

மொத்தத்தில், ‘கோஸ்டி’ சிரிக்க மட்டுமே.

 

ரேட்டிங் 2.5/5