Mar 17, 2019 08:15 AM

’ஜூலை காற்றில்’ விமர்சனம்

faa6e82c1ca55b5c842a03d8bbdc77df.jpg

Casting : Anand Nag, Anju Kuriyan, Samyuktha Menon, Sathish

Directed By : KC Sundaram

Music By : Joshua Sridhar

Produced By : Saravanan Palaniyappan

 

ஒரே கதையை, முக்கிய கதாபாத்திரங்களின் வெவ்வேறு கோணத்தில் சொல்லும் திரைப்படங்கள் சில ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், காதல் கதையை அப்படி சொல்லும் முதல் படமாக வெளியாகியிருக்கும் ‘ஜூலை காற்றில்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

சரவணன் பழனியப்பன் தயாரிப்பில், கே.சி.சுந்தரம் இயக்கத்தில் அறிமுக நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜூலை காற்றில்’ தலைப்புக்கும் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட தலைப்பே இது காதல் கதை என்று சொல்லிவிடும் என்பதால் தான், இப்படி ஒரு தலைப்பை இயக்குநர் வைத்திருப்பார் போல.

 

பெரிய நிறுவனம் ஒன்றில் பெரிய பொறுப்பில் இருக்கும் ஹீரோ ஆனந்த் நாக், அஞ்சு குரியனை கண்டதும் காதல் வயப்படுகிறார். அஞ்சும் ஆனந்த் நாக்கை வெறித்தனமாக காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர்களும் ஓகே சொல்லி நிச்சயதார்த்தமும் நடந்துவிடுகிறது. ஆனாலும், காதலிலும், அஞ்சு குரியன் மீது பெரிய அளவில் ஈர்ப்பு இல்லாததால், ஆனந்த் நாக் அஞ்சு குரியனை பிரிகிறார். அப்படியே, சம்யுக்தா மேனனுடன் காதல் கொள்பவர், அவரை வெறித்தனமாக காதலிக்கிறார்.

 

சம்யுக்தா மேனனோ, தனக்கு தேவையானதை தானே தேர்வு செய்வதோடு, தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ விரும்பும் தைரியமான பெண்ணாக இருக்கிறார். சம்யுக்தா பிற ஆண்களிடம் பேசுவதையும், பழகுவதையும் ஆனந்த் நாக் தவறாக புரிந்துக் கொள்வதால், ஆனந்த் நாக்கின் காதலை சம்யுக்தா கைவிடுகிறார்.

 

இப்படி இரண்டு காதலில் தோல்வியடைந்ததால், மன நிம்மதிக்காக கோவா செல்லும் ஆனந்த் நாக், அங்கே ஒரு பெண்ணை பார்த்து, அவருடன் சில நாட்கள் பழகியதும், அவரை காதலிக்க முயற்சிக்க, அங்கு வரும் திருப்பத்தால், காதல் என்றால் என்ன, என்ன தான் காதலித்தாலும், அவர் அவரெக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருப்பதை புரிந்துக் கொள்ளும் ஆனந்த் நாக், தனது இரண்டு முன்னாள் காதலிகளிடம் தான் செய்த தவறுகளை புரிந்துக் கொள்வதோடு, அவர்களை மீண்டும் சந்திக்க முயற்சிக்க, பிறகு என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

காதல் தோல்வியால், ஆனோ பெண்ணோ துவண்டுவிடாமல், அடுத்த வேலையை நோக்கி நகர்வதோடு, அடுத்த காதலை நோக்கி நகர்வது தான் வாழ்க்கை என்பதை, இளசுகளுக்கு பிடித்த வகையிலும், பெரியவர்களை யோசிக்க வைக்கும் வகையிலும் இயக்குநர் கே.சி.சுந்தரம் படத்தை கையாண்டிருக்கிறார்.

 

சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த ஆனந்த் நாக், இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், எப்போதும் முகத்தில் ஒரே விதமான ரியாக்‌ஷனை கொடுப்பது தான் சற்று சலிப்படைய செய்கிறது. அதிலும், நன்பண், காதலி, பெற்றோர் என அனைவரிடமும் ஒரே மாதிரியாக பேசுவதும், எப்போதும் ஒருவிதமான குழப்பமாக இருப்பது போல முகத்தை வைத்திருப்பதை சற்று மாற்றியிருக்கலாம். இருந்தாலும், குழப்பவாதியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவே பொருந்தியிருக்கிறார்.

 

இயல்பான அழகோடு வலம் வரும் அஞ்சு குரியனின் நடிப்பும் இயல்பாகவே இருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல் தனது காதலின் எதிர்ப்பார்ப்பையும், காதல் தோல்வியின் வலியையும் உணர்த்தியிருக்கும் அஞ்சு குரியன், நல்ல கதைகளை தேர்வு செய்தால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆவது உறுதி.

 

தைரியமான பெண்ணாக நடித்திருக்கும் சம்யுக்தா மேனன், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார். மாடர்ன் பெண்கள் மீது இருக்கும் தவறான கண்ணோட்டத்தை உடைக்கும் விதமான கதாபாத்திரத்தை சம்யுக்தா நன்றாகவே கையாண்டிருக்கிறார்.

 

சதிஷின் காமெடி எப்போதும் போல சில சிரிக்க வைத்தாலும், பல ரம்பமாக அறுக்கிறது. இருந்தாலும், ஹீரோவின் இருக்கமான நடிப்பில் இருந்து ரசிகர்களை அவ்வபோது தனது ஜோக் மூலம் ரியாக்ஸ் செய்வது, ரசிகர்களையும் ரிலாக்ஸ் படுத்துகிறது.

 

கோவா பெண்ணாக நடித்திருப்பவரின் டூ பீஸ் காட்சிகள் ஆச்சரியத்தை கொடுத்தாலும், அப்பெண் அந்த ஆடையில் அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடித்திருப்பதோடு, காதலை பற்றியும், பெண்களுக்கான லிமிட் பற்றியும் புரிய வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

 

ஜோஸ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் அத்தனையும் செம. வரிகள் புரிவதோடு, இசையும் மனதை வருடி செல்கிறது. அப்பாடல் காட்சிகளை படமாக்குவதில் ஒளிப்பதிவாளர் சேவியர் எட்வர்ட்ஸ் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அவரது ஒளிப்பதிவு படத்திற்கு ராயல் லுக்கை கொடுத்திருக்கிறது.

 

காதல் தோல்வி என்றால் தாடி வச்சு, தண்ணி அடிச்சு சுத்துவது அல்ல, காதலிக்கும் போது செய்த தவறுகளை உணர்ந்து நம்மை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை, ஆண் மற்றும் பெண் மனநிலையில் இருந்து சொல்லியிருக்கும் இயக்குநர் கே.சி.சுந்தரத்தின் மேக்கிங் சிறப்பாக இருந்தாலும், திரைக்கதை சற்று வேக குறைவாக இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

இருந்தாலும், காதல் கதையில், ஒரே கதையை வெவ்வேறு விதமாக அவர் சொல்லிய புது முயற்சி பாராட்டும்படி இருக்கிறது. அதே சமயம், அதில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் படம் நூறு சதவீதம் பர்ப்பெக்ட்டாக இருந்திருக்கும்.

 

புதுமுகங்களை வைத்துக் கொண்டு லைட்டான காதல் கதையை வெயிட்டான உணர்வுகளோடு, காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டி சொல்லியிருக்கும் இந்த ‘ஜூலை காற்றில்’ பொருமையான படமாக இருந்தாலும், இனிமையான அனுபவமாகவே இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/4