Mar 17, 2022 06:25 PM

’கள்ளன்’ விமர்சனம்

15d357a8d65d577162405283d2658498.jpg

Casting : Karu Pazhaniyappan, Nikitha, Namo Narayanan, Maya, Soundararaja, Vela Ramamoorthy

Directed By : Chandra Thangaraj

Music By : K

Produced By : Etcetera Entertainment - V.Mathiyalagan

 

உலகின் முதல் தொழிலான வேட்டை தொழிலுக்கு அரசு தடை விதிக்க, அத்தொழிலை நம்பியிருந்த மக்கள் திடீரென்று தங்களது வாழ்வாதாரத்தை இழந்ததால் எப்படிப்பட்ட பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், என்பதை கமர்ஷியலாக சொல்லியிருப்பது தான் ‘கள்ளன்’.

 

கதைக்களம் 1985-களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. வேட்டை தொழில் செய்து வரும் நாயகன் கரு பழனியப்பனும் அவரது நண்பர்களும், அத்தொழிலுக்கு விதிக்கப்பட்ட தடையால் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். இதனால், சிறுசிறு குற்றங்களை செய்து சிறைக்கு செல்பவர்கள், சிறை தண்டனையால் திருந்தாமல், மேலும் மேலும் குற்றங்கள் செய்வதோடு, சமூகத்தால் வாழ்வாதாரத்திற்காக குற்றம் புரிந்தவர்கள், குற்றம் புரிவதையே வாழ்க்கையாக்கி கொள்ள, அதனால் அவர்களும், அவர்களுடைய வாழ்க்கையும் என்னவாகிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கரு பழனியப்பன், வேட்டை தொழில் செய்பவரின் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, நடிப்பிலும் குறை வைக்கவில்லை. அதே சமயம், உடல்மொழியில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் கூடுதல் கவனம் ஈர்த்திருப்பார்.

 

நாயகியாக நடித்திருக்கும் நிகிதாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

கரு பழனியப்பனின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. அதிலும், நமோ நாராயணன் மற்றும் செளந்தரராஜா இருவரும் படம் முழுவதும் வருவதோடு, நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்கள்.

 

படத்தின் இரண்டாம் நாயகியாக நடித்திருக்கும் மாயா, பெரிதும் கவர்கிறார். கண்கள் மூலமாகவே உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி வியக்க வைப்பவர், நடிப்பாலும் மிரட்டியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் சந்திரா தங்கராஜ், வேட்டை வாழ்வியலை நம் கண்முன் நிறுத்துகிறார். உலகின் முதல் தொழிலான வேட்டை தொழிலை நம்பியிருக்கும் சமூகத்தினரின் வாழ்வியல் மற்றும் அத்தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டவுடன் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றை நேர்த்தியான திரைக்கதை மூலம் விவரித்திருப்பதோடு, விறுவிறுப்பான காட்சிகள் மூலம் படத்தை வேகமாகவும் நகர்த்தி செல்கிறார்.

 

முதல் பாதியை விட இரண்டாம் பாதி படம் படு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்ந்தாலும், சில காட்சிகள் யூகிக்கும்படி இருப்பது படத்திற்கு சற்று பலவீனம் என்றாலும், நட்சத்திரங்களின் நடிப்பு அந்த பலவீனத்தை மறைத்துவிடுகிறது.

 

எம்.எஸ்.பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் ஆகியோரது ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, சிறையில் இருந்து தப்பிக்கும் காட்சி மற்றும் வேட்டை காட்சிகள் மூலம் பிரமிக்க வைக்கிறது.

 

கே இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், கதையின் பயணத்தையும் ரசிகர்களிடம் கச்சிதமாக கடத்துகிறது.

 

படம் வேகமாக நகர்வதற்கு ஏற்றபடி காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் எஸ்.பி.அகமதுவின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

வனப்பகுதியில் எடுக்கப்பட்ட காட்சிகள், ஒரு சமூகத்தின் வாழ்வியலை சொல்லிய விதம், நடிகர்களிடம் வேலை வாங்கியது போன்றவற்றில் இயக்குநர் சந்திரா தங்கராஜின் கடுமையான உழைப்பும், கூடுதல் மெனக்கெடுலும் தெரிகிறது.

 

ஒரு சமூகம் பற்றிய வாழ்வியலை மக்களுக்கு புரியும்படி அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சந்திரா, அதை நேர்மையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

 

மொத்தத்தில், ‘கள்ளன்’ வெல்வான்.

 

ரேட்டிங் 3.5/5